Wednesday, February 27, 2008

பிரபல எழுத்தாளர் சுஜாதா மரணம் !


தமிழ் வாசகர்களின் இதயக்கனியாக இருந்த எழுத்தாளர் சுஜாதா 27 பிப்ரவரி (புதன்க்கிழமை) உடல் நல குறைவாக மரணம் அடைந்தார்.

எஸ்.ரங்கராஜன் பெயர் கொண்ட சுஜாதா அவர்கள் சிறுகதைகள், பூதனம், நாடகம், வெள்ளித்திரையில் திரைக்கதை,வசனம் என்று தன் எழுத்துக்களால் முத்திரை பதித்தவர்.வளர்ந்து வரும் ரஜினியின் 'ரோபோ'வில் கூட சுஜாதா தான் வசனம் எழுதுவதாக இருந்தது.

'பாரத் எலக்ரானிக்ஸ்' (BEL) பொது மேலாளராகப் பணியாற்றிய போது மின்னணு வாக்கு எந்திரத்தை உருவாக்குவதில் முக்கிய பங்களித்தார். அந்த எந்திரம், இன்று இந்தியா முழுவதும் தேர்தல்களில் பயன்படுத்தப்படுகிறது.

சென்னை திருவல்லிக்கேணியில் 03.05.1935 அன்று பிறந்தார். தன் குழந்தை பருவத்தை திருச்சியில் இருக்கும் பாட்டியுடன் கழித்தார். சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிகையில் வெளிவந்தது. இவருடைய, "இடது ஓரத்தில்" என்ற சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா.கி.ரங்கராஜனுடன் குழப்பம் ஏற்பட்டதால் தன் மனைவி பெயரை, 'சுஜாதா', தன் புனைப்பெயராக வைத்துக்கொண்டார்.

சுஜாதா, நூற்றுக்கும் மேலான நாவல்களை எழுதியுள்ளார். அவற்றுள் சில: பதவிக்காக, ஆதலினால் காதல் செய்வீர், பிரிவோம் சந்திப்போம், அனிதாவின் காதல்கள், எப்போதும் பெண், என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, நிலா நிழல், ஆ, கரையெல்லாம் செண்பகப்பூ, யவனிகா, கொலையுதிர் காலம், வசந்த் வசந்த், ஆயிரத்தில் இருவர், பிரியா, நைலான் கயிறு, ஒரு நடுப்பகல் மரணம், மூன்று நிமிஷம் கணேஷ், காயத்ரி, கணேஷ் x வஸந்த், அப்ஸரா, மறுபடியும் கணேஷ், வீபரீதக் கோட்பாடுகள், அனிதா இளம் மனைவி, காந்தளூர் வசந்தகுமாரன் கதை, பாதி ராஜ்யம், 24 ரூபாய் தீவு, வசந்தகாலக் குற்றங்கள், வாய்மையே - சிலசமயம் - வெல்லும், கனவுத் தொழிற்சாலை, ரத்தம் ஒரே நிறம், மேகத்தைத் துரத்தினவன், நிர்வாண நகரம், வைரம், ஜன்னல் மலர், மேற்கே ஒரு குற்றம், உன்னைக் கண்ட நேரமெல்லாம், நில்லுங்கள் ராஜாவே, எதையும் ஒருமுறை, செப்டம்பர் பலி, ஹாஸ்டல் தினங்கள், ஒருத்தி நினைக்கையிலே, ஏறக்குறைய சொர்க்கம், என்றாவது ஒரு நாள், நில் கவனி தாக்கு.

"ஆயிரத்தில் இருவர்", "தீண்டும் இன்பம்", "குரு பிரசாத்தின் கடைசி தினம்" ஆகிய குறுநாவல்களையும் ஸ்ரீரங்கத்துக் கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்பையும் Dr. நரேந்திரநாத்தின் வினோத வழக்கு, கடவுள் வந்திருந்தார் ஆகிய நாடகங்களையும் கணையாழியின் கடைசி பக்கங்கள், கற்றதும் பெற்றதும் [பகுதி 1-5], கடவுள் இருக்கிறாரா, தலைமைச் செயலகம், எழுத்தும் வாழ்க்கையும், ஏன்? எதற்கு? எப்படி?, சுஜாதாட்ஸ் ஆகிய கட்டுரை நூல்களையும் படைத்துள்ளார்.

காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ, ப்ரியா, விக்ரம், வானம் வசப்படும் ஆகிய இவரின் கதைகள், திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன. இவருடைய கதைத் தலைப்பான பிரிவோம் சந்திப்போம், அண்மையில் ஒரு திரைப்படத்திற்குத் தலைப்பாயிற்று. இவரின் கதை ஒன்றை ஆனந்த தாண்டவம் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து வருகிறார்கள்.

