Friday, November 28, 2008

HIV : கொல்லப் பிறந்த கொடுங்கோலன்

நாகூர் ரூமி.

எய்ட்ஸ்க்கு இதுவரை மருந்து கண்டு பிடிக்கவில்லை என்பது உலகம் அறிந்த உண்மை.அதை பற்றிய விழிப்புணர்வு வர நமது அரசாங்கம் சுவரொட்டியிலும், தொலைக்காட்சியிலும், வானோலியிலும் பிரசாரம் செய்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இருந்தும், எதுவுமே நமக்கு பலன் அளிக்கவில்லை. இந்தியாவில் அதிக எய்ட்ஸ் நோயாளிகள் இருக்கும் மாநிலம் தமிழ் நாடு தான் (இந்த புத்தகத்தில் கிடைத்த தகவல்). பாலியல் தொழில் சட்டமாக கொண்ட மும்பை மாநகரம் இருக்கும் மஹாராஷ்டா மாநிலம் கூட இரண்டாவது இடத்தில் தான் இருக்கிறது. காண்டம் இருந்தால் கூட, தவறான உடல் உறவால் எய்ட்ஸ் கண்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை தான் காட்டுகிறது.தினமும் எதாவது ஒரு தொலைக்காட்சியில் சொல்லும் விஷயமாக எய்ட்ஸ் இருக்க, புதிதாக இந்த நூலில் என்ன இருக்க போகிறது என்று நினைத்தேன். ஆனால், படித்து முடித்த பிறகு எய்ட்ஸ் பற்றி நமக்கு தெரியாத பல விஷயங்கள் இருப்பதை தெரிந்துக் கொண்டேன். இந்த நூல் ஒவ்வொரு இந்திய குடிமகனும், போதை ஊசி மகன்களும் படிக்க வேண்டும்.

இந்த நூலை நான் சீக்கிரமாக படித்து முடித்ததற்கு மழைக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். மழையால் எனக்கு கிடைத்த விடுமுறையை இந்த புத்தகத்தை படித்து முடித்து விட்டேன். நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை போன்ற நூல்களை படித்து பழக்கப்பட்ட எனக்கு உடல் நோய் சம்மந்தமாக நான் படிக்கும் முதல் நூல் இது தான்.

நோய் சம்மந்தமாக அறிகுறிகள், அறிவுறைகள் என்று மட்டும் சொல்லாமல் முதல் மூன்று அத்தியாயத்தில் எய்ட்ஸ் நோய் கண்டுபிடித்த சிறு வரலாற்றையும் நாகூர் ரூமி அவர்கள் எழுதியுள்ளார்.

1981 ஆம் ஆண்டு, சாதாரண ‘நிமோனியா’ நோய் என்று தான் எய்ட்ஸ்யை நினைத்தார்கள் தொடர்ந்து மருந்து சாப்பிடுபவர்களுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தி (இம்யூனிட்டி) குறைந்து போகும் நபர்களுக்கு தான் ‘நிமோனியா’ தாக்கும். ஆனால், உடல் ஆரோக்கியமாக வைத்திருப்பவர்களும் நிமோனியாவல் அவதை பட்டனர். பல மருத்துவர்களுக்கு இந்த நிமோனியா தலைவலியாக இருந்தது. அதன் பிறகு எல்லோருக்கும் ஒரு உண்மை தெரிந்தது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே ஓரினச்சேர்க்கையாளர்கள். ( பதிவர்களுக்கு விளக்க தேவையில்லை என்று நினைக்கிறேன்). அதன் பிறகு ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் என்ற இயற்கை பாலுணர்வுகள் கொண்டவர்களை பாதித்ததை கண்டு பிடித்தனர். இது 'செக்ஸ்' சம்மந்தப்பட்ட நோயாகாத் தான் இருக்க வேண்டும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர்.

நான்கு ஆண்டுகளாக இந்த வியாதிக்கு பெயர் வைக்காமல் இருந்தனர். 1986 ஆம் ஆண்டு, ஒரு நல்ல கரி நாளில், பல பேர் மரணத்திற்கு பிறகு 'இன்டெர்நேஷனல் கமிட்டி ஃபார் நாமன்கிளேச்சர்' ஒரு தீர்மானத்துக்கு வந்தனர். மனிதனை தாக்கும் இந்த வைரஸ்க்கு 'எச்.ஐ.வி' (Human Immunodeficiency Virus - HIV) என பெயர் வைத்தனர். மனித உடலில் இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பலவீனப்படுத்துவதால் 'எய்ட்ஸ்' (AIDS - Acquired Immune Deficiency Syndrome) என்று பெயர் வைத்தனர்.

இப்புத்தகத்தில் 'AIDS’ பற்றி நமக்கு தெரியாத பல தகவல்கள் உள்ளன. உதாரணத்திற்கு, HIV, HIV II என்று இரண்டு வகையான வைரஸ்கள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது. இரண்டு வகைகளுமே ஓர் ஆரோக்கியமான உடலில் 'இம்யூனிட்டி'யைப் பாதிப்பதாகவும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அடையாளங்களைத் தோற்றுவிப்பதாக இருந்தாலும், இவை இரண்டிற்கும் முக்கியமான சில வேறுபாடுகள் உள்ளன.

