Monday, August 25, 2008

என் நாடு, என் மக்கள், உன் ரத்தம் !

ஜி.எஸ்.எஸ், பக்கங்கள் - 120
தங்கதாமரை பதிப்பகம்,
அடையாறு, சென்னை - 20.

கன்னிமரா நூலகத்தில் எடுத்த நூல்களில் முதலில் இருந்து இறுதி வரைக்கும் படித்த நூல் இது தான் (பெரும்பாலான நூல்கள் பாதியிலேயே அலுப்பு தட்டிவிடுகிறது).’கல்கி’யில் காஷ்மீர் குறித்து குறுந்தொடராக எழுதியதை மேலும் சில பகுதிகளை சேர்த்து நூலாக எழுதியுள்ளார் ஜி.எஸ்.எஸ். அவர்கள். இதை படிக்கும் போது காஷ்மீர் பற்றி தெரியாத உண்மைகளையும், தற்போது உள்ள நிலவரங்களையும் மிக சிறப்பாக எடுத்து காட்டியுள்ளார்.

இந்த குறிப்பிட்டு சொல்ல வேண்டிய வரிகள்...

1.'காஸ்யபுரம்; என்பதை தான் காலப்போக்கில் 'காஷ்மீர்; என்று மாறியதாக கூறுகிறார். சமஸ்கிருதத்தில் 'காஷ்மீர்' என்பதன் அர்த்தம் நீரை வெளியேற்றுதல் போன்ற துணுக்கு செய்திகள் சுவையாக உள்ளன.

2.ஜம்மு காஷ்மீர் சட்டங்களை பற்றி சொல்லும் போது அதிர்ச்சியாகவும், வெடிக்கையாகவும் உள்ளது. இந்தியாவை பொருத்தவரையில் 'காஷ்மீர்' ஒரு ஸ்பெஷல் மாநிலம். இந்திய தேசிய கோடியை எரித்தால் கூட தண்டனை இல்லையாம். காரணம், அவர்கள் சட்டம் தெளிவாக கூறிப்பிடவில்லை.

3.பல விஷங்களில் தனிச்சையாக முடிவு எடுக்க காஷ்மீர் அரசு உரிமை உண்டு. அங்கு வியாபாரம் செய்பவர்களுக்கு ஐந்து வருடத்திற்கு வரி சலுகை உண்டு. வெளிமாநிலங்களில் இருப்பவர்கள் இங்கு நிலம் வாங்க முடியாது. உயிருக்கு உத்திரவாதம் இல்லாத ஊரில் என்ன சலுகை கொடுத்தாலும் யார் தான் வருவார்கள்.

4.600 கோடி ரூபாய் வருமானம் வரும் காஷ்மீரில் 7000 கோடி நிதியை இந்தியா காஷ்மீருக்கு அளித்து வருகிறது. இந்த பணமும் அவர்களுக்கு போதவில்லை என்பது தான் வருத்தம்.

5.வாரிசு அரசியல் கூடாது என்று போராடிய ஷேக் அப்துல்லாவின் மகன் ஃபரு அப்துல்லாவும், பேரன் உமர் அப்துல்லா காஷ்மீர் அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்று சுச்சகமாக எழுதியுள்ளார். (நேரு பரம்பரைக்கு அடுத்து அப்துல்லாவின் பரம்பரை வாரிசு அரசியலில் இரண்டாவது இடம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.)

6.லால் பகதூர் சாஸ்திரியின் மர்மான மரணத்தை இந்திய அமைச்சர்கள் அலட்சிய படுத்தியதை ஒரு செய்தியாக கூறியுள்ளார். இன்னும் கொஞ்சம் விளக்கம் கொடுத்திருக்கலாம்.

இரத்தம் நிறைந்த வரலாறு படைத்த பூமியை பற்றி குறைந்த இரத்ததில் எழுதியிருக்கிறார்.

இந்த எனக்கு ரொம்பவும் பிடித்த வரி

"காஷ்மீர் -இந்தியாவின் தலை மாநிலமட்டுமல்ல... தலைவலி மாநிலம் அது தான்."

