Wednesday, December 31, 2008

இந்த வருடம் நான் உருப்படியாய் செய்தது

எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் அதிகம் புத்தகம் படித்தேன். இந்த வருடத்தில் நான் படித்த புத்தகங்கள்.

சுஜாதா -
- ஆ...
- விஞ்ஞான சிறுகதைகள்
- விபரீத கோட்பாடு
- பாரதி இருந்த வீடு
- 24 ரூபாய் தீவு
- நேனோ டெக்னாலஜி

பாக்கியம் ராமசாமியின்
- 'நகைச்சுவை சிறுகதைகள்'
- கமான் அப்புசாமி கமான் !

எஸ்.ராமகிருஷ்ணனின்
- அரவான்
-துணையெழுத்து
- நெடுங்குருதி

முகில்
- லொள்ளு தர்பார்
- லொள்ளு காப்பியம்
- யூதர்கள்
- அக்பர்
- ஔரங்கசீப்


மருதன்
- லெனின் : முதல் காம்ரேட்
- மோதிப் பார் ! : ஹியூகோ சாவேஸ்
- விடுதலை புலிகள்
- திப்பு சுல்தான்
- பவுத்த மதம்


'சோலை' தமிழினியன்
- கதைசோலை
- காதல் சொல்ல வந்தேன்
- அன்புள்ள அப்பா ( முதல் பாகம்)


'கலைமாமனி' விக்கிரமன்
- சிறுகதை களஞ்சியம் (5வது தொகுதி)
- சோமதேவரின் உயில்

சுப்பிரமனியன் சந்திரன்
- அசரீரி

பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தின் ‘அறிவியல் அறிஞர்’
- ஆல்ப்ரெட் நோபல்
- சர் வாட்ஸன் வாட்
- மைக்கேல் ஃபாரடே


ஞாநி - ‘நெருப்பு மலர்கள்’
ஜெயமோகன் - கண்ணீரை பின் தொடர்தல்
சாரு நிவேதா - ஸீரோ டிகிரி
சா. கந்தசாமி - 'விசாரணைக் கமிஷன்'
நாகூர் ரூமி - HIV : கொல்லப் பிறந்த கொடுங்கோலன்
அருமையார் - திராவிடம் கண்ட தேய்பிறை
பி.எஸ்.ஆர்.ராவ் - கோர்ட் மார்ஷியல்
'முனைவர்' கு. ஞானசம்ந்தன் - பரபரப்பு... சிரிசிரிப்பு...
பா.ராகவன் - என் பெயர் எஸ்கோபர்
'மயிலாடுதுறை' இளையபாரதி - அரங்க மின்னல்கள்
என்.சொக்கன் - அஸிம் கம்ப்யூட்டர்ஜி
ஜி.எஸ்.எஸ் - என் நாடு, என் மக்கள், உன் ரத்தம் !
அ.கருணாந்தன் - வரலாறு என்றால் என்ன ?
சிபி கே. சாலமன். - 6 (சிக்ஸ்) சிக்மா
வெ.சாமிநாத சர்மா - முசோலினி
'லிவிங் ஸ்மைல்' வித்யா - நான் வித்யா
அக்னிஹோத்ரம் ராமானிஜ தாத்தாச்சாரியர் - சடங்குகளின் கதை

பாலு சத்யா - மேரி க்யூரி
க.குணசேகரன் - இருளர்கள்:ஒர் அறிமுகம்
எம்.ஜி.ஆர். முத்து - வள்ளல் எம்.ஜி.ஆர் வரலாறு

நல்லமூர் கோவி.பழனி - அறிவியல் கணித அறிஞர்கள்
ஷேக்ஸ்பியர் – ஒதெல்லோ (தமிழ்)
சிவன் - ஹோமரின் இலியட் (தமிழ்)
சிங்காரவேலு – டால்ஸ்டாய்

சிறு புத்தகங்கள்


தாய் வீட்டில் கலைஞர் - தி.க வெளியீடு
நான் நாத்திகன் ஏன் - பகத்சிங்
ஜாதி ஒழிய வேண்டும் ஏன் ? - 'தந்தை' பெரியார்
இது தான் மகாமகம் - 'தந்தை' பெரியார்


Why I do not belive in God – K.Veermani
Harry Potter and the Deathly Hallows (7th part) - J.K.Rowling
True Story of Jesus


(Bold இருப்பது வாங்கிய புத்தங்கள்
மற்றவை இரவல் மற்றும் நூலகத்தில் வாங்கி படித்த புத்தகங்கள்)

‘மனசாட்சி சொன்னது' (சிறுகதை) - நம் உரத்தசிந்தனை போட்டியில் வெற்றி பெற்றது.

புத்தக வாசகர்களுக்காக உருப்படியான ‘Tamibookreview.blogspot.com’ - ஒரு வலைப்பதிவை தொடங்கினேன்.

வலைப்பதிவை நல்ல முறையில் பயன் படுத்தி 'குண்டக்க மண்டக்க' என்ற நகைச்சுவை தொடரை எழுதினேன்.என் நகைச்சுவைக்கு வரவேற்பு உள்ளதை பின்னூட்டத்தில் மூலம் உணர முடிந்தது.

‘நடைபாதை’ (சிறுகதை) நூலை வனிதா பதிப்பகம் மூலம் வெளியிட்டேன்.

கலீலியோ கலிலி, ரைட் சகோதரர்கள், இலங்கை - மூன்று சிறு நூல்களை எழுதி முடித்தேன்.

'எழுதி முடித்துவிட்டேன்' என்று நினைத்த நூல்களை, தகவல் குறைவாக இருப்பதால் மீண்டும் எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

எட்டையப்புரத்தில் நடந்த இலக்கிய சந்திப்பும், நடேசன் பார்க்கில் பதிவர் சந்திப்பும், கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடி கூட்டம் போன்ற நிகழ்ச்சிகள் என்னால் மறக்க முடியாதவை.

மறக்க நினைக்கும் நிகழ்ச்சிகளை பதிவில் போட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்ள விரும்பவில்லை.

அடுத்த வருடம் ஆங்கில புத்தகங்களும் அதிகமாக படிக்க வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறேன். நல்ல படைப்புகளை படைக்க வேண்டும், குறிப்பாக நகைச்சுவை கட்டுரையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பத்திரிக்கையில் எழுதும் வாய்ப்பை தேட வேண்டும். இது தான் என் புது வருடத்தின் முயற்சி...

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

Sunday, December 28, 2008

ஷேக்ஸ்பியரின் 'ஒதெல்லோ'

தமிழில் : வை. சண்முகசுந்தரம் M.A.,B.L

ஆங்கில நாடக இலக்கியங்களில் மறக்க முடியாத முக்கிய நபர் ஷேக்ஸ்பியர். இன்று வரை , ஆங்கில நாடக இலக்கியங்கள் எடுத்துக் கொண்டால் ‘ஷேக்ஸ்பியர்’ போன்ற எழுத்தாளரை நாம் தேடிக் கொண்டு இருக்கிறோம். அவர் எழுதிய நாடக கதாப்பாத்திரங்கள் காலம் கடந்து வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள். ரோமியோ, ஜூலியட், ஹெம்லெட், ஒதெல்லோ போன்ற கதாப்பாத்திரங்கள் இன்று வரை வாழ்கிறார்கள். இன்னும் எத்தனை நூற்றாண்டானாலும் ‘ஷேக்ஸ்பியர்’ தன் கதாப்பாத்திரங்கள் உருவத்தில் வாழ்வார்.

ஷேக்ஸ்பியரின் 'ஒதெல்லோ' வும் காதல் கதை தான். படிக்காத பாமரன் கூட ரோமியோ, ஜூலியட் கதாப்பாத்திரங்கள் பற்றி சொல்லுவான். இந்த இரண்டு கதாபாத்திரங்களும் மிக பிரபலம். அந்த அளவிற்கு 'ஒதெல்லோ' கதை பெரும்பாலனவர்களிடம் சென்று அடையவில்லை. இரண்டு கதைகளிலும் காதலர்கள் இறந்து விடுகிறார்கள். மற்றப்படி இந்த இரண்டு கதைகளிலும் எந்த வித ஒற்றுமையும் இல்லை.

நீக்ரோ கதாப்பாத்திரத்தை கதாநாயகனாக ஷேக்ஸ்பியர் அவர்கள் எழுதியிருக்கிறார். கருப்பு, வெள்ளை நிற பிரச்சனை இக்காலாத்தில் இருக்கும் போது அப்போது நீக்ரோவை கதாநாயகனாக வைத்து எழுதியிருக்கிறார். ( அவர்க்கு எத்தனை மிரட்டல் வந்ததோ யாருக்கு தெரியும்). இந்த துணிச்சல் தான் பல நூற்றாண்டுகள் கடந்தும் அவர் புகழ் உள்ளது.

'ஒதெல்லோ' நாடகம் வெனிஸ் நகரம், சைப்ரஸ் தீவை சுற்றி கதை நடக்கிறது. துருக்கியர்களுடன் போரில் வெற்றி பெற்று, யுத்த கலைப்பாற தன் காதல் மனைவி டெஸ்டிமோனாவுடன் சைப்ரஸ் தீவில் ஒதெல்லோ தங்கிறார். துணை படைத்தலைவன் கேஸ்ஸியோ மற்றும் அவர் அடுத்த பதவியில் உள்ள இயாகோ ஒதெல்லோவுக்கு உதவியாக தங்கிறார்கள். கேஸ்ஸியோ பதவியை அடைய நினைக்கும் இயாகோ டெஸ்டிமோவுக்கும், கேஸ்ஸியோவுக்கும் கள்ள தொடர்ப்பு இருப்பதாக ஒதெல்லோவிடம் கூறுகிறான். முதலில் நம்ப மறுக்கும் ஒதெல்லோ சிறுக சிறுக இயாகோ வார்த்தை வலையில் விழுகிறான். ஒதெல்லோ பரிசாக கொடுத்த கை குட்டையை டெஸ்டிமோனா தவறுதலாக தொலைத்து விட அதை கேஸ்ஸியோ அறையில் போடுகிறான். ஒதெல்லோவுக்கு மேலும் சந்தேகம் ஏற்படுகிறது.

சந்தேகத்தின் உச்சத்தை தொட்ட ஒத்தெல்லோ தனது காதல் மனைவி டெஸ்டிமோனாவை கொலை செய்து விடுகிறான். கேஸ்ஸியோ மூலம் இயாகோவின் சூழ்ச்சி தெரிய வர தன் மனைவி கொன்ற பாவத்திற்கு தன் உயிரை மாய்த்துக் கொள்கிறான்.

ஷேக்ஸ்பியர் பெரும்பாலான நாடகங்கள் சோகத்தில் முடிவது போல் இந்த நாடகமும் சோகத்தில் தான் முடிகிறது. காலத்தால் அழியாத 'ஒதெல்லோ' நாடகத்தை வை. சண்முகசுந்தரம் அவர்கள் நன்றாக மொழிபெயர்த்துள்ளார். 'தையல் வெளியீடு' இந்த நூலை வெளியிட்டுள்ளது. பல உலக இலக்கிய நூல்களை 'தையல் வெளியீடு' தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருவது குறிப்பிடதக்கது.

முகவரி :

தையல் வெளியீடு
E- 4, முதல் தளம்,
252, செல்லப்பா தெரு,
குயப்பேட்டை, சென்னை - 12.
தலைப்பேசி : 98414 49529 / 93826 77312

Saturday, December 27, 2008

நடேசன் பார்க்கில் பதிவர்கள் சந்திப்பு

இன்றைய 'வலைப்பதிவர்கள் சந்திப்பு' நன்றாக நடந்தது.

இது என்னுடைய முதல் பதிவர் சந்திப்பு என்பதால் இன்று தான் எல்லோரையும் பார்த்தேன். கேபிள் சங்கர், அக்னி பார்வை, லக்கி லுக், டோண்டு, முரளி, ஜியோவ்ராம் சுந்தர் , 'பாலம்' பாலா, மதுரை கணேஷ், அதிஷா என்று ஒரு பெரும் பட்டியலே உண்டு. (எல்லோருடைய பெயரும் என்னால் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை).