ரோஜா, இந்தியன், ஆய்த எழுத்து, அந்நியன், பாய்ஸ், முதல்வன், விசில், கன்னத்தில் முத்தமிட்டால், சிவாஜி த பாஸ் ஆகிய படங்களில் வசனம் எழுதியுள்ளார்.
( நன்றி : சிஃபி.com )


இறந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் முன்னால் ஜனாதிபதி அப்தூல் கலாமும் ஒன்றாக படித்தவர்கள் என்பது குறிப்பிட தக்கது.

Tuesday, February 26, 2008

அன்புள்ள அப்பாவுக்கு...

'சோலை' தமிழினியன்
விலை.30. சோலை பதிப்பகம்.

தி.மு.க கட்சி எழுத்தாளராக இருந்தாலும் 'அம்மா'வை பற்றி எழுதாமல் யாரும் இருக்கமாட்டார்கள். நம்மை இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த அன்னையை பற்றி ஒவ்வொரு எழுத்தாளரும் எழுதியிருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலும் தந்தைக்கு முக்கியதுவம் கொடுத்து எழுதுவதில்லை. 'அன்புள்ள அப்பாவுக்கு...' நூலில் 68 கவிஞர்கள் தங்கள் அப்பாவை பற்றி எழுதிய கவிதையை 'சோலை' தமிழினியன் தொகுத்துள்ளார். அது என்ன 68 கவிஞர்களின் கவிதை....? 'சோலை' தமிழினியனின் தந்தை 68 ஆவது வயதில் காசு நோயில் இறந்தார். தன் தந்தைக்கு இந்த 'அன்புள்ள அப்பாவுக்கு...' கவிதை தொகுப்பு நூலை காணிக்கையாக்கிருக்கிறார்.

'அன்புள்ள அப்பாவுக்கு...' நூலில் இடம் பெற்ற 68 கவிதைகளில் நான் எழுதிய கவிதையும் ஒன்று. இந்த நூலில் நான் எழுதிய கவிதை..

அதிகாரம் செய்வதில் ஹிட்லர்
அன்பு காட்டுவதில் புத்தர்
இரு கலவை செய்த உத்தமர்
என் அப்பா என்பவர் !

விரும்பும் பொருளை
வாங்கி தரும் நிதி அமைச்சர் !
வருடம் முழுக்க பாடம்
சொல்லிக் கொடுக்கும் கல்வி அமைச்சர் !
பள்ளியில் விட்டு
செல்வதில் போக்கு வரத்து அமைச்சர் !
வீட்டு நிர்வாகத்தை அம்மாவிடம் கொடுக்கும்
எங்கள் வீட்டு முதல் அமைச்சர்
என் அப்பா என்பவர் !

நடைபயில கை கொடுத்தவர்
நாகரிகமாக பேச கற்று தந்தவர்
நன்மைகள் செய்ய சொல்லி தந்தவர்
நல்லவன் என்ற பெயர் எடுத்த
என் அப்பா என்பவர் !

லட்ச கணக்கில் லஞ்சம் வாங்கும் இடத்தில்
லட்சியத்தை லஞ்சமாக கொண்டவர்
நேர்மையில்லாதவர் மத்தியில்
பிழைக்க தெரியாதவர் பெயரெடுத்த
அரசாங்க ஊழியர்
என் அப்பா என்பவர் !

தலைமுறை இடைவேளையில் நட்பாய் !
கட்டளையை மீறும் போது கண்டிப்பாய் !
அறிவுரை வழங்கும் போது அன்பாய் !
ஆண் உருவில் இருக்கும் தாயாய்
இருக்கும் என் அன்புள்ள அப்பாவுக்கு....

இந்த அவசர உலகத்தில்
வார்த்தைகளுக்கு இடம் குறைந்த போதிலும்
இடமாறாத அப்பா அன்பு
என்றும் இருக்கும்!!


கவிதைகளுக்கு லைப்ரரி ஆர்டர் கிடைக்காமல் இருக்கும் சமயத்தில் கவிதை நூலை வெளியீடுவதை ஒவ்வொரு பதிப்பகமும் தவிர்த்து வருகிறது. ஆனால், தமிழியன் துணிச்சலாக கவிதை நூலை வெளியீட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் 'அன்புள்ள அப்பாவுக்கு...' இரண்டாம் பாகம் நூல் வெளியீட போவதாக 'சோலை' தமிழினியன் கூறியுள்ளார். அவர் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Monday, February 25, 2008

நான் வித்யா



'லிவிங் ஸ்மைல்' வித்யா
விலை.100. கிழக்கு பதிப்பகம்

எந்த எழுத்தாளருக்கும் கிடைக்காத பெருமை 'லிவிங் ஸ்மைல்' வித்யாவுக்கு உண்டு. தன் முதல் நூலிலையே மூன்று மொழியில் ( தமிழ், மலையாளம், ஆங்கிலம்) ஒரே சமயத்தில் வெளிவருவது என்பது எந்த எழுத்தாளருக்கும் கிடைக்காத பெருமை. தன் சொந்த வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களை சொல்லிருக்கிறார் வித்யா.