Tuesday, August 19, 2008

நடை பாதை

குகன்,
விலை -ரூ40.00,பக்கம்-112
வனிதா பதிப்பகம்,
11, நானா தெரு,
பாண்டி பஜார்,
தி.நகர்,
சென்னை-600 017.
தொலைபேசி: 044-42070663.நூலாசிரியர் பல்வேறு தமிழ் இணைய தளங்களில் எழுதிய இந்த சிறுகதைகள் அச்சின் மூலம் நூலாக்கப்பட்டு இருக்கிறது. நூலாசிரியர் கணினித் துறையில் மென்பொருள் பொறியாளராக இருப்பதால் இந்த நூலில் இருக்கும் பல சிறுகதைகள் கணினித்துறையில் இருப்பவர்களையும் அவர்களுக்கு வரும் பிரச்சனைகளையும் சார்ந்து இருக்கிறது.

இந்த நூலில் இருக்கும் 24 சிறுகதைகளில் பொதுவாக, கணிப்பொறி யுகத்தில் வளர்ந்து வரும் இன்றைய சமுதாயத்தில் அதிகமானவர்களிடம் இருக்கும் எண்ணங்களான வெளி நாடுகளுக்குச் சென்று அதிகமாகப் பணம் சம்பாதித்தல், அதனால் வரும் அடுத்த நாட்டு ஆடம்பர மோகத்தில் தமிழ்ப் பண்பாடுகள் சிதைக்கப்படுதல், வெளிநாட்டில் வசிக்கும் தங்கள் பிள்ளைகளால், இங்கே இருந்து வரும் வயது முதிர்ந்த பெற்றோர்களுக்கு வரும் கடைசி கால எதிர்பார்ப்புகள் அவை கிடைக்காமல் போவதால் வரும் ஏமாற்றங்கள் போன்றவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சில சிறுகதைகளில் தற்போதைய சமூகத்தில் இருக்கும் சில குறைபாடுகள் அதனால் வரும் விளைவுகள் என்று இன்றைய சமுதாயத்திற்குத் தேவையான பல விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.

சென்னை வனிதா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் குகன் எழுதியிருக்கும் இந்த நடைபாதை (சிறுகதைகள்) நூலில் சமூக மேம்பாட்டிற்கான பல கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டு இருக்கின்றன. ஆனால் இந்த வலியுறுத்தல்கள் சில இடங்களில் வலிமையில்லாமல் பலவீனமாய்ச் சொல்லப்பட்டுள்ளது. மேலும் சில சிறுகதைகளில் இடையிடையே சிறுகதைக்கான எழுத்து நடையிலிருந்து விலகி நாடக வடிவிலான எழுத்து நடைக்கு மாற்றமாகி பின்பு திரும்ப வருவதாக இருக்கிறது. இது போன்ற ஒரு சில குறைகளை மட்டும் விலக்கி விட்டால் இந்த நடைபாதை கணினித் துறையிலிருப்பவர்களுக்கு மட்டுமின்றி இந்த சமுதாயத்திற்கும் அதன் பண்பாடுகளுக்கும் வழிகாட்டும் சரியான பாதையாக இருக்கும்.

நன்றி : முத்துகமலம்.காம்

Monday, August 4, 2008

எனது கீதைகுகன்.
விலை -ரூ40.00. பக்கம்-112
நாகரெத்னா பதிப்பகம்.
சென்னை.

நான் எழுதிய நூலை பற்றி நானே சொன்னால் எப்படி...? முத்துகமலம் இணையத்தளத்தில் புத்தக பார்வை பகுதியில் இடம் பெற்றுள்ளத்தை இந்த வலைப்பதவில் ஏற்றியுள்ளேன்.

( நூல் பற்றிய சிறு குறிப்பு : மே 26,2006 அன்று "எந்து கீதை" நூல் வெளியீடப்பட்டது. இந்த நூலை நீதியரசர். வேணுகோபால் அவர்கள் வெளியீட, முதல் பிரதியை 'கலைமாமணி' டி.கே.ஸ்.கலைவாணன் அவர்கள் பெற்றுக் கொண்டார். மறைந்த உவமை கவிஞர் சுரதா அவர்கள் இறுதியாக அணித்துரை எழுதியது இந்த "எனது கீதை" நூலுக்கு தான்.)