முரளி அவர்கள் தன் முதலில் பேசி சந்திப்பை தொடங்கி வைத்தார். முரளி பேசும் போது அதிஷா தன் கையை அசைத்து அவர் பேச கூடாது என்பது போல் சைகை காட்டினார். பிறகு தான் தெரிந்தது அவர் கொசுவை விரட்டுகிறார் என்று...! பலர் இன்று பேசியதை விட கொசுவை விரட்டியது தான் அதிகம். (நான் பதினைந்து கொசுவை கொன்றேன்)

'திருமணம் ஆனவர்கள் படும் கஷ்டங்கள்' என்று முதல் அரை மணி நேரத்துக்கு மொக்கை போட்டோம். இதில் திருமணம் ஆகாதவர்கள் வாய்யை திரக்கவில்லை. 'பாலம்' பாலா, முரளி, கேபிள் சங்கர், மதுரை கணேஷ் போன்றவர்கள் தங்கள் கருத்துக்களை சொன்னார்கள்.( ஒரு சில கருத்தில் நண்பர்கள் அனுபவம் என்று தங்கள் சொந்த அனுபவத்தை பேசியது போல் இருந்தது).

அடுத்த தலைப்பு...'அரசியல்'. தி.மு.க, அ..தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ் என்று எல்லா கட்சிகளின் இன்றைய நிலவரத்தை பற்றி பேசினோம். கலைஞர், ஈழ தமிழம் பற்றி பேசும் போது ஒருவர் எங்களையே பார்த்துக் கொண்டு இருந்தார். ( யாராவது புலிகளுக்கு ஆதரவாக பேசி விடுவார்களோ !, உள்ளே சென்று விடுவோமா ! என்ற பயம் உள்ளூர இருந்தது.)

சில வருடங்களுக்கு முன்பு 'அந்த' மாதிரி புத்தங்கள் தேவி தியேட்டர் வெளியே விற்பதை பற்றி லக்கி லுக் கூறினார்.இப்போது 'அந்த' புத்தங்கள் அதிகம் விற்க்கப்படவில்லை என்பதை மன வருத்ததுடன் சொன்னார். தன்னிடம் பித்தியேக கலேக்ஷனாக 20,25 புத்தகங்கள் இருப்பதாக பேசினார். ( நம் வலைப்பதிவர் நலனுக்காக தன் பதிவில் பொடுவார் என்று எதிர்பார்க்கலாம்.) அதே போல், அதிஷா அவர்கள் தன் செல்போனில் இருக்கும் தத்துவ பாடலையும் வலைப்பதிவில் போடுவதாக சொன்னார். (மிக விரைவில் தமிழ்நாடே உச்சரிக்க போகும் பாடல் அதுவாக தான் இருக்கும்.)

ஒரு தியாகி ( முரளி கண்ணன் என்று நினைக்கிறேன்) புன்னியத்தில் எல்லோரும் தேநீர் அருந்தினோம். லக்கி லுக், ஜியோவ்ராம் சுந்தர் வழக்கம் போல் 'சாரு நிவேதா' பற்றி பேச தொடங்கினர். கேபிள் சங்கர், மதுரை கணேஷ் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள். எல்லோரிடமும் கை குழுக்கியப்படி விடைப்பெற்றுக் கொண்டேன்.

முகம் தெரியாமல் பின்னூட்டம் எழுதுவர்களையும், பதிவர்களையும் நேரில் பார்க்கும் போது வித்தியாசமான அனுபவமாக தான் இருந்தது. இது போன்ற சந்திப்பு குறைந்தது மூன்று மாதம் ஒரு முறையாவது நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

பெயர் விடுப்பட்ட நண்பர்கள் என்னை மன்னிக்கவும்...!

Monday, December 22, 2008

'கவிஞர்களின் பார்வையில் அண்ணா' நூல் வெளியீடு

சோலை பதிப்பகம்

சோலை தமிழினியன் தொகுத்த

'கவிஞர்களின் பார்வையில் அண்ணா'
(100 கவிஞர்கள் பங்கேற்கும் சிறப்பு கவிதை தொகுப்பு)

வெளியீட்டு விழா அழைப்பிதழ் !!!!

நாள் : 28 - 12 - ௧2௨008
மாலை சரியாக 5.30 மணிக்கு
இடம் : இக்சா மையம் (ICSA)
107, பாந்தியன் சாலை,
எழும்பூர், சென்னை - 8

தலைமை :

தமிழ்த்திரு கயல் தினகரன் அவர்கள்
( சேர்மன், சென்னை மாவட்ட நூலகம்)

கவிவேந்தர் கா. வேழவேந்தன்
(முன்னாள் அமைச்சர்)

திரு. மாம்பலம் சந்திரசேகர்
(அதிபர், சந்திரசேகர் பில்டர்ஸ்)

எழுத்தாளர் 'அமுதா' பாலகிருஷ்ணன்
சிறப்பு கவியரங்கில் பங்கேற்போருக்கு பரிசு வழங்கி பாராட்டுரை :

கவிஞர். சுடர். முருகையா
(பொதுச்செயலாளர், அ.இ.த.எ.ச)

சிறப்புக் கவியரங்கம் : 'வருக 2009'
சிறந்த மூன்று கவிதைகளுக்கு தலா ரூ.100 பரிசு.

Sunday, December 21, 2008

பாக்கியம் ராமசாமியின் 'நகைச்சுவை சிறுகதைகள்'

விலை.65, பக்கங்கள். 208

ஒவ்வொரு வாசகனுக்கும் தான் படிக்கும் நூலில் தேவையான செய்திகள், குறிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்த்து தான் படிக்கிறான். பிடித்த எழுத்தாளர் புத்தகம் படிக்கும் போது தனக்கு பிடித்த எழுத்தாளரின் ஒவ்வொரு எழுத்துக்களையும் ரசிக்கிறான். ஆனால், இந்த இரண்டு கருத்துக்களுக்கும் நகைச்சுவை புத்தகங்களுக்கு பொருந்தாது. நகைச்சுவை நூல்களில் இருந்து செய்தியோ அல்லது குறிப்புகளோ யாரும் எதிர்பார்க்க முடியாது. பிடித்த எழுத்தாளரே நகைச்சுவை கதையை எழுதியிருந்தாலும் சிரிப்பு வரவில்லை என்பதை வாசகன் உண்மையை ஒப்புக் கொள்வான். மற்ற தலைப்பில் எழுதிய புத்தகங்களை பற்றி கடுமையாக பேசினால், அவரவர் ரசனை விவாதமாக மாறிவிடும். எழுதியது எதிரியாக இருந்தாலும் நம்மை சிரிக்க வைத்தவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. சிரிக்கும் படி எழுதாமல் 'நகைச்சுவை கதை' என்று சொன்னால், நண்பராக இருந்தாலும் கருத்தை கூறாமல் இருக்க முடியாது. அப்படி ஒரு பெருமை நகைச்சுவை நூல்களுக்கு உண்டு

பாக்கியம் ராமசாமி அவர்கள் நகைச்சுவை கதைகள் எழுதுவதில் பெயர் போனவர். ( நல்ல பெயர் எடுத்தவர் என்று சொல்ல வந்தேன்.... வேறு மாதிரி யோசிக்க வேண்டாம்.). தான் எழுதிய நகைச்சுவை கதைகளை தொகுப்பு நூலாக தொகுத்துள்ளார். ஒரு சில கதைகள் வித்தியாசமாக நடையில் எழுதியிருக்கிறார். உதாரணத்திற்கு, முதல் கதை பாதிக்கும் மேல் கடித போக்குவரத்து மூலம் கதையை சொல்லியிருக்கிறார். அதே போல் 'காண்ட்டீன் கிராஜூவேட்' (தமிழ் தலைப்புக்கு பஞ்சமோ எண்ணவோ) முழுக்க முழுக்க கடிதத்தின் மூலமாகவே முழுக்கதையும் சொல்லியிருக்கிறார். இந்த இரண்டு கதைகளும் நகைச்சுவை கதைகள் என்று மட்டும் சொல்லாமல், வித்தியாசமான நடையைக் கொண்ட கதை என்று சொல்லலாம்.

'பரபரப்பு' மிகவும் ஸ்வாரஸ்யமான கதை. ப்ளாட்டில் நடக்கும் ஒரு நகைச்சுவை சம்பத்தை சொல்லும் போது தொலைக்காட்சி தொடரைப் பார்த்தது போல் இருந்தது. 'ஐந்து பேர் கெடுத்த அற்புதக் கதை' கண்டிப்பாக குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அதன் எழுத்து நடையே சிரிப்பை வரவழைக்கிறது. பேராசிரியர், நாட்டியக்காரி, சிறுவன், தையல்காரன், விஞ்ஞானி என்று ஐந்து பேர்கள் ஒரு கதையை எழுதிகிறார்கள். ஐவரும் தங்கள் வர்ணனை சொல்லும் போதும், அவர்வர் துறையை சார்ந்த வார்த்தைகளை பயண்ப்படித்தை போதும் நம்மால் ரசிக்க முடிகிறது.

இந்த நூலில் பாக்கியம் ராமசாமியின் எழுதிய எல்லா கதைகளும் நகைச்சுவை கதை என்று பொய் சொல்ல விரும்பவில்லை. ஒரு சில கதைகள் தவறி போய் பாக்கியம் ராமசாமியின் நகைச்சுவை நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. 'வெங்காய வடைமேல் காதல்', 'அனுவின் அடிச்சுவட்டில்' போன்ற கதைகள் ஏன் இந்த நூலில் சேர்த்தாளர்கள் என்று புரியவில்லை. அதுவும் 'வெங்காய வடைமேல் காதல்' நகைச்சுவை கதை என்பதை விட கணவன், மனைவிக்கும் இருக்கும் அன்பை உணர்த்தும் கதையாக தான் தெரிகிறது.

இந்த நூல் 2006 பதிப்பித்தாலும், பெரும்பாலான கதைகள் பல வருடங்கள் முன் எழுதியது என்பதை உணர முடிகிறது. உதாரணத்திற்கு ‘ஒரு கை பார்ப்போம்’ கதையில், கணேஷ் கதாப்பாத்திரம் "ஏழாயிரம் பெறுமானமுள்ள வீட்டை மூவாயிரத்துக்கு விற்றேனே" என்று சொல்லும் போதே தெரிகிறது. இந்த காலத்தில் ஏழாயிரத்துக்கு வாடைக்கு வீடு கிடைக்கும். அடையார், டி.நகர் போன்ற இடங்களில் இது கூட சாத்தியமில்லை. நகைச்சுவையான சம்பவங்கள் இருக்கும் அளவிற்கு சில இடங்கள் உரையாடல் நகைச்சுவையாக இல்லை என்று தான் தோன்றுகிறது.

இந்த புத்தகம் படித்து முடிந்த பிறகு நீங்கள் வயறு வலிக்க சிரித்திருப்பீர்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது. (திரைப்படத்தில் வரும் பல நகைச்சுவை காட்சிகளே அப்படி தான் இருக்கிறது). ஆனால், நகைச்சுவை எழுத்தாளர்களில் மிக முக்கியமாக கருதப்படும் பாக்கியம் ராமசாமியின் ஆரம்ப கால நூல் என்ற வகையில் கண்டிப்பாக படிக்க வேண்டும்.

முகவரி

பூம்புகார் பதிப்பகம்
127 ( ப.எண்.63), பிரகாசம் சாலை, (பிராட்வே)
சென்னை - 600 108
தொலைபேசி - 2526 7543

Thursday, December 18, 2008

என்ன செய்யலாம்? - தமிழ்வணிகத்தின் கட்டுரைப்போட்டி

விஷூவல் மீடியா குழுமத்தால் நிர்வகிக்கப்படும் வணிகத் தகவல்களின் பெட்டகம் "தமிழ் வணிகம்" இணையத் தளம். வர்த்தகம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தங்கத் தமிழில் தடையில்லாமல் பரப்புவது எங்களின் முதன்மை நோக்கம். மென்பொருட்கள் உருவாக்கம், இணையத் தள வடிவமைப்பு, பயன்தரும் நட்புத் தளங்களைத் உலகளாவிய தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்வது என "தமிழ் வணிகத்தின்" பணிகள் பரந்து விரிந்துள்ளன. இதோ இப்போது, மற்றொரு புதிய முயற்சியாக இப்போது கட்டுரைப் போட்டியை அறிவிக்கிறது "தமிழ் வணிகம்".