அப்தூல் கலாம், பெரியார், பீடல், சே போன்றவர்களை பற்றி வாழ்க்கை அனுபவங்களை படித்தால் பல செய்திகள் கிடைக்கும். யார் இந்த 'லிவிங் ஸ்மைல்' வித்யா..? இவர் வாழ்க்கை பற்றி தெரிந்துக் கொண்டு நமக்கு என்ன பயன் என்று நினைக்கலாம்?

அதற்கு பதில்... இந்த நூலை எழுதிய 'லிவிங் ஸ்மைல்' வித்யா - ஒரு திருநங்கை. தான் ஆண்ணின் உடலில் இருந்து கொண்டு பெண்ணுக்கு உரிய உணர்வுகளை உணர்ந்ததை சொல்லியிருக்கிறார். இந்த புத்தகம் ஆரம்பம் முதல் முடிவு வரை ஒரு நண்பனின் டைரி படிப்பது போன்ற உணர்வு வரும். காரணம், புத்தகம் முடிக்கும் போது நாமும் 'லிவிங் ஸ்மைல்' வித்யா நண்பனாகி உதவ வேண்டும் என்று தோன்றும்.

எம்.ஏ பட்டம் பெற்று புனேவில் பிச்சை எடுத்து திரிந்த அனுபவத்தை நமக்கு படம் பிடித்து காட்டியுள்ளார். தன் பெயர் மாற்றத்திற்காக இரண்டு வருடங்காக போராடியவர் இவர் ஒருவராக தான் இருக்க வேண்டும். இவரைப்போல பல திருநங்கைகளுக்கு அரசாங்கத்தால் முகவரி இல்லாமல் தான் இருக்கிறார்கள். பால்மாற்று அருவை சிகிச்சை பற்றி குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அந்த அருவை சிகிச்சையில் உயிர் கூட போக வாய்ப்புள்ளது என்று தெரிந்துக் கொண்டு அந்த சிகிச்சை செய்து கொண்டார். தன் நண்பர்கள் பரும் அறிவுரை கூறினாலும் தன் மனசாட்சிப்படி நடந்து கொள்ள விரும்புவதால் அவர் பால்மாற்று அருவை சிகிச்சை செய்துள்ளார். "நான் தம்பியில்ல.... உங்க தங்கச்சி. இப்போதாவது என்ன பொண்ணா பாருங்க... என்ன உங்க பொண்ணா ஏத்துக்கோங்க அப்பா" என்று தன் உறவினர்களிடம் கூறும் போது...நம் கண்கள் கலங்குகின்றன...!

கை, கால், கண் இழந்தால் பரிதாபமாக பார்க்கும் உலகம் திருநங்கைகளை மட்டும் ஏன் தவறாக பார்க்கிறது என்று அவர் கேட்கும் கேள்வி நியாயம் தான்.

'நான் வித்யா' - ஒரு புத்தகமல்ல... உணர்வுகள். எந்த ஆயுதமுமில்லாமல் பலர் திருநங்கையர்களின் சமுகத்தை வாட்டும் குமுறல்கள். இரத்தம் சிந்தாத வலி... இப்படி பல வர்ண வார்த்தைகள் சொல்லலாம். ஆனால் வித்யாவின் அனுபவங்களுக்கு இந்த வார்த்தைகள் மிகவும் குறைவு தான்.

எத்தனையோ பேர் இரண்டில் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் இருந்திருக்கிறார்கள். இரண்டு பக்கம் ஆதரவு தர முடியாமல் நடு நிலையாக சில அரசியல் கட்சிகளும் இருக்கிறது. இரண்டு பெண்களை யாரை தேர்வு செய்து காதலிப்பது என்று குழப்பத்தில் சில இளைஞர்கள் இருகிறார்கள். இவர்கள் போல திருநங்கைகள் .... ஆண்,பெண் என்று இரண்டும் சேர்ந்து நடுநிலையில் தான் வாழ்கிறார்கள். ஆனால், சமுகமும், அரசாங்கமும் இவர்களை ஏற்க வேண்டும் என்று ஒரு மனிதனாக விரும்புகிறேன்.

இவர்களை 'அவன்','அவள்'
என்று அழைக்க முடியாதது தான் !
'அது' என்று அழைக்காமல்...
'அவர்கள்' என்று அழைப்போம் !!