எய்ட்ஸ் உருவான காரணங்களை நாம் பெரிதாக நம்புவது மூன்று காரணங்கள். தனியாக வாழ்ந்த சில குழுக்களிடம் ஏற்ப்பட்ட நோய் இது என்றும், குரங்கில் இருந்து மனிதனுக்குப் பரவியது என்றும், அமெரிக்க ராணுவத்தினரின் கிருமிப் போர் நடவடிக்கை காரணம் என்று பல கருத்துக்கள் உள்ளது. ஆனால், இதில் எந்த காரணங்களும் நிருப்பிக்கப்படவில்லை என்பதை தெளிவாக இந்த நூல் உணர்த்துகிறது.

எய்ட்ஸை தடுப்பு ஊசி மூலம் ஏன் தடுக்க முடியவில்லை என்ற விளக்கம் இந்த நூலில் உண்டு. 'HIV' மனிதன் உடலில் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. தனது தன்மையையும், உருவத்தையும் மாற்றிக் கொண்டே இருக்கும். நம் உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தி 'HIV' வைரஸை கண்டு பிடித்து அழிக்க முடியாது.அதனால், 'வேக்ஸினேஷன்' (Vaccination) போன்ற தடுப்புசி 'HIV'யை கட்டுப்படுத்த முடியாது.


'ஹெச்.ஐ.வியும் சந்தர்ப்பவாத நோய்களும்' என்ற அத்தியாயத்தை படிக்கும் போது 'கிரி' படத்தில் வரும் வடிவேலு நகைச்சுவை ஒன்று நியாபகம் வந்தது. 'மஹாநதி'சங்கர் அவர்கள் போன் போட்டு வடிவேலுவை அடிக்க தன் நண்பர்களை வர சொல்லுவார். ஆட்டோவில் ஏற்றி ஒவ்வொரு சந்தில் அடி வாங்கியதை வடிவேலு விளக்குவார். எய்ட்ஸ் நோயும் அப்படி தான். ஒருவனை எய்ட்ஸ் தாக்கி விட்டால் சாதாரண காய்ச்சல் கூட அவன் உடலில் ரூம் போட்டு தங்கிவிடும். டி.பி, கேன்ஸர் என்று ஒவ்வொரு நோய் வந்து தாக்கிக் கொண்டு இருக்கும். கல்லாய் இருந்த உடம்பு துரும்பாய் இலைத்து இறப்பது தான் இந்த நோயின் உச்சக்கட்டம். இதை பற்றி படிக்கும் போதே கொடுமையாக இருக்கிறது. இந்த நோயை அனுபவிப்பவர்களுக்கு எப்படி இருக்கும் என்று நினைத்து பார்க்கவே முடியவில்லை.

'ஆப்பிராக்காவில் எய்ட்ஸ்' என்ற அத்தியாயத்தில் ஆப்பிராக்காவில் மட்டும் ஏன் இவ்வளவு எய்ட்ஸ் நோயாளிகள் இருக்கிறார்கள் என்பதை கூறப்படுகிறது. கிட்ட தட்ட எண்பது லட்சம் மக்கள் வரை ஆப்பிராக்கா கண்டத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிலும் குழந்தைகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருப்பதை சொல்லும் போது அப்பாவிகளை கூட இந்த எய்ட்ஸ் விட்டு வைக்கவில்லை என்பதை புரியவைக்கிறது.


குறை இல்லாத மனிதனே இல்லாத போது ஒரு நூல் மட்டும் எப்படி குறையில்லாமல் இருக்கும். எய்ட்ஸ் நோய் உடலில் வந்ததற்கு அடையாளமாக எடை இழப்பு, தொடர்ந்து வயிற்றுப்போக்கு, இருமல், தொண்டை அரிப்பு என்று நன்றாக தான் விளக்குகிறது. இதே சமயத்தில் மழைக்காலத்தில் அவ்வப்போது தொண்டை வலி வருவதால் படிப்பவர்களுக்கு கண்டிப்பாக பயம் வரும் என்று நினைக்கிறேன். அவ்வளவு தத்துரூபமாக எழுதியிருந்தார். எனக்கு இந்த பயம் வந்ததை ஒப்புக்கொள்கிறேன். ( நான் தவறு செய்யும் ஆள் இல்லைங்க. வருஷத்துக்கு ஒரு தடவ இரத்த தானம் பண்ணுவேன். ஒரு சின்ன பயம் மனசுல இருக்க தானே செய்யுது). இந்திய மூலிகையில் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து இருப்பதாக ஒரு கருத்து நிலவி வருகிறது. அதை பற்றி இன்னும் விரிவாக விளக்கியிருக்கலாம்.

இந்த புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில் எய்ட்ஸ் நோய் பற்றிய செய்திகளை தமிழ் நாட்டில் உள்ள அலோசனை மற்றும் பரிசோதனை மையங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

'இஸ்லாம்', 'இலியட்' (தமிழில்) போன்ற நூல்களை எழுதிய நாகூர் ரூமி அவர்கள் இந்த நூலை எழுதியுள்ளார். ஒரு மருத்துவர் கூட இந்த அளவிற்கு தெளிவாக விளக்க முடியாது என்று நினைக்கிறேன். அவ்வளவு எளிமையாக பாமரணுக்கு புரியும் வகையில் நூல் படிக்கும் வாசகர்களுக்கு புரிய வைத்திருக்கிறார். (கல்லூரி பேராசிரியர் என்பதால் எளிமையாக புரியவைத்தார் என்று நினைக்கிறேன்.) இந்த நூலை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட்வர்களுக்கு சமர்ப்பித்திருப்பதை அவருடைய நல்ல எண்ணத்தை காட்டுகிறது.