இன்றைய உலகத்தை அச்சுறுத்தி வருகிறது பொருளாதார மந்த நிலை. அன்றாடம், உலகின் பல நாடுகளில் மக்கள் தங்கள் வாழ்வதாரத்தின் ஆணிவேரான வேலையை இழந்து வருகின்றனர். வாழும் வழி தெரியாமல் சிலர் தங்கள் வாழ்க்கையையே மாய்த்துக் கொள்கின்றனர். இத்தகைய சூழலில், எந்தத் தொழில் செய்தால் ஜெயம் பெறலாம்? அதற்குரிய எளிய வழிகள் என்னென்ன? யாரை? எங்கு? எப்படி? அணுக வேண்டும். குறைந்த முதலீட்டில் நிறைந்த இலாபம் சம்பாதிப்பது எப்படி? இப்படி இயல்பாகப் நம்முள் எழும் கேள்விகள் ஏராளம். அவற்றுக்கான விடைகள் உங்கள் மனச் சுரங்கத்தில் மண்டிக்கிடக்கலாம். தொடர்ந்து யோசித்துக் கொண்டே இருப்பதை விட நாலு பேருக்கு வழி காட்டுவது கூடுதல் புண்ணியம். எனவே தயங்க வேண்டாம். சட்டென எழுதத் தொடங்குங்கள் போட்டிக் கட்டுரையை.

பெருகிவரும் தொழில் போட்டியில் வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் ஈர்க்க, அல்லது தனது வலையில் விழவைக்க நினைத்துப் பெரிய பெரிய நிறுவனங்கள் சலுகைகளை அள்ளி வழங்கின. ஆனால், அந்தச் சலுகைகள் சில நிறுவனங்களின் அஸ்திவாரத்தையே ஆட்டங்காண வைத்து விட்டன. தமது தொழில் எல்லையை விரிவுபடுத்த எண்ணி நிறுவனத்தையே தள்ளாட வைக்கும் நிலைக்கு ஆளாகி விட்டனர் பலர். எந்தத் துறையிலும் கரை கண்டவர்கள் யாரும் இல்லை. சில நமக்குத் தெரிந்திருக்கலாம். பல நாம் அறியாமல் இருக்கலாம். அதே சமயம் அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளுக்குள் ஊறிக் கொண்டே இருக்கும்.

எனவே தொழில் முறைகள் பற்றி உங்களுக்கு தெரிந்ததைத் தொகுத்துக் கட்டுரையாக்கி எங்களுக்கு அனுப்புங்கள். உங்கள் படைப்புக்கள் ஆசிரியர் குழுவின் அனுமதியோடு "தமிழ் வணிகம்" இணையத் தளத்தின் முகப்புப் பக்கத்தில் சிறப்புச் செய்தியாக வெளியிடப்படும்.

இப்போட்டிக்கான கட்டுரைகள் சுய தொழிலில் ஈடுபட நினைப்பவர்களுக்கு ஊக்க மருந்தாக அமைய வேண்டும் என்பது எங்கள் விருப்பம். உங்களின் படைப்புக்கள் சிலருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போடும் நெம்புகோலாக அமையலாம்.

இன்னும் என்ன யோசனை? எடுங்கள் பேனாவை. வெளிப்படுத்துங்கள் உங்கள் படைப்பாற்றலை.

விதிமுறைகள் மற்றும் ஆசிரியர் குழு, அனுப்ப வேண்டி கடைசி தேதி மற்றும் முகவரி நாளை தமிழ் வணிகம் செய்தி தளத்தில் தெரியப்படுத்தப்படும்.

புதுமைகளை வரவேற்கும் வாஞ்சையான நெஞ்சத்துக்குச் சொந்தக்காரர்கள் நீங்கள். தமிழ் வணிகத்தின் இந்தப் புதிய முயற்சியை இன்னும் செழுமையாக்கும் யோசனைகளையும் மறக்காமல் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

இப்படிக்கு,

தமிழ் வணிகம்
http://www.tamilvanigam.in/

Wednesday, December 17, 2008

ஞாநியின் ‘நெருப்பு மலர்கள்’

விலை.55, பக்கங்கள். 144
விகடன் பிரசுரம், சென்னை - 2

ஞாநி அவர்களின் பேட்டியை கேட்ட அளவிற்கு அவருடைய எழுத்துக்கள் எனக்கு அதிகம் பரிச்சயமில்லை. அவருடைய சில தொலைக்காட்சி தொடர்களை பார்த்து இருக்கிறேன். நான் வாசித்த ஞாநியின் முதல் நூல் என்றால் அது ‘நெருப்பு மலர்கள்’ தான். அடிக்கடி கலைஞரை தாக்கி பேசுவதாலு ஞாநி மீது அந்த அளவிற்கு ஈடுபாடு வந்ததில்லை. ( எத்தனை பேர் தான் ஆளும் கட்சியை திட்டுவார்கள்). ஆனால், ஒரு பெண்ணியவாதியாக எனக்கு ஞாநியை பிடிக்கும். 'நெருப்பு மலர்கள்' புத்தகத்தை படித்து முடித்த பிறகு ஞாநி எப்பேர் பட்ட பெண்ணியம் சிந்தனை கொண்டவர் என்பதை உணர முடிந்தது.“ஆங்கிலத்தில் வரலாற்றை குறிக்கும் சொல்லான ' History ' என்பது His Story '. அவன் கதை என்பதியிலிருந்து உருவானது. வரலாற்றில் ‘Her Story’ களுக்கு இடமில்லை.” முன்னுரையில் முதல் வாக்கியத்திலே அசத்திவிட்டார்.

நம் சரித்திர பக்கங்கள் பெண்களுக்கு இடம் அளிக்காமல் மறைந்து, மறந்து போன பெண்களை ‘நெருப்பு மலர்கள்’ நூலின் மூலம் அவர்களை பதிவு செய்தியிருக்கிறார். அவர் இதில் எழுதிய எழுதிய (சொல்லிய) பதினான்கும் கதைகள் அல்ல. உண்மையாக நடந்த நிகழ்வுகள்.

விடுதலை புரட்சி இயக்கங்கள் போராளிகளுக்கு சமைத்துப் போடுவதே பெண்களின் வேலையாக காலத்தில், அதை மாற்றி கையில் தூப்பாக்கி ஏந்தி போராடிய ப்ரீதி, பீனா அவர்கள் குறிப்பிட வேண்டியவர்கள். அதுவும் ப்ரீதி நமது துணை கண்டத்தின் முதல் 'சயனைட்' பெண் என்ற பெயரிலாவது விடுதலை போராட்டங்களில் குறிப்பிட மறந்துவிட்டோம்.

முவலூர் ராமாமிர்தம் அம்மையார் அவர்கள் தாசி குலத்தில் பிறந்து, தேவதாசி முறையை ஒழித்ததை படிக்கும் மெய் சிலிர்க்க வைக்கிறது. ஒரு இடத்தில் புகழ் பெற்ற காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, 'தேவதாசி முறையை ஒழித்தால் கலையும், சங்கீதமும் அழிந்துவிடும்' என்று வாதாடினார். 'தேவதாசியாக இருப்பதற்காக அந்த பெண்கள் பெருமைப்பட வேண்டும்' என்றார். ( அப்போதே காங்கிரஸ் இப்படி தான் யோசிக்கும் போல). அதற்கு முத்துலட்சுமி 'எங்கள் குலத்துப் பெண்கள் இத்தனை காலமாக தேவதாசிகளாக இருந்து அலுத்துப் போய்விட்டார்கள். கனம் உறுப்பினர் வேண்டுமானால் அவர் குலத்துப் பெண்களை இனி இந்தக் கௌரவமான பணியில் ஈடுபடுத்திக் கொள்ளட்டும். எனக்கு ஆட்சேபனை இல்லை' என்று ஒரு போடு போட்டார்.

நம் இந்திய சிவில் சட்டத்தை மாற்றிய ருக்மாவின் திருமணம், வேதம் ஓதிய ராமாபாய், பாலுணர்ச்சியை பற்றி எழுதிய முத்துப்பழநி என்று பல வித்தியாசமான, சரித்திரத்தில் நாம் கேள்வி படாத பெண்களை 'நெருப்பு மலர்கள்' புத்தகத்தில் ஞாநி பதிவு செய்கிறார்.

விஜசாந்தி, ரோஜா வடிவில் தெலுங்கு படத்தில் பார்த்த 'தெலுங்கானா போராட்டத்தை' தனது இறுதி அத்தியாயத்தில் எழுதியிருக்கிறார். தெலுங்கு படத்தை பார்க்கும் போது அவர்களது போராட்டம் எரிச்சலாக இருந்தது. ஆனால், படிக்கும் போது இன்னும் ஆந்திராவில் இப்படி நடக்கிறதா என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. தெலுங்கானா போராட்டத்தை பற்றி தனி புத்தகமே எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.

பின்னைரையில் 'வாசலில் போடப்பட்டிருக்கும் பால் பையை எடுத்து போய் அம்மாவிடமும், செய்திதாளை அப்பாவிடமும் கொடுக்கக் குழந்தைக்கு யார் கற்றுக் கொடுத்தார்கள்.' என்று கவிஞர் வெண்ணிலாவின் கவிதை வரிகளை மேற்க்கொள் காட்டியிருப்பது நல்ல அழகு.

'நெருப்பு மலர்' படித்த பிறகு நான் விரும்பி படிக்கும் எழுத்தாளர்களில் 'ஞாநி'யும் இருக்கிறார்.

Saturday, December 13, 2008

எஸ்.ராமகிருஷ்ணனின் 'அரவான்'

விலை.90. பக்கங்கள் -166

‘அரவான்’ - தமிழக அரசு விருது பெற்ற நூல்.

எஸ்.ராமகிருஷ்ணனின் 'துணையெழுத்து' படித்ததில் இருந்து நான் அவருடைய தீவிர வாசகனாகிவிட்டேன். அவருடைய எழுத்துக்களும், போதை மருந்தும் ஒரே மாதிரி தானோ !! அவருடைய ஒரு புத்தகம் படித்த பிறகு அவருடைய பல புத்தகங்களை தேடி படித்து வருகிறேன். ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறையாவது அவருடைய வலைப்பதிவுக்கு சென்று வருகிறேன். அவருடைய எழுத்துக்களை படிக்க படிக்க அவரையும் சேர்ந்து படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. சரி ! இந்த நூலுக்கு வருவோம்.

'அரவான்' நூல் எஸ்.ராமகிருஷ்ணனின் நாடகத்துறையில் அவர் எழுதிய நாடக கதையை நூலாக தொகுத்துள்ளார். தொலைக்காட்சி ஊடகங்களில் தங்களை தொலைத்து கொண்டவர்கள் மத்தியில், தன்னுடைய அழகான ஒன்பது நாடகங்களை புத்தகமாக எழுதியிருக்கிறார். ஒவ்வொரு நாடகமும் குறும்படமாக எடுத்தாலும் தவறில்லை. ஒவ்வொரு நாடகம் வித்தியாசமான கதை அம்சம் கொண்டது.புத்தக தலைப்புக் கொண்ட முதல் நாடகம் 'அரவான்'. ஒருவன் மட்டும் நடிக்கும் நாடகம். நம் அன்றாட வாழ்வில் பல மனிதர்கள் தனக்குள்ளே பேசிக்கொள்கிறான். அதை மையமாக வைத்து பாரதத்தில் வரும் அரவான் கதாப்பாத்திரத்தை நாடகமாக உருவாக்கியிருக்கிறார். இறக்கும் முன் 'அரவான்' பாத்திரம் எப்படி எல்லாம் மனதில் புலம்பிருக்கும் என்று பாரதக்கதை சொல்ல மறந்ததை எஸ்.ராமகிருஷ்ணன் 'அரவான்' நாடகம் மூலம் பதிவு செய்திருக்கிறார்.
"கண்களைக் கட்டிக் கொண்ட பிறகு உலகம் காணாமல் போய்விடுகிறது. ஆனால் மனது திறந்துக்கொள்கிறே!"
கண்களை கட்டிக் கொண்டால் மற்றவர்களைக் காண வேண்டியிருக்காது. எல்லா நேரமும் நம்மை நாமே பார்த்துக் கொண்டே இருக்கலாம்" போன்ற வசனங்கள் மிகவும் அழகு.