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இடம் பெறும் கல்வி, முயற்சி, வேலை, உழைப்பு, பணம், அனுபவம், காதல், திருமணம், குழந்தை, நட்பு, காலம், குடும்பம், ஒற்றுமை, வெற்றி தோல்வி, நம்பிக்கை, நகைச்சுவை, மகிழ்ச்சி, கடவுள் என்பது போன்ற 25 தலைப்புகள். இந்தத் தலைப்புகள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவசியமான ஒன்றாக இருந்தாலும் இவை ஒவ்வொருவரிடமும் வேறுபட்டுப் போயிருப்பதற்கான காரணம் என்னவாயிருக்கும் என்கிற எண்ணத்தில் நூலாசிரியர் சிந்திக்க முற்பட்டிருக்கிறார். அவருக்கு அவர் படித்த புத்தகங்கள், கிடைத்த நட்பு போன்றவை ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறது. அந்த விளக்கங்களை, அனுபவங்களை நூலாக்க முயற்சித்து வெற்றியும் கண்டிருக்கிறார்.

ஒவ்வொரு கட்டுரைக்கும் அவருடைய கருத்தைத் தெரிவிக்கும் நூலாசிரியர் அதற்கு ஆதாரமாக தான் படித்த அல்லது கேட்ட குட்டிக்கதைகள் மற்றும் தனக்கு மின்னஞ்சலில் வந்த கதைகளை இடையிடையே சொல்லி படிப்பதற்குச் சுவையாக்கி இருக்கிறார். இந்நூலில்,

"வேலை" எனும் தலைப்பின் கீழ் வரும் "தனக்கு பெயர் கிடைக்கும் என்பதற்காக செய்ய முடியாத வேலையை எல்லாம் ஒத்துக் கொண்டு இறுதியில் எந்த வேலையும் செய்ய முடியாமல் ஓய்ந்து பொகும் அளவிற்கு உழைக்கக் கூடாது."

"குடும்பம்" என்கிற தலைப்பில் "நாம் செய்யும் வேலை குடும்பத்தை உயர்த்தும்படியாக இருக்க வேண்டுமே தவிர, குடும்பத்தை ஒதுக்கும்படியாக இருக்கக் கூடாது"

"முயற்சி" எனும் தலைப்பில் இடம் பெற்றுள்ள "தோற்பவர்கள் பாதுகாப்பைத் தேடுகிறார்கள். வெற்றி பெறுபவர்கள் வாய்ப்பைத் தேடுவார்கள். தோல்வி என்பது குற்றமல்ல, நம் முயற்சிகளில் உள்ள பிழை."

"ஒற்றுமை" எனும் தலைப்பில் இடம்பெற்றிருக்கும் "என்னதான் தனி மனிதன் சிந்தனை, முயற்சி, தன்னம்பிக்கை என்று சொன்னாலும், சில இடங்களில் சாதித்து வெற்றிகளைக் குவிப்பது ஒற்றுமையான முயற்சிதான்."

"நம்பிக்கை" எனும் தலைப்பில் இருக்கும் "தன்னம்பிக்கை வந்தவுடன் கடவுள் மீது நம்பிக்கை குறைந்து விட்டது. எந்தப் பிரச்சனையானாலும் நானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். கடவுளிடம் சென்று முறையிடுவதைக் குறைத்து விட்டேன்."

-என்கிற வாசகங்கள் நன்றாக இருக்கிறது. இந்த வாசகங்கள் பலருக்கும் பொருத்தமானதாக இருக்கலாம்.

குகன் எழுதியிருக்கும் இந்த "எனது கீதை" நூலை வெளியிட்டுள்ள சென்னை, நாகரெத்னா பதிப்பகம் ஒவ்வொரு தலைப்பையும் தனிப்பக்கத்தில் துவக்காமல் தொடர்ச்சியாகக் கொண்டு சென்றிருப்பதும், பல பக்கங்களில் அதிகமான அளவில் இடம் பெற்றிருக்கும் எழுத்துப் பிழைகளைக் கவனிக்காமல் விட்டிருப்பதும் இந்நூலின் குறைகளாகத் தெரிந்தாலும், நாம் தெரிந்து கொள்ள நிறைய தகவல்களும் இருக்கின்றன.

நன்றி : முத்துகமலம்.காம்

 
Website Hit Counter
வந்தவர்கள்