இவரின் வரைத்தளம் : http://livingsmile.blogspot.com

சடங்குகளின் கதை

( இந்து மதம் எங்கே போகிறது ? - பாகம் 2 )
- அக்னிஹோத்ரம் ராமானிஜ தாத்தாச்சாரியர் -
விலை.100. நக்கீரன் பதிப்பகம்

'அக்னிஹோத்ரம் ராமானிஜ தாத்தாச்சாரியர்' பெயரை கேட்டவுடன் எந்த பிரிவை சேர்ந்த மனிதர் என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை.'சடங்குகளின் கதை' என்றவுடன் சடங்குகள் பற்றிய மகத்துவத்தை சொல்ல போகிறார் என்று நீங்கள் எதிர்பார்த்தால்... நீங்கள் ஏமாற்றம் தான் அடைவீர்கள். இன்று பல சடங்குகள் அர்த்தம் புரியாமல் செய்கிறார்கள் என்று தாத்தாச்சாரியர் அவர்கள் நமக்கு விளக்குகிறார்.நூறு வயதை தாண்டியும் இவரின் எழுத்து இளமையாக தான் உள்ளது.

'விவாகம்' என்றால் திருமணம் என்று தானே இதுவரை நாம் எண்ணியிருந்தோம். ஆனால், 'விவாகம்' என்றால் பெண்ணை இழுத்துக் கொண்டு போவது என்று சொல்கிறார். இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்தால் இனிமேல் யாரும் திருமண அழைப்பிதழில் யாரும் 'விவாகம்' என்ற வார்த்தையே போடமாட்டார்கள்.

அருங்கதி எப்படிபட்ட கற்புகரசி என்று அவர் கூறும் கதை மிகவும் அருமை. மணபந்தலில் மாப்பிள்ளை அருமையான மனைவியை தனக்கு கொடுத்ததற்கு பஞ்ச பூதங்களுக்கு நன்றி சொல்வது போல் வாத்தியார் சொல்ல சொல்வார். அதுவும் பெண்ணை பெற்ற தந்தை முன்... இதை சொல்லும் போது நமக்கே சிரிப்பு வரும்.

மந்திரங்கள், ஸ்லோகங்கள் இப்போது வாத்தியார்களுக்கே அர்தம் தெரியாமல் சொல்கிறார்கள் என்று தாத்தாச்சாரியர் அவர்கள் சொல்கிறார் .

தாத்தாச்சாரியர் - வேதங்களை எல்லாம் கற்ற மனிதர். இவரை தவிர யாராலும் வேதங்களில் உள்ள தவறுகளை சுட்டி காட்ட முடியாது. பிரமணராக இருந்தாலும் அவர் எழுத்துக்கள் பகுத்தறிவு சிந்தனை கொண்டதாக உள்ளது.

இவர் இன்றும் nakheeran.com இணையத்தளத்தில் எழுதிக் கொண்டு இருக்கிறார்.

Friday, February 15, 2008

அசரீரி

சுப்பிரமனியன் சந்திரன்
விலை. 75. சாந்தி பதிப்பகம்

'அசரீரி' பெயரை கேட்டதும் எதோ ஆன்மீக நூலோ என்று எடுத்து பார்த்தேன். நூலில் உள்ள 24 அத்தியாயங்களும் முழுக்க வரலாற்று சிறுகதைகள். வரலாற்றில் நடந்த மிக முக்கிய நிகழ்வுகளை சிறு கதைகள் வடிவில் கொடுத்திருக்கிறார் நூலின் ஆசிரியர். பொழுது போக்குகாக சிறுகதை படிப்பவர்கள் மட்டுமில்லாமல் சரித்திர விரும்பியர்கள் இந்த சிறுகதையை படித்தால் பல தகவல்கள் கிடைக்கும்.

இந்த நூலில் ஹிட்லர் பற்றிய மூன்று சிறுகதைகளும், அணுகுண்டு தாக்குதல் பற்றிய சிறுகதையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். ஜப்பான் மீது அணுகுண்டு வீசும் டிப்பெட்ஸ் எப்படி உணர்ந்தார் என்று 'கலான்' சிறுகதையில் சொல்லியிருக்கிறார். இன்று, பல அமெரிக்காவின் பொருளாதர வளர்ச்சியை பற்றி வாய்யை பிளப்பவர்கள் இரண்டாம் உலகப் போர் முன்பு பல அமெரிக்கர்கள் வேளையில்லாமல் திண்டாடியதை இன்னொரு சிறுகதையில் சொல்லியிருக்கிறார்.

சிறுகதையில் கற்பனை கலந்து சொல்பவர்கள் மத்தியில் சரித்திரத்தை சிறுகதையை மாற்றி அமைத்ததற்கு பாராடியாக வேண்டும்.

 
Website Hit Counter
வந்தவர்கள்