"பிறந்ததில் இருந்தே கசப்பை எனக்குப் பருகக் கொடுத்த பாண்டவர்களுக்கு விசுவாசத்தைத் திரும்பித் தர வேண்டியிருக்கிறது." என்று அரவான் தனக்குள்ளே பேசிக்கொள்ளும் விரக்தியின் உச்சம். இறந்த அரவான் பேசும் போது தன் உடல் அருகே பெண் அழுவதை பார்க்கிறான். அப்போது, " இந்த தேசம் உடலை அடையாளமாக கொண்டய்து. என் உடல் விலக்கப்பட்டவனின் உடல். அது அணைத்துக் கொள்ளப்பட முடியாதது." என்று சொல்லும் போது தன்னை போல் உலகில் இருக்கும் எல்லா அரவான் நிலைகளையும் சொல்கிறான்.

அடிமைகள், காவலர்கள் கதாப்பாத்திரம் கொண்ட 'உருளும் பாறைகள்', கதையே வந்து கதை சொல்லும் 'உதிர்காலம்', 'தஸ்தாயெவ்ஸ்கியின் சங்கீதம்' என்ற நாடகத்தில் தஸ்தாயெவ்ஸ்கியின் காதல் அனுபவம், தஸ்தாயெவ்ஸ்கி எழுதியா நாவல் மையமாக கொண்ட 'மரணா வீட்டின் குறிப்புகள்'கலைப் பொருள் சேகரிப்பவனின் கனவான 'உருப்பளிங்கு', நதியின் அலரல் சத்தமான 'நதி அறியாது, இரவு அறியாத ஒரு கிராமத்தின் கதையான 'சூரியனின் அறுபட்ட சிறகுகள்' என்று ஒவ்வொரு நாடகமும் ஒரு விதம். எஸ்.ராமகிருஷணன் இப்படி தான் இருக்கும் என்று முடிவுக்கு வரமுடியவில்லை.

சிரிக்க தெரியாதவர்கள் கூட 'உற்று நோக்கு' நாடகத்தை பார்த்தால் சிரித்து விடுவார்கள். அபத்தமான நாடகமாக இருந்தாலும், ரசிக்கப்பட வேண்டிய நகைச்சுவை. ஆண், பெண் இருவர் காதல் செய்யும் போது சமூகம் அவர்களுக்கு தொந்தரவு கொடுக்கிறது. அதை தொடர்ந்து நான்கு பேர் வந்து நல்லது, கேட்டது சொல்கிறார்கள். இந்த நாடகத்தை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் அனுமதிக் கொடுத்தால் என் அலுவலக நிகழ்ச்சியில் மீண்டும் ஒரு முறை மேடை ஏற்றிவிடுவேன்.

எஸ்.ராமகிருஷ்ணனின் ஒவ்வொரு புத்தகங்களை படிக்கும் போது அவர் எழுத்துக்கள் மீது உள்ள மதிப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. இறுதியாக நாடகத்துறையில் தனது அனுபவத்தை சொல்லும் போது நாடகத்தை மக்கள் மறந்துக் கொண்டு இருப்பதை உணர்த்துகிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் இருக்கும் வரை இதுப் போன்ற நல்ல நாடகங்கள் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கும்.

முகவரி :

உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்பிரமணியம் தெரு.
அபிராமபுரம், சென்னை - 18.

Monday, December 8, 2008

எஸ்.ராமகிருஷ்ணனின் 'துணையெழுத்து'

ஒவ்வொரு புத்தகமும் ஒரு நண்பனுக்கு சமம் என்பார்கள். ஆனால், எஸ். ராமகிருஷ்ணனின் 'துணையெழுத்து' பல நண்பர்களுக்கு சமமான நூல் என்று தான் சொல்ல வேண்டும். தன் தேடல் பயணத்தில் சந்தித்த பல நண்பர்களையும், இலக்கியவாதிகளையும் கட்டுரை வழியாக சொல்லும் போது உணர்வு பூர்வமான சிறுகதை படித்த திருப்தி இருந்தது. ஒரே புத்தகத்தில் வாசகர்களை பல மனிதர்களை சந்திக்க வைத்திருக்கிறார். மனிதனின் பல நிறங்களை புரிய வைத்திருக்கிறார். நகரத்தில் வாழ்ந்தவர்கள் இந்த நூலை படித்து முடித்த பிறகு இந்த நூலில் சொல்லும் இடங்களை பார்க்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக வரும். பல புத்தகங்களை படித்து எழுதுவதை விட ஒவ்வொரு மனிதனையும், ஊரையும் படித்து எழுதியதால் அவர் எழுத்துக்களில் அதிக ஜீவன் இருக்கிறது.'தலையறு பட்டுப்போன குழந்தையின் விளையாட்டு பொம்மையை ஒரு நாள் பார்த்த போது தான் குழந்தையிலிருந்து எவ்வளவு தூரம் பயணம் செய்து வளர்ந்து விட்டேன் என்பது புரிந்தது" என்ற வரிகள் நெகிழவைக்கிறது. " நிறமில்லாதொரு குடும்பம்", " ஹிரண்ய ஸ்நேகம்", "அன்பின் விதைகள்" போன்ற கட்டுரைகள் என் மனதை மிகவும் பாதித்தது. குறிப்பாக 'அன்பின் விதைகள்' கட்டுரையில் படித்தால் என்னை நினைத்து நானே வெட்கப்பட்டு கொண்டேன். சாதாரன வாட்ச்மென் பூமிநாதன் தன் மாத சம்பளத்தில் நூறு ரூபாய் மற்றவர்களுக்காக ஒதுக்கும் போது நம்மால் ஏன் செய்ய முடியவில்லை என்று எனக்குள்ளே கேள்வி எழுந்தது.

உறுபசி கட்டுரையில் ' வித்த முயற்சிக்கும் போது புத்தகத்தை வாங்குவது எளிது, விற்பது கடினம் என்று புரிந்தது' என்ற வரிகள் மிகவும் அருமை. பல பத்திப்பகங்களுக்கும் இதே நிலை தான். நல்ல புத்தகம் சிலபமாக போட்டு விடுகிறார்கள், ஆனால் வாங்கவோ, லைப்பரி ஆர்டர் கொடுக்கவோ ஆட்கள் தான் இல்லை.

இந்த நூலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்..

காய்ச்சல் ஒரு நோயல்ல. உடல் எடுத்துக் கொள்ளும் ஓய்வு என்று தோன்றுகிறது.

"எண்ணும் எழுத்தும்" கட்டுரையில் ' நாம் இன்னமும் நம்மை மட்டும் விற்பதற்கு விலை பேசாமல் இருக்கிறோம். சந்தர்ப்பம் இல்லாமலா அல்லது விலை நிர்ணயிக்க முடியாமலா என்று மட்டும் தான் தெரியவில்லை;

"மனக்குகையில்" கட்டுரையில் ' அவமானமும், அலைச்சலும், கசப்பும் தான் எழுத்தாளனின் சமையல் பொருட்கள் என்று தோன்றியது.

எஸ். ராமகிருஷ்ணனின் 'துணையெழுத்து' நூல் படித்து முடித்தவுடன் நான் அவருடை வாசகனாகவே மாறிவிட்டேன். அவர் எழுதிய 'நெடுங்குருதி' படிக்க தொடங்கியிருக்கிறேன். 'நெடுங்குருதி' நூலை பற்றி இந்த வலைப்பதிவில் விரைவில் எதிர்பாருங்கள்.

முகவரி

விகடன் பிரசுரம், விலை.110
757, அண்ணா சாலை,
சென்னை - 2

Tuesday, December 2, 2008

சா. கந்தசாமி எழுதிய 'விசாரணைக் கமிஷன்'

விலை.75, பக்கங்கள். 208

'விசாரணை கமிஷன்' - சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவல். இந்த நாவலில் இரண்டு முக்கிய பாத்திரங்கள் நாயகன் - தங்கராசும், நாயகி ருக்குமணியும் தான். தங்கராசு, ருக்குமணி அவர்கள் வாழும் வீடு, தங்கராசு வேலை செய்யும் பஸ் டெப்போ மற்றும் ருக்குமணி வேலை செய்யும் பள்ளிக்கூடம் என்று முக்கால்வாசி கதை இந்த இடத்தை சுற்றி நடக்கிறது.அதிகம் வர்ணனையில்லாமல் கதாபாத்திரங்களில் உரையாடல் மூலம் இடத்தை பற்றியும், கதாபாத்திரத்தின் மனநிலை பற்றியும் சா. கந்தசாமி விளக்குகிறார். முதிர் தம்பதிகளான பஸ் கண்டக்டர் தங்கராசு, டீச்சர் ருக்குமணியும் பிள்ளையில்லாத குறை தீர்க்க தங்கள் நாய் டைகர் மீது அதிக பாசம் வைத்திருக்கிறார்கள். தங்கராசு பல கெட்டவார்த்தைகள் பயன் படுத்தினாலும் தன் மனைவியை குழந்தையில்லை என்று ஒரு முறை கூட குறை சொல்லியதில்லை. அவர்கள் இல்லற வாழ்க்கையை இடை இடையே பிண்ணோக்கி சென்று பார்ப்பது போல் அவர்கள் பெண் பார்க்கும் படலம், ருக்குமணி தங்கராசு அம்மாவை அழைத்து வருவது, ருக்குமணி தொண்டை வலிக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்வது போன்ற காட்சிகளை சொல்லும் போது அந்த இடத்திற்கு நம்மை அழைத்து செல்கிறார்.

தங்கராசு தன்னுடன் வேலை செய்யும் போக்குவரத்து ஊழியர்களிடம் பேசும் உரையாடல்களை படிக்கும் போது அசல் சென்னை பஸ் டெப்போவில் இருப்பது போல் உணர்வு. தங்கராசு என்ற கதாப்பாத்திரத்தை உருவாக்க பல பெரூந்தில் பயணம் செய்திருப்பார் என்று நினைக்கிறேன். டெப்போவில் பேசும் துணை கதாப்பாத்திரங்களும் மிக இயல்பாக உருவாக்கியுள்ளார். 'புடுங்கி', 'மயிறு' போன்ற வார்த்தைகள் போக்குவரத்து ஊழியர்கள் எதார்த்தமாக பயன்படுத்துவதை இந்த நூலில் கந்தசாமி அவர்கள் கூறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல், எந்த காலத்தில் இருக்கிறோம் என்பதை கதாபாத்திரங்கள் வாயிலாகவே கூறியிருக்கிறார். உதாரணத்திற்கு, பாரதிவாணன் ருக்குமணி டீச்சரை பாராட்டும் போது 'உங்க கலை திறமை வச்சு தான் அறிஞர் அண்ணா கிட்ட கையெழுத்து வாங்க போறேன்’ என்பதும், டெப்போவில் இரண்டு போக்குவரத்து ஊழியர்கள் "எம்.ஜி.ஆர கட்சிய விட்டு நீக்கிட்டாங்க" என்பதும், 'இந்திர காந்தியை சுட்டு கொன்னுடாங்க' என்று சரோஜா டீச்சர் ருக்குமணியிடம் தெரிவிப்பதும், இறுதியில் கட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ' ராஜீவ் காந்திக்கு ஆதரவு தாரீர்' என்று பேசுவது எந்த காலக்கட்டத்தில் கதை நடக்கிறது என்பதை உணர்த்துகிறார்.
ஒரு சில இடங்களில் கதை எந்த காலக்கட்டத்தில் நகர்கிறது என்று குழப்பமாக இருக்கிறது. மிகவும் சிரமப்பட்டு எந்த காலத்தில் கதை நகர்கிறது என்று புரிந்துக் கொள்ள வேண்டியதாக உள்ளது. வாசகர்களை சிரமப்படமால் பார்த்திருக்கலாம்.