தீவிரவாதிகளின் இயக்கம், வாழ்க்கை வரலாறு போன்ற நூல்களை வெளியிட்டுள்ள நீயூ ஹாரிசன் மீடியா தன்னுடைய இன்னொரு பிரிவான 'நலம்' வெளியீடு மூலம் இந்த நூலை வெளியிட்டுள்ளார்கள். இவ்வளவு நல்ல எழுத்தாளர்கள் வைத்துக் கொண்டு ஏன் பத்திரிக்கை துறையில் கால் பதிக்கவில்லை என்று தெரியவில்லை. அப்படி அவர்கள் பத்திரிக்கை துறையில் வந்தால் பதிவர்களின் ஆதரவு அவர்களுக்கு கண்டிப்பாக இருக்கும்.

'நலம் வெளியீடு' க்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து முன் அட்டையை இரண்டாவது பதிப்பில் மாற்றி விடுங்கள். 'எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை' பார்க்கும் போது மெல்லிய மனம் படைத்தவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. மரண தேதியோடு பிறக்கும் குழந்தைகளை பார்க்கும் சக்தி மருத்துவர்களுக்கு மட்டுமே உள்ளது. மற்றப்படி உங்கள் புத்தக சேவை எங்கள் போல் வாசகர்களுக்கு என்றும் தேவை.

இதற்கு மேல் இந்த நூலை பற்றியும், ஆசிரியர் பற்றியும் அதிகம் விமர்சிக்க விரும்பவில்லை. அதிகம் விமர்சித்தால் வாங்கி படிக்கிற எண்ணம் போய்விடும். என்னால் முடிந்த வரை ட்ரெய்லர் ஓட்டிவிட்டேன். முழு படத்தை மன்னிக்கவும் புத்தகத்தை வாங்கி தெரிந்துக் கொள்ளுங்கள்.

மேலும் அந்த புத்தகத்தை பற்றிய விபரங்களுக்கு...

http://nhm.in/printedbook/209/HIV%20-%20Kollap%20Pirandha%20Kodungolan

விலை.50.
பக்கங்கள் : 88
நீயூ ஹாரிசன் மீடியா,
எண். 33/15, இரண்டாவது மேல் தளம்,
எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை, சென்னை - 18

Monday, November 24, 2008

கோர்ட் மார்ஷியல்

பி.எஸ்.ஆர்.ராவ்

இராணுவத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிந்த ‘ராவ்’ அவர்கள் இந்திய இராணுவத்தை மையமாகக் கொண்டு, உணர்வு ததும்பும் எழுதிய புதினம் இது. பாகிஸ்தான் தீவிரவாதிகள், யுத்த களம் என்று அதை பற்றி அதிகம் சொல்லாமல் இராணுவ வீரனின் உணர்வுகளை நமக்கு உணர்த்தியிருக்கிறார். மனைவி, குழந்தை என்று பிரிந்து வாடும் இராணுவ வீரன் மனம் எப்படி பாடுப்படும், அவன் மன நிலை எப்படி இருக்கும் என்று மிக அழகாக கூறியிருக்கிறார். அதே சமயம் இராணுவத்திலும் ஊழல் நடக்கும் என்பதை இந்த புதினம் மூலம் சொல்லியிருக்கிறார். கர்னல் சோப்ரா, அவருக்கு ஜால்ரா அடிக்கும் கேப்டன் டேவிட் கதாப்பரத்திரத்தின் மூலம் இராணுவத்தில் இது போன்ற கருப்பு பூனைகள் இருப்பதை சுட்டி காட்டியுள்ளார். கர்னல் சோப்ரா தன் சுயநலத்துக்காக தன் சிப்பாய்களை பன்றியை கழுவ சொல்வதும், தன் குடும்பத்திற்காக வீடு கட்ட சொல்வதும் அவர்களை அடிமைகள் போல் நடத்துகிறார். சிப்பாய்களுக்கு சிறை தண்டனை கொடுக்க உரிமை கர்னலுக்கு இருப்பதால் அவர்களும் பயந்து வேலை செய்கிறார்கள். தங்கள் வருமானத்தை குடும்பத்திற்கு அனுப்ப எவ்வித தடங்களும் வர கூடாது என்பதில் ஒரு சில சிப்பாய்கள் தன்மானத்தை மறந்து கர்னல் சோப்ராவுக்கு வேலை செய்கிறார்கள்.

"கோர்ட் மார்ஷியல்" நாவல் - விரு விருப்போ, திருப்பங்களோ கொண்ட நாவல் இல்லை. இராணுவ வீரரின் உணர்வுகளின் பிரதிபலிப்பு. மேஜர் சங்கர் என்பவர் தன் உயர் அதிகாரி கர்னல் சித்தாத்தின் மகள் வினிதாவை கற்பழித்து விடுகிறார். வினிதா மேஜர் சங்கருக்கு எதிராக இராணுவ கோர்ட்டில் வழக்கு போடுகிறாள். மேஜர் சங்கர் எதிராக ‘கோர்ட் மார்ஷியல்’ விசாரணை நடக்கிறது. அந்த சமயத்தில் சங்கர் எழுதிய டைரியை மேஜர் பிள்ளை என்பவர் வினிதாவிடம் கொடுக்கிறார். அடுத்த நாள் கோர்ட் மார்ஷியலில் சங்கருக்கு எதிராக சாட்சி அளிக்க வேண்டிய வினிதா, சங்கரின் டைரியை படிக்கிறாள். அந்த டைரியை படித்த பிறகு என்ன முடிவு எடுக்கிறாள் ? கோர்ட் மார்ஷியலில் என்ன வாக்குமூலம் கொடுத்தாள் ? என்பது தான் இறுதி அத்தியாயம்.

இந்த நாவலில் எழுபத்தியைந்து சதவீதம் முழுக்க சங்கரின் டைரி தான். தன் இராணுவ வாழ்க்கையை பற்றியும், அவன் சந்தித்த நபர்கள் பற்றியும், ஒரு பெண்ணை கற்பழிக்கும் அழவிற்கு தன்னை எப்படி மிருகமாக மாற்றியதை பற்றியும் விளக்கியிருக்கிறார். தன் உயர் அதிகாரி கர்னல் சோப்ரா தன்னை கேவலமாக நடத்துவதில் மன வேதனை உள்ளாகிறார். ஒரு முறை சிப்பாய் கோராலால் என்பவர் தன் இரு உயர் அதிகாரிகளை கொன்று விடுகிறான். கர்னல் சோப்ரா சங்கரை அந்த கொலை விசாரணை நடத்தி, பதிவு செய்த 'சம்மரி ஆப் எவிடன்ஸ்' ரிப்போர்டை கொடுக்க சொல்கிறார்.

சிப்பாய் கோராலால் தன் குழந்தை பிறந்ததற்கு விடுமுறை கேட்டுயிருக்கிறார். ஆனால், கிடைக்கவில்லை. குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்று விடுமுறை கேட்டார், அதற்கும் கிடக்கவில்லை. இறுதியில், தன் குழந்தை இறந்ததற்கு விடுமுறை கேட்டும் கிடைக்காத போது மனதளவில் பாதிக்கப்படுகிறார். அந்த சமயத்தில் கோராலாலில் உயர் அதிகாரி அவனை வேலையை செய்ய கட்டாயப்படுத்த, அவரின் மனவேதனை வெறியாக மாறி அவரை கொலை செய்து விடுகிறார். கோராலால் ஆதரவாக 'சம்மரி ஆப் எவிடன்ஸ்' ரிப்போர்டை சங்கர் தயார் செய்த போது பாராட்டு பதிலாக சோப்ரா அவரை திட்டுகிறார். இதனால், சங்கர் மேலும் மனவேதனை அடைகிறார்.

யுத்தம் இராணுவ வீரனை உடல் அளவில் மட்டுமல்ல மனதளவிலும் பாதிக்கிறது என்பதை இந்த நாவல் உணர்த்துகிறது.

யுத்ததில் தான் இறக்கப் போகிறோம் என்ற மனநிலையில் இருந்த போது தான் வினிதாவை கற்பழித்திருகிறார். ஐந்து வருடங்களாக அடக்கி வைத்த ஆண்மை உணர்ச்சியை வினிதாவிடம் தீர்த்துக் கொண்டார். தான் இறக்கும் முன் ஒரு பெண்ணையாவது அனுபவிக்க வேண்டும் என்ற மனநிலை இருந்ததாக எழுதியிருந்தான். சங்கரை காவலில் வைத்திருக்கும் மேஜர் "எத்தனையோ இராணுவ வீரர்கள் பெண்களை கற்பழித்த பிறகு அவர்களை கொலை செய்து விடுகிறார்கள். நீங்கள் வினிதாவை கொலை செய்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது " என்று கூறிகிறார். நாட்டை காக்கும் இராணுவ வீரர்களின் மறு உருவத்தை இந்த புதினம் மூலம் சொல்லியிருக்கிறார்.

“ இது யுத்தகளம். இங்கு தேவர்களும், தேவதைகளும் உலாவி வருவதில்லை. பேய்களும், பிசாசுகளும் தான் வாந்து வருகின்றன.” - யுத்தக்களத்தை பற்றி நல்ல வர்ணனை வரிகள்.

வாழ்க்கையில் நிறையத் துன்பங்கள், அவமானங்கள், சோதனைகள், ஏமாற்றங்கள் போன்றவைகளை நீண்ட காலத்திற்கு அனுபவித்தவர்களால் தான், மனித இனம் பயன்படும்படியான நிறைய செய்திகளைக் கொண்ட சிறந்த நூல்களை எழுத முடியும். ரஷ்ய நாட்டச் சேர்ந்த அலெக்ஸாண்டர் ஸோல் ஜினிட்ஸின், ஸ்டாலின் ஆட்சியின் போது மிகுந்த குளிர்ப் பிரதேசமான சைபீரியாவுக்கு அனுப்பப்பட்டு, நிறைய அவமானங்களும் சித்திரவதைக்கும் உட்படுத்தப்பட்டார். அங்கு அவருக்குக் கிடைத்த அனுபவங்கள், உலகமே மெச்சும் எழுத்தாளராக அவரை உயர்த்த உதவின. அவருக்கு இலக்கியத்திற்காக நோபல் பதக்கம் வழங்கப்பட்டது. பிரச்சனைகளில் நிறைய படிப்பினைகள் மறைந்திருக்கின்றன. அதே போல், பி.எஸ்.ஆர்.ராவ் அவர்களுக்கு என்ன அனுபவம் கிடைத்தோ என்று தெரியவில்லை. உணர்வு பூர்வமான கலைப்படத்தை பார்த்த திருப்தி ஏற்ப்படுகிறது.