படிப்பறிவு கம்மியான தங்கராசும், படித்த டீச்சர் ருக்குமணியும் இல்லற வாழ்க்கையில் சின்ன சண்டைகள் வந்தாலும் சந்தோஷமாக வாழ்கிறார்கள். பல பிரச்சனைகளுக்கு நடுவில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கிறார்கள். வயது ஆக ஆக இவர்களுடைய அன்பு பெருகிக் கொண்டே இருக்கிறது. ருக்குமணி தொண்டை வலியை பற்றி பஸ் டெப்போவில் இருப்பவர்கள் பலர் தங்கராசு விடம் விசாரிப்பதும், அதற்கு வைத்தியம் சொல்வது மிகவும் அருமை. போலீஸ்க்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் நடக்கும் சாதான சண்டை எப்படி பெரிய போராட்டமாக மாறுகிறது, அதனால் தங்கராசு குடும்பம் எப்படி பாதிக்கிறது என்று நாவல் முடிகிறது. அந்த போராட்டத்தில் பலர் இறக்கிறார்கள். அதற்கு மாவட்ட ஆட்சியாளர் 'விசாரணை கமிஷன்' வைக்கிறார். ஒரு சமூக போராட்டம் எப்படி ஒரு குடும்பத்தில் நிம்மதியை கெடுகிறது என்று இறுதியில் சொல்லும் போது எல்லோர் மனதில் சா. கந்தசாமி அவர்கள் நிற்கிறார்.

முகவரி :

அகரம், சரவணா காம்ப்ளேக்ஸ்
15பி-1, வெள்ளப்பண்டாரத் தெரு
கும்பகோணம் - 612001

Friday, November 28, 2008

HIV : கொல்லப் பிறந்த கொடுங்கோலன்

நாகூர் ரூமி.

எய்ட்ஸ்க்கு இதுவரை மருந்து கண்டு பிடிக்கவில்லை என்பது உலகம் அறிந்த உண்மை.அதை பற்றிய விழிப்புணர்வு வர நமது அரசாங்கம் சுவரொட்டியிலும், தொலைக்காட்சியிலும், வானோலியிலும் பிரசாரம் செய்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இருந்தும், எதுவுமே நமக்கு பலன் அளிக்கவில்லை. இந்தியாவில் அதிக எய்ட்ஸ் நோயாளிகள் இருக்கும் மாநிலம் தமிழ் நாடு தான் (இந்த புத்தகத்தில் கிடைத்த தகவல்). பாலியல் தொழில் சட்டமாக கொண்ட மும்பை மாநகரம் இருக்கும் மஹாராஷ்டா மாநிலம் கூட இரண்டாவது இடத்தில் தான் இருக்கிறது. காண்டம் இருந்தால் கூட, தவறான உடல் உறவால் எய்ட்ஸ் கண்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை தான் காட்டுகிறது.தினமும் எதாவது ஒரு தொலைக்காட்சியில் சொல்லும் விஷயமாக எய்ட்ஸ் இருக்க, புதிதாக இந்த நூலில் என்ன இருக்க போகிறது என்று நினைத்தேன். ஆனால், படித்து முடித்த பிறகு எய்ட்ஸ் பற்றி நமக்கு தெரியாத பல விஷயங்கள் இருப்பதை தெரிந்துக் கொண்டேன். இந்த நூல் ஒவ்வொரு இந்திய குடிமகனும், போதை ஊசி மகன்களும் படிக்க வேண்டும்.

இந்த நூலை நான் சீக்கிரமாக படித்து முடித்ததற்கு மழைக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். மழையால் எனக்கு கிடைத்த விடுமுறையை இந்த புத்தகத்தை படித்து முடித்து விட்டேன். நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை போன்ற நூல்களை படித்து பழக்கப்பட்ட எனக்கு உடல் நோய் சம்மந்தமாக நான் படிக்கும் முதல் நூல் இது தான்.

நோய் சம்மந்தமாக அறிகுறிகள், அறிவுறைகள் என்று மட்டும் சொல்லாமல் முதல் மூன்று அத்தியாயத்தில் எய்ட்ஸ் நோய் கண்டுபிடித்த சிறு வரலாற்றையும் நாகூர் ரூமி அவர்கள் எழுதியுள்ளார்.

1981 ஆம் ஆண்டு, சாதாரண ‘நிமோனியா’ நோய் என்று தான் எய்ட்ஸ்யை நினைத்தார்கள் தொடர்ந்து மருந்து சாப்பிடுபவர்களுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தி (இம்யூனிட்டி) குறைந்து போகும் நபர்களுக்கு தான் ‘நிமோனியா’ தாக்கும். ஆனால், உடல் ஆரோக்கியமாக வைத்திருப்பவர்களும் நிமோனியாவல் அவதை பட்டனர். பல மருத்துவர்களுக்கு இந்த நிமோனியா தலைவலியாக இருந்தது. அதன் பிறகு எல்லோருக்கும் ஒரு உண்மை தெரிந்தது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே ஓரினச்சேர்க்கையாளர்கள். ( பதிவர்களுக்கு விளக்க தேவையில்லை என்று நினைக்கிறேன்). அதன் பிறகு ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் என்ற இயற்கை பாலுணர்வுகள் கொண்டவர்களை பாதித்ததை கண்டு பிடித்தனர். இது 'செக்ஸ்' சம்மந்தப்பட்ட நோயாகாத் தான் இருக்க வேண்டும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர்.

நான்கு ஆண்டுகளாக இந்த வியாதிக்கு பெயர் வைக்காமல் இருந்தனர். 1986 ஆம் ஆண்டு, ஒரு நல்ல கரி நாளில், பல பேர் மரணத்திற்கு பிறகு 'இன்டெர்நேஷனல் கமிட்டி ஃபார் நாமன்கிளேச்சர்' ஒரு தீர்மானத்துக்கு வந்தனர். மனிதனை தாக்கும் இந்த வைரஸ்க்கு 'எச்.ஐ.வி' (Human Immunodeficiency Virus - HIV) என பெயர் வைத்தனர். மனித உடலில் இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பலவீனப்படுத்துவதால் 'எய்ட்ஸ்' (AIDS - Acquired Immune Deficiency Syndrome) என்று பெயர் வைத்தனர்.

இப்புத்தகத்தில் 'AIDS’ பற்றி நமக்கு தெரியாத பல தகவல்கள் உள்ளன. உதாரணத்திற்கு, HIV, HIV II என்று இரண்டு வகையான வைரஸ்கள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது. இரண்டு வகைகளுமே ஓர் ஆரோக்கியமான உடலில் 'இம்யூனிட்டி'யைப் பாதிப்பதாகவும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அடையாளங்களைத் தோற்றுவிப்பதாக இருந்தாலும், இவை இரண்டிற்கும் முக்கியமான சில வேறுபாடுகள் உள்ளன.

எய்ட்ஸ் உருவான காரணங்களை நாம் பெரிதாக நம்புவது மூன்று காரணங்கள். தனியாக வாழ்ந்த சில குழுக்களிடம் ஏற்ப்பட்ட நோய் இது என்றும், குரங்கில் இருந்து மனிதனுக்குப் பரவியது என்றும், அமெரிக்க ராணுவத்தினரின் கிருமிப் போர் நடவடிக்கை காரணம் என்று பல கருத்துக்கள் உள்ளது. ஆனால், இதில் எந்த காரணங்களும் நிருப்பிக்கப்படவில்லை என்பதை தெளிவாக இந்த நூல் உணர்த்துகிறது.

எய்ட்ஸை தடுப்பு ஊசி மூலம் ஏன் தடுக்க முடியவில்லை என்ற விளக்கம் இந்த நூலில் உண்டு. 'HIV' மனிதன் உடலில் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. தனது தன்மையையும், உருவத்தையும் மாற்றிக் கொண்டே இருக்கும். நம் உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தி 'HIV' வைரஸை கண்டு பிடித்து அழிக்க முடியாது.அதனால், 'வேக்ஸினேஷன்' (Vaccination) போன்ற தடுப்புசி 'HIV'யை கட்டுப்படுத்த முடியாது.


'ஹெச்.ஐ.வியும் சந்தர்ப்பவாத நோய்களும்' என்ற அத்தியாயத்தை படிக்கும் போது 'கிரி' படத்தில் வரும் வடிவேலு நகைச்சுவை ஒன்று நியாபகம் வந்தது. 'மஹாநதி'சங்கர் அவர்கள் போன் போட்டு வடிவேலுவை அடிக்க தன் நண்பர்களை வர சொல்லுவார். ஆட்டோவில் ஏற்றி ஒவ்வொரு சந்தில் அடி வாங்கியதை வடிவேலு விளக்குவார். எய்ட்ஸ் நோயும் அப்படி தான். ஒருவனை எய்ட்ஸ் தாக்கி விட்டால் சாதாரண காய்ச்சல் கூட அவன் உடலில் ரூம் போட்டு தங்கிவிடும். டி.பி, கேன்ஸர் என்று ஒவ்வொரு நோய் வந்து தாக்கிக் கொண்டு இருக்கும். கல்லாய் இருந்த உடம்பு துரும்பாய் இலைத்து இறப்பது தான் இந்த நோயின் உச்சக்கட்டம். இதை பற்றி படிக்கும் போதே கொடுமையாக இருக்கிறது. இந்த நோயை அனுபவிப்பவர்களுக்கு எப்படி இருக்கும் என்று நினைத்து பார்க்கவே முடியவில்லை.

'ஆப்பிராக்காவில் எய்ட்ஸ்' என்ற அத்தியாயத்தில் ஆப்பிராக்காவில் மட்டும் ஏன் இவ்வளவு எய்ட்ஸ் நோயாளிகள் இருக்கிறார்கள் என்பதை கூறப்படுகிறது. கிட்ட தட்ட எண்பது லட்சம் மக்கள் வரை ஆப்பிராக்கா கண்டத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிலும் குழந்தைகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருப்பதை சொல்லும் போது அப்பாவிகளை கூட இந்த எய்ட்ஸ் விட்டு வைக்கவில்லை என்பதை புரியவைக்கிறது.


குறை இல்லாத மனிதனே இல்லாத போது ஒரு நூல் மட்டும் எப்படி குறையில்லாமல் இருக்கும். எய்ட்ஸ் நோய் உடலில் வந்ததற்கு அடையாளமாக எடை இழப்பு, தொடர்ந்து வயிற்றுப்போக்கு, இருமல், தொண்டை அரிப்பு என்று நன்றாக தான் விளக்குகிறது. இதே சமயத்தில் மழைக்காலத்தில் அவ்வப்போது தொண்டை வலி வருவதால் படிப்பவர்களுக்கு கண்டிப்பாக பயம் வரும் என்று நினைக்கிறேன். அவ்வளவு தத்துரூபமாக எழுதியிருந்தார். எனக்கு இந்த பயம் வந்ததை ஒப்புக்கொள்கிறேன். ( நான் தவறு செய்யும் ஆள் இல்லைங்க. வருஷத்துக்கு ஒரு தடவ இரத்த தானம் பண்ணுவேன். ஒரு சின்ன பயம் மனசுல இருக்க தானே செய்யுது). இந்திய மூலிகையில் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து இருப்பதாக ஒரு கருத்து நிலவி வருகிறது. அதை பற்றி இன்னும் விரிவாக விளக்கியிருக்கலாம்.

இந்த புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில் எய்ட்ஸ் நோய் பற்றிய செய்திகளை தமிழ் நாட்டில் உள்ள அலோசனை மற்றும் பரிசோதனை மையங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

'இஸ்லாம்', 'இலியட்' (தமிழில்) போன்ற நூல்களை எழுதிய நாகூர் ரூமி அவர்கள் இந்த நூலை எழுதியுள்ளார். ஒரு மருத்துவர் கூட இந்த அளவிற்கு தெளிவாக விளக்க முடியாது என்று நினைக்கிறேன். அவ்வளவு எளிமையாக பாமரணுக்கு புரியும் வகையில் நூல் படிக்கும் வாசகர்களுக்கு புரிய வைத்திருக்கிறார். (கல்லூரி பேராசிரியர் என்பதால் எளிமையாக புரியவைத்தார் என்று நினைக்கிறேன்.) இந்த நூலை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட்வர்களுக்கு சமர்ப்பித்திருப்பதை அவருடைய நல்ல எண்ணத்தை காட்டுகிறது.

தீவிரவாதிகளின் இயக்கம், வாழ்க்கை வரலாறு போன்ற நூல்களை வெளியிட்டுள்ள நீயூ ஹாரிசன் மீடியா தன்னுடைய இன்னொரு பிரிவான 'நலம்' வெளியீடு மூலம் இந்த நூலை வெளியிட்டுள்ளார்கள். இவ்வளவு நல்ல எழுத்தாளர்கள் வைத்துக் கொண்டு ஏன் பத்திரிக்கை துறையில் கால் பதிக்கவில்லை என்று தெரியவில்லை. அப்படி அவர்கள் பத்திரிக்கை துறையில் வந்தால் பதிவர்களின் ஆதரவு அவர்களுக்கு கண்டிப்பாக இருக்கும்.

'நலம் வெளியீடு' க்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து முன் அட்டையை இரண்டாவது பதிப்பில் மாற்றி விடுங்கள். 'எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை' பார்க்கும் போது மெல்லிய மனம் படைத்தவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. மரண தேதியோடு பிறக்கும் குழந்தைகளை பார்க்கும் சக்தி மருத்துவர்களுக்கு மட்டுமே உள்ளது. மற்றப்படி உங்கள் புத்தக சேவை எங்கள் போல் வாசகர்களுக்கு என்றும் தேவை.

இதற்கு மேல் இந்த நூலை பற்றியும், ஆசிரியர் பற்றியும் அதிகம் விமர்சிக்க விரும்பவில்லை. அதிகம் விமர்சித்தால் வாங்கி படிக்கிற எண்ணம் போய்விடும். என்னால் முடிந்த வரை ட்ரெய்லர் ஓட்டிவிட்டேன். முழு படத்தை மன்னிக்கவும் புத்தகத்தை வாங்கி தெரிந்துக் கொள்ளுங்கள்.

மேலும் அந்த புத்தகத்தை பற்றிய விபரங்களுக்கு...

http://nhm.in/printedbook/209/HIV%20-%20Kollap%20Pirandha%20Kodungolan

விலை.50.
பக்கங்கள் : 88
நீயூ ஹாரிசன் மீடியா,
எண். 33/15, இரண்டாவது மேல் தளம்,
எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை, சென்னை - 18

Monday, November 24, 2008

கோர்ட் மார்ஷியல்

பி.எஸ்.ஆர்.ராவ்

இராணுவத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிந்த ‘ராவ்’ அவர்கள் இந்திய இராணுவத்தை மையமாகக் கொண்டு, உணர்வு ததும்பும் எழுதிய புதினம் இது. பாகிஸ்தான் தீவிரவாதிகள், யுத்த களம் என்று அதை பற்றி அதிகம் சொல்லாமல் இராணுவ வீரனின் உணர்வுகளை நமக்கு உணர்த்தியிருக்கிறார். மனைவி, குழந்தை என்று பிரிந்து வாடும் இராணுவ வீரன் மனம் எப்படி பாடுப்படும், அவன் மன நிலை எப்படி இருக்கும் என்று மிக அழகாக கூறியிருக்கிறார். அதே சமயம் இராணுவத்திலும் ஊழல் நடக்கும் என்பதை இந்த புதினம் மூலம் சொல்லியிருக்கிறார். கர்னல் சோப்ரா, அவருக்கு ஜால்ரா அடிக்கும் கேப்டன் டேவிட் கதாப்பரத்திரத்தின் மூலம் இராணுவத்தில் இது போன்ற கருப்பு பூனைகள் இருப்பதை சுட்டி காட்டியுள்ளார். கர்னல் சோப்ரா தன் சுயநலத்துக்காக தன் சிப்பாய்களை பன்றியை கழுவ சொல்வதும், தன் குடும்பத்திற்காக வீடு கட்ட சொல்வதும் அவர்களை அடிமைகள் போல் நடத்துகிறார். சிப்பாய்களுக்கு சிறை தண்டனை கொடுக்க உரிமை கர்னலுக்கு இருப்பதால் அவர்களும் பயந்து வேலை செய்கிறார்கள். தங்கள் வருமானத்தை குடும்பத்திற்கு அனுப்ப எவ்வித தடங்களும் வர கூடாது என்பதில் ஒரு சில சிப்பாய்கள் தன்மானத்தை மறந்து கர்னல் சோப்ராவுக்கு வேலை செய்கிறார்கள்.

"கோர்ட் மார்ஷியல்" நாவல் - விரு விருப்போ, திருப்பங்களோ கொண்ட நாவல் இல்லை. இராணுவ வீரரின் உணர்வுகளின் பிரதிபலிப்பு. மேஜர் சங்கர் என்பவர் தன் உயர் அதிகாரி கர்னல் சித்தாத்தின் மகள் வினிதாவை கற்பழித்து விடுகிறார். வினிதா மேஜர் சங்கருக்கு எதிராக இராணுவ கோர்ட்டில் வழக்கு போடுகிறாள். மேஜர் சங்கர் எதிராக ‘கோர்ட் மார்ஷியல்’ விசாரணை நடக்கிறது. அந்த சமயத்தில் சங்கர் எழுதிய டைரியை மேஜர் பிள்ளை என்பவர் வினிதாவிடம் கொடுக்கிறார். அடுத்த நாள் கோர்ட் மார்ஷியலில் சங்கருக்கு எதிராக சாட்சி அளிக்க வேண்டிய வினிதா, சங்கரின் டைரியை படிக்கிறாள். அந்த டைரியை படித்த பிறகு என்ன முடிவு எடுக்கிறாள் ? கோர்ட் மார்ஷியலில் என்ன வாக்குமூலம் கொடுத்தாள் ? என்பது தான் இறுதி அத்தியாயம்.

இந்த நாவலில் எழுபத்தியைந்து சதவீதம் முழுக்க சங்கரின் டைரி தான். தன் இராணுவ வாழ்க்கையை பற்றியும், அவன் சந்தித்த நபர்கள் பற்றியும், ஒரு பெண்ணை கற்பழிக்கும் அழவிற்கு தன்னை எப்படி மிருகமாக மாற்றியதை பற்றியும் விளக்கியிருக்கிறார். தன் உயர் அதிகாரி கர்னல் சோப்ரா தன்னை கேவலமாக நடத்துவதில் மன வேதனை உள்ளாகிறார். ஒரு முறை சிப்பாய் கோராலால் என்பவர் தன் இரு உயர் அதிகாரிகளை கொன்று விடுகிறான். கர்னல் சோப்ரா சங்கரை அந்த கொலை விசாரணை நடத்தி, பதிவு செய்த 'சம்மரி ஆப் எவிடன்ஸ்' ரிப்போர்டை கொடுக்க சொல்கிறார்.

சிப்பாய் கோராலால் தன் குழந்தை பிறந்ததற்கு விடுமுறை கேட்டுயிருக்கிறார். ஆனால், கிடைக்கவில்லை. குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்று விடுமுறை கேட்டார், அதற்கும் கிடக்கவில்லை. இறுதியில், தன் குழந்தை இறந்ததற்கு விடுமுறை கேட்டும் கிடைக்காத போது மனதளவில் பாதிக்கப்படுகிறார். அந்த சமயத்தில் கோராலாலில் உயர் அதிகாரி அவனை வேலையை செய்ய கட்டாயப்படுத்த, அவரின் மனவேதனை வெறியாக மாறி அவரை கொலை செய்து விடுகிறார். கோராலால் ஆதரவாக 'சம்மரி ஆப் எவிடன்ஸ்' ரிப்போர்டை சங்கர் தயார் செய்த போது பாராட்டு பதிலாக சோப்ரா அவரை திட்டுகிறார். இதனால், சங்கர் மேலும் மனவேதனை அடைகிறார்.

யுத்தம் இராணுவ வீரனை உடல் அளவில் மட்டுமல்ல மனதளவிலும் பாதிக்கிறது என்பதை இந்த நாவல் உணர்த்துகிறது.

யுத்ததில் தான் இறக்கப் போகிறோம் என்ற மனநிலையில் இருந்த போது தான் வினிதாவை கற்பழித்திருகிறார். ஐந்து வருடங்களாக அடக்கி வைத்த ஆண்மை உணர்ச்சியை வினிதாவிடம் தீர்த்துக் கொண்டார். தான் இறக்கும் முன் ஒரு பெண்ணையாவது அனுபவிக்க வேண்டும் என்ற மனநிலை இருந்ததாக எழுதியிருந்தான். சங்கரை காவலில் வைத்திருக்கும் மேஜர் "எத்தனையோ இராணுவ வீரர்கள் பெண்களை கற்பழித்த பிறகு அவர்களை கொலை செய்து விடுகிறார்கள். நீங்கள் வினிதாவை கொலை செய்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது " என்று கூறிகிறார். நாட்டை காக்கும் இராணுவ வீரர்களின் மறு உருவத்தை இந்த புதினம் மூலம் சொல்லியிருக்கிறார்.

“ இது யுத்தகளம். இங்கு தேவர்களும், தேவதைகளும் உலாவி வருவதில்லை. பேய்களும், பிசாசுகளும் தான் வாந்து வருகின்றன.” - யுத்தக்களத்தை பற்றி நல்ல வர்ணனை வரிகள்.

வாழ்க்கையில் நிறையத் துன்பங்கள், அவமானங்கள், சோதனைகள், ஏமாற்றங்கள் போன்றவைகளை நீண்ட காலத்திற்கு அனுபவித்தவர்களால் தான், மனித இனம் பயன்படும்படியான நிறைய செய்திகளைக் கொண்ட சிறந்த நூல்களை எழுத முடியும். ரஷ்ய நாட்டச் சேர்ந்த அலெக்ஸாண்டர் ஸோல் ஜினிட்ஸின், ஸ்டாலின் ஆட்சியின் போது மிகுந்த குளிர்ப் பிரதேசமான சைபீரியாவுக்கு அனுப்பப்பட்டு, நிறைய அவமானங்களும் சித்திரவதைக்கும் உட்படுத்தப்பட்டார். அங்கு அவருக்குக் கிடைத்த அனுபவங்கள், உலகமே மெச்சும் எழுத்தாளராக அவரை உயர்த்த உதவின. அவருக்கு இலக்கியத்திற்காக நோபல் பதக்கம் வழங்கப்பட்டது. பிரச்சனைகளில் நிறைய படிப்பினைகள் மறைந்திருக்கின்றன. அதே போல், பி.எஸ்.ஆர்.ராவ் அவர்களுக்கு என்ன அனுபவம் கிடைத்தோ என்று தெரியவில்லை. உணர்வு பூர்வமான கலைப்படத்தை பார்த்த திருப்தி ஏற்ப்படுகிறது.


முகவரி

நற்பவி பிரசுரம்,
விலை.80, பக்கங்கள் : 256
தி.நகர்,
சென்னை -17.

Wednesday, November 19, 2008

பரபரப்பு... சிரிசிரிப்பு...

'முனைவர்' கு. ஞானசம்ந்தன்

நாம் மனிதர்கள் என்று நமக்கு உணர்த்தும் ஒரே உணர்ச்சி நகைச்சுவை தான். கதை படிப்பது போல் முழு வீச்சில் நகைச்சுவை கட்டுரைகளை படித்துவிட கூடாது. எழுதியவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்துக் கொண்டு ஒரு நிமிடமாவது ரசிக்க வேண்டும். ஒரு நிமிட இடைவேளைக்கு பிறகு அடுத்த கட்டுரை போக வேண்டும். அப்படி ஒவ்வொரு கட்டுரையின் முடிவில் ‘ஞானசம்பந்தன்’ அவர்கள் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறார்.