முகவரி

நற்பவி பிரசுரம்,
விலை.80, பக்கங்கள் : 256
தி.நகர்,
சென்னை -17.

Wednesday, November 19, 2008

பரபரப்பு... சிரிசிரிப்பு...

'முனைவர்' கு. ஞானசம்ந்தன்

நாம் மனிதர்கள் என்று நமக்கு உணர்த்தும் ஒரே உணர்ச்சி நகைச்சுவை தான். கதை படிப்பது போல் முழு வீச்சில் நகைச்சுவை கட்டுரைகளை படித்துவிட கூடாது. எழுதியவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்துக் கொண்டு ஒரு நிமிடமாவது ரசிக்க வேண்டும். ஒரு நிமிட இடைவேளைக்கு பிறகு அடுத்த கட்டுரை போக வேண்டும். அப்படி ஒவ்வொரு கட்டுரையின் முடிவில் ‘ஞானசம்பந்தன்’ அவர்கள் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறார்.

ஜெயா டி.வியின் ஆஸ்தான பட்டிமன்ற நடுவர் ‘ஞானசம்பந்தன்’ அவர்கள் இந்த நூலை எழுதியிருக்கிறார். யாரையும் கேலி செய்யாமல் தன் அனுபவத்தில் இருந்தும், சங்க இலக்கியத்தில் இருந்தும், குழந்தைகள் இடமிருந்தும் தான் ரசித்த நகைச்சுவையை எடுத்து தொகுத்துள்ளார். பலர் ( என்னையும் உட்பட) நண்பர்களுடன் ரசித்த நகைச்சுவையை அப்படியே மறந்து விடுகிறோம். இவரை போல் நாம் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நகைச்சுவை சம்பவங்களை குறித்து வைத்துக் கொண்டால் அனைவரும் நகச்சுவை எழுத்தாளராகி விடலாம். ரொம்ப பேசிவிட்டேன் என்று நினைக்கிறேன். இந்த புத்தகத்திற்கு வருவோம்.

'பரபரப்பு... சிரிசிரிப்பு' , 'சிரிப்போம்... சிந்திப்போம்' என்று இரண்டு பகுதியாக நூலை பிரித்துள்ளார். முதல் பகுதியில் பேராசிரியராக கல்லூரியில் சம்பவங்களும், பள்ளிப் போட்டியில் தலைமை ஏற்றுக் கொண்ட சம்பவங்களும் எழுதியுள்ளார். இதில் எனக்கு பிடித்த நகைச்சுவை...

பையன் : எங்கப்பா ஒரு ஊது ஊதுனார்னாப் போதும்... பஸ் ஓடியே போயிடும்.
ஆசிரியர் : ஆமா... உங்கப்பா யாரு ? பயில்வானா ?
பையன் : இல்ல... கண்டக்டரு...

இந்த புத்தகத்தில் இலக்கியத்தில் இருக்கும் சிலேடை ( டபுள் மினிங்) நகைச்சுவையை குறிப்பிட்டு சொல்லியாக வேண்டும்

புலவர் : வணக்கம் மடத்தலைவா..
தலைவர் : நான் மூட்டாளின் தலைவனா....!
- என்று கோபமாக கேட்க
புலவர் : மடத்துக்கு தலைவனே என்று சொல்கிறார்.
மடாதிபதி என்பதை எப்படி சொல்லியிருக்கிறார் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்தியாவில் ஏன் இவ்வளவு மக்கள் தொகை என்றால் 'இந்தியா ஒரு தீப கர்ப்ப நாடு' என்று கூறுகிறார்.

ஒரு புலவர் தலை மீது பெரிய மூட்டையுடன் சென்றுக் கொண்டு இருந்தார். உயர்ந்த வீட்டில் மாடத்தில் இருந்த வள்ளல் ஒருவர் "தலையில் என்ன பெரிய மூட்டை" என்று கேட்க " என் தலை விதி வசம்" என்றார். உடனே அந்த வள்ளல் சிரித்தார். உண்மையில் அந்த புலவர் கூறியது " என் தலைவி திவசம்".

நண்பர்களோடு நகச்சுவை பகிர்ந்துக் கொள்ள நினைப்பவர்கள், பட்டி மன்ற பேச்சாளர்களுக்கு நிச்சயம் இந்த புத்தகம் பயன்ப்படும்.