ஜெயா டி.வியின் ஆஸ்தான பட்டிமன்ற நடுவர் ‘ஞானசம்பந்தன்’ அவர்கள் இந்த நூலை எழுதியிருக்கிறார். யாரையும் கேலி செய்யாமல் தன் அனுபவத்தில் இருந்தும், சங்க இலக்கியத்தில் இருந்தும், குழந்தைகள் இடமிருந்தும் தான் ரசித்த நகைச்சுவையை எடுத்து தொகுத்துள்ளார். பலர் ( என்னையும் உட்பட) நண்பர்களுடன் ரசித்த நகைச்சுவையை அப்படியே மறந்து விடுகிறோம். இவரை போல் நாம் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் நகைச்சுவை சம்பவங்களை குறித்து வைத்துக் கொண்டால் அனைவரும் நகச்சுவை எழுத்தாளராகி விடலாம். ரொம்ப பேசிவிட்டேன் என்று நினைக்கிறேன். இந்த புத்தகத்திற்கு வருவோம்.

'பரபரப்பு... சிரிசிரிப்பு' , 'சிரிப்போம்... சிந்திப்போம்' என்று இரண்டு பகுதியாக நூலை பிரித்துள்ளார். முதல் பகுதியில் பேராசிரியராக கல்லூரியில் சம்பவங்களும், பள்ளிப் போட்டியில் தலைமை ஏற்றுக் கொண்ட சம்பவங்களும் எழுதியுள்ளார். இதில் எனக்கு பிடித்த நகைச்சுவை...

பையன் : எங்கப்பா ஒரு ஊது ஊதுனார்னாப் போதும்... பஸ் ஓடியே போயிடும்.
ஆசிரியர் : ஆமா... உங்கப்பா யாரு ? பயில்வானா ?
பையன் : இல்ல... கண்டக்டரு...

இந்த புத்தகத்தில் இலக்கியத்தில் இருக்கும் சிலேடை ( டபுள் மினிங்) நகைச்சுவையை குறிப்பிட்டு சொல்லியாக வேண்டும்

புலவர் : வணக்கம் மடத்தலைவா..
தலைவர் : நான் மூட்டாளின் தலைவனா....!
- என்று கோபமாக கேட்க
புலவர் : மடத்துக்கு தலைவனே என்று சொல்கிறார்.
மடாதிபதி என்பதை எப்படி சொல்லியிருக்கிறார் என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்தியாவில் ஏன் இவ்வளவு மக்கள் தொகை என்றால் 'இந்தியா ஒரு தீப கர்ப்ப நாடு' என்று கூறுகிறார்.

ஒரு புலவர் தலை மீது பெரிய மூட்டையுடன் சென்றுக் கொண்டு இருந்தார். உயர்ந்த வீட்டில் மாடத்தில் இருந்த வள்ளல் ஒருவர் "தலையில் என்ன பெரிய மூட்டை" என்று கேட்க " என் தலை விதி வசம்" என்றார். உடனே அந்த வள்ளல் சிரித்தார். உண்மையில் அந்த புலவர் கூறியது " என் தலைவி திவசம்".

நண்பர்களோடு நகச்சுவை பகிர்ந்துக் கொள்ள நினைப்பவர்கள், பட்டி மன்ற பேச்சாளர்களுக்கு நிச்சயம் இந்த புத்தகம் பயன்ப்படும்.

முகவரி :-

விஜயா பதிப்பகம்,
20 ராஜ வீதி,
கோயமுத்தூர் - 641001

Wednesday, November 12, 2008

‘சாகித்ய அகாதமி விருது’ பெற்ற எழுத்தாளர்கள்

வருடம் - எழுத்தாளர் - புத்தகம்

1955 - ஆர்.பி.சேது - பிள்ளை தமிழ் இன்பம் (கட்டுரை)
1956 - 'அமரர்' கல்கி - அலை ஓசை (நாவல்)
1958 - சி.ராஜ கோபாலச்சாரி -சக்கரவர்த்தி திருமகன்( இராமயணத்தை கட்டுரை வடிவில் சொல்லும் நூல்)
1961 - மு.வரதராஜன் - அகல் விளக்கு (நாவல்)
1962 - மி.ப.சோமசுந்திரம் - அக்கரை சீமையில் (பயணக்கட்டுரை)
1963 - அகிலோன்(P.V.அகிலான்டம்) - வைகையின் மைந்தன் (நாவல்)
1965 - பி. ஸ்ரீஆச்சாரியா - ஸ்ரீராமானுஜர் (வாழ்க்கை வரலாறு)
1966 - எம்.பி. சிவஞானம் - வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை வரலாறு)
1967 - கே.வி. ஜகநாதன் - வீரர் உலகம் (இலக்கிய ஆய்வு கட்டுரை)
1968 - ஏ.சினிவாச ராகவன் - வெள்ளை பறவை (கவிதை)
1969 - பாரதிதாசன் - பிசிராந்தையா (நாடகம்)
1970 - ஜி.அலகிரிசாமி - அன்பளிப்பு (சிறுகதைகள்)
1971 - நா.பார்த்தசாரதி - சமூதாய வீதி (நாவல்)
1972 - ஜெயகாந்தன் - சில நேரங்களில் சில மனிதர்கள் (Novel)
1973 - ராஜம் கிருஷ்ணன் - வேருக்கு நீர் (நாவல்)
1974 - கே.டி. திருநாவுக்கரசு - திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய ஆய்வு கட்டுரை)
1975 - ஆர். தண்டாயூதம் - தற்கால தமிழ் இலக்கியம் (இலக்கிய ஆய்வு கட்டுரை)
1977 - இந்திரா பார்த்தசாரதி - குருதிப்புனல்(நாவல்)
1978 - வல்லிகண்ணன் - புதுகவிதையின் தோற்றமும், வளர்ச்சியும் (ஆயுவு கட்டுரை)
1979 - டி.ஜானகிராமன் - சக்தி வைத்தியம் (சிறுகதைகள்)
1980 - கண்ணதாசன் - சேரமான் காதலி (நாவல்)
1981 - எம்.ராமலிங்கம் - புதிய உரைநடை (ஆய்வு கட்டுரை)
1982 - பி.எஸ்.ராமையா - மணிக்கோடி காலம் (இலக்கிய வரலாறு)
1983 - டி.எம்.சி.ரகுநாதன் - பாரதி:காலமும் கருத்தும் (இலக்கிய ஆய்வு கட்டுரை)
1984 - 'திருப்புரசுந்தரி' லக்ஷ்மி' - ஒரு காவிரியை போல (நாவல்)
1985 - ஏ.எஸ்.ஞானசம்பந்தம் - கம்பன்:புதிய பார்வை (ஆய்வு கட்டுரை)
1986 - கா.நா.சுப்பிரமணியன் - இலக்கியத்துக்கு அல்லது இயக்கம் (ஆய்வு கட்டுரை)
1987 - ஆதவன் சுந்தரம் - முதலில் இரவு வரும் ( சிறுகதைகள்)
1988 - வி.சி.குழந்தைசாமி - வாழும் வளமும் ( இலக்கிய ஆய்வு கட்டுரை)
1989 - எல்.எஸ்.இராமமிர்தம் - சிந்தானந்தி (சுயவாழ்க்கை வரலாறு கட்டுரைகள்)
1990 - எஸ்.சமுத்திரம் - காட்டு: வேரில் பழுத்த பலா(நாவல்)
1991 - கி.ராஜ நாராயணன் - கோபல்லபுரத்து மக்கள்(நாவல்)
1992 - கோவி. மணிசேகரன் - குற்றால குறிஞ்சி (சரித்திர நாவல்)
1993 - எம்.வி.வெங்கட்ராம் - காதுகள் (நாவல்)
1994 - பொன்னீலன் (கந்தேஷ்வர பத்வோத்சலன்) - புதிய தரிசனங்கள் (நாவல்)
1995 - பிரபஞ்சன் - வானம் வசப்படும் (நாவல்)
1996 - அசோகமித்திரன் - அப்பாவின் ஸ்நேகிதர் ( சிறுகதைகள்)
1997 - தோப்பில் மோஹமத் மீரான் - சாய்வு நாற்காலி (நாவல்)
1998 - சா.கந்தசாமி - விசாரணை கமிஷன் (நாவல்)
1999 - அப்தூல் ரகுமான் - ஆலாபனை (கவிதை)
2000 - தி.க.சிவ சங்கரன் - விமர்சனங்கள் மதிப்புரைகள் பேட்டிகள் (ஆய்வு கட்டுரை)
2001 - சி.எஸ். செல்லப்பா - சுதந்திர தாகம் (நாவல்)
2002 - சிற்பி பாலசுப்பிரமணியன் - ஒரு கிராமத்து நதி (கவிதை)
2003 - வைரமுத்து - கள்ளிகாட்டு இதிகாசம் (நாவல்)
2004 - ஈரோடு தமிழன்பன் - வணக்கம் வள்ளுவா (கவிதை)
2005 - ஜி. திலகவதி - கல்மரம் (நாவல்)
2006 - மு.மேத்தா - ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதை)
2007 - நீலா பத்மநாபன் - இலையுதிர் காலம் (நாவல்)

விருதுக்கள் இந்த ஆண்டுகளுக்கு (1957, 1959, 1960, 1964 and 1976) வழங்கப்படவில்லை.எதேனும் தவறு இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Monday, November 10, 2008

என் பெயர் எஸ்கோபர்

பா.ராகவன்

தீவிரவாத இயக்கங்கள், குற்றவாளி, அரசியல் அமைப்பு பற்றிய குறிப்புகள் என்று வாசகர்களின் தேடலுக்கு கிழக்கு பதிப்பகம் சங்கம்மாக இருக்கிறது. குற்றவாளிகளை ஹீரோவாக்காமல் அவர்கள் வாழ்க்கையை அப்படியே படம் பிடித்துக் காட்டும் தனி சிறப்பு கிழக்கு பதிப்பக நூல்களுக்கு உண்டு. பா.ராகவன் அவர்கள் எழுதிய 'டாலர் தேசம்', 'பாக்- ஒரு புதிரின் சரிதம்', ‘9/11 : சூழ்ச்சி வீழ்ச்சி மீட்சி’ நூல்களை படித்ததில் இருந்து அவர் எழுத்துக்கள் மீது எனக்கு தனி மரியாதை உண்டு. இந்த நூலும் அப்படி தான். சர்வதேச கடத்தல்க்காரன் ‘பாபிலோ எஸ்கோபர்’ பற்றிய வரலாறு.பெரிய கொள்கையோ லட்சியமோ எதுவுமில்லை. பணம் மட்டும் தான் குறிக்கொள். அதற்காக எதையும் செய்பவன். யாரையும் கொல்ல தயங்காதவன் . நாலாயிரத்து மேற்ப்பட்டவர்களின் மரணத்துக்கு நேரடியாக சம்மந்தப்பட்டவன். கொலும்பியா அரசாங்கத்தை அச்சுருத்திய தனி மனிதன் பாபிலோ எஸ்கோபர்.

கார் திருடனாக தன் வாழ்க்கையை தொடங்கி பிறகு கொகெய்ன் கடத்தலில் ஈடுப்படத் தொடங்கினான். கொலும்பியாவில் இருந்து அமெரிக்காவுக்கும், ஐரோப்பியாவுக்கும் ‘கொகெய்ன்’ கடத்தலில் அதிக லாபம் சம்பாதித்தான். தன் கடத்தல் முகத்தை மறைக்க அரசியலில் இறங்கி எம்.பி யாக பொறுப்பேற்றார். ( நம் நாட்டு அரசியல்வாதிகளுக்கு இவர் தான் முன்னோடி )

தன்னிடம் வேலை செய்யும் ஊழியர்களுக்கு 20 நாள் கேஷூவல் லீவு, ஆறு மெடிக்கல் லீவு. 50 வயதில் ஓய்வுதியம், பி.எஃப், பென்ஷன் போன்ற எல்லா வசதிகளும் உண்டு. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் கடத்தல் தொழிலை கார்ப்பிரேட் நிறுவனத்தை நடத்துவது போல் நடத்திக் கொண்டு இருந்தான். தன் கடத்தலை தடுக்க நினைத்த அரசு அதிகாரி, போலீஸ், நீதிபதி உட்ப்பட யாராக இருந்தாலும் பட்டியல் போட்டு கொளை செய்துள்ளான்.

எஸ்கோபரின் கொகெய்ன் கடத்தலால் அமெரிக்க இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்பட்டனர். அதனால், அவனை கொலை செய்ய சி.ஐ.ஏ மேற்க் கொண்ட நகைச்சுவை நடவடிக்கைகளை அழகாக பா.ராகவன் அவர்கள் சொல்லியுள்ளார்.