முகவரி :-

விஜயா பதிப்பகம்,
20 ராஜ வீதி,
கோயமுத்தூர் - 641001

Wednesday, November 12, 2008

‘சாகித்ய அகாதமி விருது’ பெற்ற எழுத்தாளர்கள்

வருடம் - எழுத்தாளர் - புத்தகம்

1955 - ஆர்.பி.சேது - பிள்ளை தமிழ் இன்பம் (கட்டுரை)
1956 - 'அமரர்' கல்கி - அலை ஓசை (நாவல்)
1958 - சி.ராஜ கோபாலச்சாரி -சக்கரவர்த்தி திருமகன்( இராமயணத்தை கட்டுரை வடிவில் சொல்லும் நூல்)
1961 - மு.வரதராஜன் - அகல் விளக்கு (நாவல்)
1962 - மி.ப.சோமசுந்திரம் - அக்கரை சீமையில் (பயணக்கட்டுரை)
1963 - அகிலோன்(P.V.அகிலான்டம்) - வைகையின் மைந்தன் (நாவல்)
1965 - பி. ஸ்ரீஆச்சாரியா - ஸ்ரீராமானுஜர் (வாழ்க்கை வரலாறு)
1966 - எம்.பி. சிவஞானம் - வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை வரலாறு)
1967 - கே.வி. ஜகநாதன் - வீரர் உலகம் (இலக்கிய ஆய்வு கட்டுரை)
1968 - ஏ.சினிவாச ராகவன் - வெள்ளை பறவை (கவிதை)
1969 - பாரதிதாசன் - பிசிராந்தையா (நாடகம்)
1970 - ஜி.அலகிரிசாமி - அன்பளிப்பு (சிறுகதைகள்)
1971 - நா.பார்த்தசாரதி - சமூதாய வீதி (நாவல்)
1972 - ஜெயகாந்தன் - சில நேரங்களில் சில மனிதர்கள் (Novel)
1973 - ராஜம் கிருஷ்ணன் - வேருக்கு நீர் (நாவல்)
1974 - கே.டி. திருநாவுக்கரசு - திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய ஆய்வு கட்டுரை)
1975 - ஆர். தண்டாயூதம் - தற்கால தமிழ் இலக்கியம் (இலக்கிய ஆய்வு கட்டுரை)
1977 - இந்திரா பார்த்தசாரதி - குருதிப்புனல்(நாவல்)
1978 - வல்லிகண்ணன் - புதுகவிதையின் தோற்றமும், வளர்ச்சியும் (ஆயுவு கட்டுரை)
1979 - டி.ஜானகிராமன் - சக்தி வைத்தியம் (சிறுகதைகள்)
1980 - கண்ணதாசன் - சேரமான் காதலி (நாவல்)
1981 - எம்.ராமலிங்கம் - புதிய உரைநடை (ஆய்வு கட்டுரை)
1982 - பி.எஸ்.ராமையா - மணிக்கோடி காலம் (இலக்கிய வரலாறு)
1983 - டி.எம்.சி.ரகுநாதன் - பாரதி:காலமும் கருத்தும் (இலக்கிய ஆய்வு கட்டுரை)
1984 - 'திருப்புரசுந்தரி' லக்ஷ்மி' - ஒரு காவிரியை போல (நாவல்)
1985 - ஏ.எஸ்.ஞானசம்பந்தம் - கம்பன்:புதிய பார்வை (ஆய்வு கட்டுரை)
1986 - கா.நா.சுப்பிரமணியன் - இலக்கியத்துக்கு அல்லது இயக்கம் (ஆய்வு கட்டுரை)
1987 - ஆதவன் சுந்தரம் - முதலில் இரவு வரும் ( சிறுகதைகள்)
1988 - வி.சி.குழந்தைசாமி - வாழும் வளமும் ( இலக்கிய ஆய்வு கட்டுரை)
1989 - எல்.எஸ்.இராமமிர்தம் - சிந்தானந்தி (சுயவாழ்க்கை வரலாறு கட்டுரைகள்)
1990 - எஸ்.சமுத்திரம் - காட்டு: வேரில் பழுத்த பலா(நாவல்)
1991 - கி.ராஜ நாராயணன் - கோபல்லபுரத்து மக்கள்(நாவல்)
1992 - கோவி. மணிசேகரன் - குற்றால குறிஞ்சி (சரித்திர நாவல்)
1993 - எம்.வி.வெங்கட்ராம் - காதுகள் (நாவல்)
1994 - பொன்னீலன் (கந்தேஷ்வர பத்வோத்சலன்) - புதிய தரிசனங்கள் (நாவல்)
1995 - பிரபஞ்சன் - வானம் வசப்படும் (நாவல்)
1996 - அசோகமித்திரன் - அப்பாவின் ஸ்நேகிதர் ( சிறுகதைகள்)
1997 - தோப்பில் மோஹமத் மீரான் - சாய்வு நாற்காலி (நாவல்)
1998 - சா.கந்தசாமி - விசாரணை கமிஷன் (நாவல்)
1999 - அப்தூல் ரகுமான் - ஆலாபனை (கவிதை)
2000 - தி.க.சிவ சங்கரன் - விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் (ஆய்வு கட்டுரை)
2001 - சி.எஸ். செல்லப்பா - சுதந்திர தாகம் (நாவல்)
2002 - சிற்பி பாலசுப்பிரமணியன் - ஒரு கிராமத்து நதி (கவிதை)
2003 - வைரமுத்து - கள்ளிகாட்டு இதிகாசம் (நாவல்)
2004 - ஈரோடு தமிழன்பன் - வணக்கம் வள்ளுவா (கவிதை)
2005 - ஜி. திலகவதி - கல்மரம் (நாவல்)
2006 - மு.மேத்தா - ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதை)
2007 - நீலா பத்மநாபன் - இலையுதிர் காலம் (நாவல்)

விருதுக்கள் இந்த ஆண்டுகளுக்கு (1957, 1959, 1960, 1964 and 1976) வழங்கப்படவில்லை.எதேனும் தவறு இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Monday, November 10, 2008

என் பெயர் எஸ்கோபர்

பா.ராகவன்

தீவிரவாத இயக்கங்கள், குற்றவாளி, அரசியல் அமைப்பு பற்றிய குறிப்புகள் என்று வாசகர்களின் தேடலுக்கு கிழக்கு பதிப்பகம் சங்கம்மாக இருக்கிறது. குற்றவாளிகளை ஹீரோவாக்காமல் அவர்கள் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டும் தனி சிறப்பு கிழக்கு பதிப்பக நூல்களுக்கு உண்டு. பா.ராகவன் அவர்கள் எழுதிய 'டாலர் தேசம்', 'பாக்- ஒரு புதிரின் சரிதம்', ‘9/11 : சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி’ நூல்களை படித்ததில் இருந்து அவர் எழுத்துக்கள் மீது எனக்கு தனி மரியாதை உண்டு. இந்த நூலும் அப்படி தான். சர்வதேச கடத்தல்க்காரன் ‘பாபிலோ எஸ்கோபர்’ பற்றிய வரலாறு.பெரிய கொள்கையோ லட்சியமோ எதுவுமில்லை. பணம் மட்டும் தான் குறிக்கொள். அதற்காக எதையும் செய்பவன். யாரையும் கொல்ல தயங்காதவன் . நாலாயிரத்து மேற்ப்பட்டவர்களின் மரணத்துக்கு நேரடியாக சம்மந்தப்பட்டவன். கொலும்பியா அரசாங்கத்தை அச்சுருத்திய தனி மனிதன் பாபிலோ எஸ்கோபர்.

கார் திருடனாக தன் வாழ்க்கையை தொடங்கி பிறகு கொகெய்ன் கடத்தலில் ஈடுப்படத் தொடங்கினான். கொலும்பியாவில் இருந்து அமெரிக்காவுக்கும், ஐரோப்பியாவுக்கும் ‘கொகெய்ன்’ கடத்தலில் அதிக லாபம் சம்பாதித்தான். தன் கடத்தல் முகத்தை மறைக்க அரசியலில் இறங்கி எம்.பி யாக பொறுப்பேற்றார். ( நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு இவர் தான் முன்னோடி )

தன்னிடம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு 20 நாள் கேஷூவல் லீவு, ஆறு மெடிக்கல் லீவு. 50 வயதில் ஓய்வுதியம், பி.எஃப், பென்ஷன் போன்ற எல்லா வசதிகளும் உண்டு. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் கடத்தல் தொழிலை கார்ப்பிரேட் நிறுவனத்தை நடத்துவது போல் நடத்திக் கொண்டு இருந்தான். தன் கடத்தலை தடுக்க நினைத்த அரசு அதிகாரி, போலீஸ், நீதிபதி உட்ப்பட யாராக இருந்தாலும் பட்டியல் போட்டு கொளை செய்துள்ளான்.

எஸ்கோபரின் கொகெய்ன் கடத்தலால் அமெரிக்க இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். அதனால், அவனை கொலை செய்ய சி.ஐ.ஏ மேற்க் கொண்ட நகைச்சுவை நடவடிக்கைகளை அழகாக பா.ராகவன் அவர்கள் சொல்லியுள்ளார்.

எல்லா கடத்தல்க்காரர்களும் ஒரே மாதிரி தான். எஸ்கோபர் மட்டும் அப்படி என்ன பெரிய வித்தியாசமானவனாக இருக்க முடியும் என்று நினைத்தேன். தன் சமந்தப்பட்ட கோப்புகளை அழிக்க எம் - 19 இயக்கத்தின் உதவியுடன் நீதிமன்றத்தை முற்றுக்கையிட்டு, பல நீதிபதிகளை கொன்று கோப்புகளை அழித்தான். பல கடத்தல்க்காரர்களுக்கு அவனுடைய வாழ்க்கை பயணம் தான் 'வெற்றி கைட்' (Guide).

தன் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் முதல் முறையாக அவனுடைய ஒன்பது கோடி ரூபாய் சரக்கு எங்கு போனது என்று அவனுக்கேதெரியாது. அதற்காக கவலைப்படும் அவகாசம் கூட அவனுக்கு இல்லை. Search Bloc சுட்டுக் கொள்ளப்பட்டு பரிதாபமாக இறந்தான்.

தொன்னூறு ஆரம்பத்தில் இருந்த பயங்கரவாத கடத்தல்காரனை பலர் மறந்திருக்க கூடும். என்னை போன்ற புது வாசகர்கள் எஸ்கோபர் யார் என்று கூட தெரிந்திருக்காது. எல்லா வாசகர்களுக்கு புரியும் படி பா.ராகவன் எழுதிருப்பது தான் இந்த நூலின் தனி சிறப்பு. ஆரம்ப முதல் முடிவு வரை ஒரு கதை விளக்குவது போல் நன்றாக விளக்கியிருக்கிறார்.

பக்கங்கள் : 224 ,
விலை : 90.
கிழக்கு பதிப்பகம்

Monday, November 3, 2008

பட்டிமன்றம் : பழமையா ? புதுமையா ?

பட்டிமன்றம் : இன்று மக்கள் பெரிதும் விரும்புவது பண்பாட்டை வளர்க்கும் பழமையா ? இல்லை நாகரிகம் வளர்க்கும் புதுமை ?

நேற்று ( 2 நவம்பர், 2008), எருக்கஞ்சேரியில் 11 மணிக்கு மேலே குறிப்பிட்ட தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இத்தலைப்பின் நடுவராக 'கவிஞர்' சொர்ணபாரதி அவர்கள் இருந்தார். ‘பழமை’ என்ற அணியில் நானும், 'பேராசிரியர்' வள்ளியும், 'புதுமை' என்ற அணியில் 'ஆனந்தம்' இணை-இயக்குனர் மு. வீரமுத்துவும், 'கவிஞர்' மஞ்சரியும் பேசினோம்.

இந்த பட்டிமன்றம் எனக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்தது. நான் ஒன்றும் சிறந்த மேடை பேச்சாளர் இல்லை. என்னால் முடிந்தளவு பேசினேன். ஒரு சில இடத்தில் கை தட்டல் கிடைத்தது. ( பேச்சை நிருத்துவதற்கான கை தட்டல் இல்லை என்ற நம்பிக்கையில் பேச்சை தொடர்ந்தேன்.)

நான் பட்டி மன்றத்தில் பேசிய சாரம்.

*. 'பட்டிமன்றம்' என்ற விஷயம் 'பழமை' தான். அப்படி இருக்கும் போது 'மக்கள் பெரிதும் விரும்புவது பழமையா ? புதுமையா' என்ற தலைப்பு தேவையா ? என்ற கேள்வியுடன் என் பேச்சை தொடங்கினேன்.

* ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு
‘Old Wine in a New Bottle’
பழைய மதுவை புது கோப்பையில் கொடுப்பது போல் நவீன தகவல் தொடர்பு சாதனங்கள்' தகவல் தொடர்பு' என்ற பழமைக்கு தான் பயன்படுக்கிறது.

யுத்தத்துக்கான ஆயுதங்கள் புதுமையாக இருந்தாலும்
யுத்தம் என்பது பழமை தான்
பதிவு திருமணம், பகுத்தறிவு திருமணம் புதுமையாக இருந்தாலும்
திருமணம் என்பது பழமை.

* இன்று சமூதாய சீரழிக்கும் விஷயங்களில் ஒன்று " Living Together”. திருமண ஆகாத ஆண்ணும், பெண்ணும் ஒரே வீட்டில் தங்கி, விருப்பம் இருந்தால் திருமணம் செய்துக் கொள்வார்கள். இந்த புதுமையை நம் சமூகம் ஏற்க்குமா ? நம் பிள்ளைகள் இதை பின் பற்றுவதை நாம் விரும்புவோமா..?

* புதுமை... புதுமை... என்று சொல்கிறார்களே.! என் திருக்குறளுக்கும், கம்பராமாயணத்துக்கும் நிகரான புது நூல் உண்டா என்று சொல்லுங்கள்.

* இந்தியாவில் இவ்வளவு மக்கள் தொகை இருப்பதற்க்கு காரணமே 'சேலை' என்ற பழமையான உடை தான். அந்த பழமையான உடையை பலர் விரும்புவதால் தான் 'ஒன் மினிட்' புது புடவை வந்தது.

* இந்திய தம்பதிகளுக்கு பிறந்த மனோஜ் என்பவர், " Sixth Sense " என்ற படத்தை இயக்கி வெளியிட்ட போது பல பத்திரிக்கைகள் அவரை பாராட்டியது. அவர் மறக்க முடியாத பாராட்டு என்று அவர் சொன்னது 'தன்னை ஹிச்காக்குடன் ஒப்பிட்டது தான்' என்றார். புது இயக்குநர் கூட பழைய இயக்குநரின் விசிரியாக இருக்கிறார்.

* இன்று இலங்கை தமிழர்களுக்கு நாம் குரல் கொடுக்கிறோம் என்றால் நம் பாரதி நமக்கு கொடுத்த தமிழ் பற்று தான் காரணம். இந்த புதுமை நமக்கு தமிழ் பற்றா கொடுத்தது ?

* இன்று இருக்கும் பொருளாதார வீழ்ச்சியில், பழைய பொறியியல் படிப்பானா ' Mechanical, Electrical, Civil Engg.' படித்தவர்கள் அதிகம் பாதிக்க படவில்லை. புது படிப்பு படித்தவர்கள் தான் பெருமளவு பாதிக்கப்பட்டார்கள் என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

* இறுதியாக...
பழமை என்பது கலிமண் மாதிரி ! நமக்கும், சுற்றுப்புறத்திற்கும் நல்லது தான் செய்யும். ஆனால், புதுமை என்பது பிளாஸ்டிக் மாதிரி ! நம்மையும், சுற்றுப்புறத்தையும் பாதிக்கும் என்று கூறி என் உரையை முடித்துக் கொண்டேன்.

நடுவர் சொர்ணபாரதி அவர்கள் தன் உரையை முடித்த பிறகு 'பழமைக்கு' சாதகமாக தீர்ப்பு வழங்கினார். நான் சிறப்பாக பேசினேன் என்று பலரும் என்னை பாராட்டினர். எனக்கு மேடை பேச்சு வரும் என்று நேற்று தான் புரிந்துக் கொண்டேன்.

 
Website Hit Counter
வந்தவர்கள்