எல்லா கடத்தல்க்காரர்களும் ஒரே மாதிரி தான். எஸ்கோபர் மட்டும் அப்படி என்ன பெரிய வித்தியாசமானவனாக இருக்க முடியும் என்று நினைத்தேன். தன் சமந்தப்பட்ட கோப்புகளை அழிக்க எம் - 19 இயக்கத்தின் உதவியுடன் நீதிமன்றத்தை முற்றுக்கையிட்டு, பல நீதிபதிகளை கொன்று கோப்புகளை அழித்தான். பல கடத்தல்க்காரர்களுக்கு அவனுடைய வாழ்க்கை பயணம் தான் 'வெற்றி கைட்' (Guide).

தன் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் முதல் முறையாக அவனுடைய ஒன்பது கோடி ரூபாய் சரக்கு எங்கு போனது என்று அவனுக்கேதெரியாது. அதற்காக கவலைப்படும் அவகாசம் கூட அவனுக்கு இல்லை. Search Bloc சுட்டுக் கொள்ளப்பட்டு பரிதாபமாக இறந்தான்.

தொன்னூறு ஆரம்பத்தில் இருந்த பயங்கரவாத கடத்தல்காரனை பலர் மறந்திருக்க கூடும். என்னை போன்ற புது வாசகர்கள் எஸ்கோபர் யார் என்று கூட தெரிந்திருக்காது. எல்லா வாசகர்களுக்கு புரியும் படி பா.ராகவன் எழுதிருப்பது தான் இந்த நூலின் தனி சிறப்பு. ஆரம்ப முதல் முடிவு வரை ஒரு கதை விளக்குவது போல் நன்றாக விளக்கியிருக்கிறார்.

பக்கங்கள் : 224 ,
விலை : 90.
கிழக்கு பதிப்பகம்

Monday, November 3, 2008

பட்டிமன்றம் : பழமையா ? புதுமையா ?

பட்டிமன்றம் : இன்று மக்கள் பெரிதும் விரும்புவது பண்பாட்டை வளர்க்கும் பழமையா ? இல்லை நாகரிகம் வளர்க்கும் புதுமை ?

நேற்று ( 2 நவம்பர், 2008), எருக்கஞ்சேரியில் 11 மணிக்கு மேலே குறிப்பிட்ட தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. இத்தலைப்பின் நடுவராக 'கவிஞர்' சொர்ணபாரதி அவர்கள் இருந்தார். ‘பழமை’ என்ற அணியில் நானும், 'பேராசிரியர்' வள்ளியும், 'புதுமை' என்ற அணியில் 'ஆனந்தம்' இணை-இயக்குனர் மு. வீரமுத்துவும், 'கவிஞர்' மஞ்சரியும் பேசினோம்.

இந்த பட்டிமன்றம் எனக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்தது. நான் ஒன்றும் சிறந்த மேடை பேச்சாளர் இல்லை. என்னால் முடிந்தளவு பேசினேன். ஒரு சில இடத்தில் கை தட்டல் கிடைத்தது. ( பேச்சை நிருத்துவதற்கான கை தட்டல் இல்லை என்ற நம்பிக்கையில் பேச்சை தொடர்ந்தேன்.)

நான் பட்டி மன்றத்தில் பேசிய சாரம்.

*. 'பட்டிமன்றம்' என்ற விஷயம் 'பழமை' தான். அப்படி இருக்கும் போது 'மக்கள் பெரிதும் விரும்புவது பழமையா ? புதுமையா' என்ற தலைப்பு தேவையா ? என்ற கேள்வியுடன் என் பேச்சை தொடங்கினேன்.

* ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு
‘Old Wine in a New Bottle’
பழைய மதுவை புது கோப்பையில் கொடுப்பது போல் நவீன தகவல் தொடர்பு சாதனங்கள்' தகவல் தொடர்பு' என்ற பழமைக்கு தான் பயன்படுக்கிறது.

யுத்தத்துக்கான ஆயுதங்கள் புதுமையாக இருந்தாலும்
யுத்தம் என்பது பழமை தான்
பதிவு திருமணம், பகுத்தறிவு திருமணம் புதுமையாக இருந்தாலும்
திருமணம் என்பது பழமை.

* இன்று சமூதாய சீரழிக்கும் விஷயங்களில் ஒன்று " Living Together”. திருமண ஆகாத ஆண்ணும், பெண்ணும் ஒரே வீட்டில் தங்கி, விருப்பம் இருந்தால் திருமணம் செய்துக் கொள்வார்கள். இந்த புதுமையை நம் சமூகம் ஏற்க்குமா ? நம் பிள்ளைகள் இதை பின் பற்றுவதை நாம் விரும்புவோமா..?

* புதுமை... புதுமை... என்று சொல்கிறார்களே.! என் திருக்குறளுக்கும், கம்பராமாயணத்துக்கும் நிகரான புது நூல் உண்டா என்று சொல்லுங்கள்.

* இந்தியாவில் இவ்வளவு மக்கள் தொகை இருப்பதற்க்கு காரணமே 'சேலை' என்ற பழமையான உடை தான். அந்த பழமையான உடையை பலர் விரும்புவதால் தான் 'ஒன் மினிட்' புது புடவை வந்தது.

* இந்திய தம்பதிகளுக்கு பிறந்த மனோஜ் என்பவர், " Sixth Sense " என்ற படத்தை இயக்கி வெளியிட்ட போது பல பத்திரிக்கைகள் அவரை பாராட்டியது. அவர் மறக்க முடியாத பாராட்டு என்று அவர் சொன்னது 'தன்னை ஹிச்காக்குடன் ஒப்பிட்டது தான்' என்றார். புது இயக்குநர் கூட பழைய இயக்குநரின் விசிரியாக இருக்கிறார்.

* இன்று இலங்கை தமிழர்களுக்கு நாம் குரல் கொடுக்கிறோம் என்றால் நம் பாரதி நமக்கு கொடுத்த தமிழ் பற்று தான் காரணம். இந்த புதுமை நமக்கு தமிழ் பற்றா கொடுத்தது ?

* இன்று இருக்கும் பொருளாதார வீழ்ச்சியில், பழைய பொறியியல் படிப்பானா ' Mechanical, Electrical, Civil Engg.' படித்தவர்கள் அதிகம் பாதிக்க படவில்லை. புது படிப்பு படித்தவர்கள் தான் பெருமளவு பாதிக்கப்பட்டார்கள் என்று நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

* இறுதியாக...
பழமை என்பது கலிமண் மாதிரி ! நமக்கும், சுற்றுப்புறத்திற்கும் நல்லது தான் செய்யும். ஆனால், புதுமை என்பது பிளாஸ்டிக் மாதிரி ! நம்மையும், சுற்றுப்புறத்தையும் பாதிக்கும் என்று கூறி என் உரையை முடித்துக் கொண்டேன்.

நடுவர் சொர்ணபாரதி அவர்கள் தன் உரையை முடித்த பிறகு 'பழமைக்கு' சாதகமாக தீர்ப்பு வழங்கினார். நான் சிறப்பாக பேசினேன் என்று பலரும் என்னை பாராட்டினர். எனக்கு மேடை பேச்சு வரும் என்று நேற்று தான் புரிந்துக் கொண்டேன்.

Wednesday, October 15, 2008

அரங்க மின்னல்கள்

'மயிலாடுதுறை' இளையபாரதி

நம் உரத்தசிந்தனை மாத இழதல் சார்பில் 'மயில்டுதுறை' இளையபாரதி எழுதிய 'அரங்க மின்னல்கள்' கவிதை நூல் வெளியிட்டு விழாவில் கலந்துக் கொண்டேன். அந்த நூலை வாங்கியும் படித்தேன். ஒவ்வொரு அரங்கத்தில் பரிசு, விருது வாங்கி தந்த கவிதைகளை நூலாக தொகுத்துள்ளார். சங்கக்கவி பிபாகரபாவு அவர்கள் அணிந்துரை எழுதியுள்ளார். இதற்கு முன் 'நிழலுதிர் நேரம்' (2005), 'நிலவின் புன்னகை' (2006) - இரண்டு கவிதை நூல்களை எழுதியுள்ளார்.

இந்த நூலில் எல்லா கவிதைகளும் ரசிக்க கூடியவை. இதில் எனக்கு பிடித்த வரிகள்....

‘இதந்தரும் சுதந்திரம்’ தலைப்பில்
மதிப்பெண்கள் மட்டுமே
குறிக்கோளாய் ஆகுது
மனித நேயப் பண்புகளை
மனதில் வாங்க மறுக்குது !

‘அன்பின்வடிவம் அன்னை தெரசா’ வை பற்றி
வாழ்க்கையை
நீ படிக்கும் வயதில்
வாழ்க்கையே
உன்னிடம் பாடம் கற்றது !

'தண்ணி'யும் தண்ணீரும்’ பற்றி
கர்நாடகம், ஆந்திரத்திடம்
கையேந்தி, நின்றோம்
உன்னால் !
அணையும் திறக்கவில்லை
ஆதரவும் கிடைக்கவில்லை !
ஆனால்,
அங்கிருந்து வரும் எனக்கு
'தண்ணி'க்குப் பஞ்சமில்லை !
- இந்த வரிகள் படித்ததும் சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் இருந்தேன். வருத்தத்திற்குறிய விஷயத்தை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்.

‘மாறாத மாதங்கள்’ கவிதையில் 'அறிஞர்' அண்ணாவை பற்றி
'இவரின் இறுதி ஊர்வல
மக்கள் எண்ணிக்கையே
ஒரு கின்னஸ் சாதனை !

இதுவரை இளையபாரதி கவிதைகள் மட்டுமே எழுதியிருக்கிறார். மேலும், சிறுகதை, கட்டுரை எழுத வேண்டும் என்று இதன் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.


நம்மொழி பதிப்பகம், விலை.60.
கவியரசு கண்ணதாசன் நகர்,
கொடுங்கையூர், சென்னை - 118.

Monday, October 6, 2008

அஸிம் கம்ப்யூட்டர்ஜி

பிஸ்னஸ் வெற்றியாளர் கதையை எழுதுவதில் என்.சொக்கன் நிகர் என்.சொக்கன் தான். அவர் எழுதிய 'அம்பானி', 'சார்லி சாப்ளின்', 'அயோத்தி நேற்று வரை', 'வல்லினம் மெல்லினம் இடையினம்' போன்ற புத்தகங்களை படித்திருக்கிறேன். படிக்கும் போது அதில் ஏற்ப்பட்ட திருப்தியை விட இந்த புத்தகம் படிக்கும் போது அதிகம் திருப்தியாக இருந்தது. காரணம், கல்லூரியில் படிக்கும் போது சேர விரும்பிய நிறுவனங்களில் 'விப்ரோ'வும் ஒன்று. அவர்களின் வெற்றிக்கதையை மென்பொருள் நிறுவனத்தினர் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஒன்று.தந்தை M.H.பிரேம்ஜி மரணத்துக்கு பிறகு 'வனஸ்பதி' வியாபாரத்தின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். 'Western India Vegetable Products Limited' என்ற நிறுவனத்தை 'Western India Products Limited' என்று சுருக்கி, பிறகு 'WIPRO' என்று இன்னும் சுருக்கினார். பிரேம்ஜியிடம் எதையும் எண்களாக பேசுவது தான் பிடிக்கும். எத்தனை டின் வனஸ்பதி விற்பனை ? எத்தனை சதவிகிதம் முன்னேற்றம் ? என்று தான் பேச வேண்டும். (விப்ரோ நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் இதை கவனித்துக் கொள்ளவும்)

பிரேம்ஜி பற்றியும் 'விப்ரோ'வை பற்றியும் பல சுவையான செய்திகள் இந்த புத்தகத்தில் உள்ளன. இதில் எனக்கு பிடித்தது......

1. பிரேம்ஜி தவிர அவர் குடும்பத்தில் யாரும் விப்ரோ நிறுவனத்தில் பணி புரியவில்லை. ( இவர் அரசியலுக்கு வந்தால் நல்ல இருக்கும்.)
2. விப்ரோவின் கம்ப்யூட்டர் தயாரிப்புப் பிரிவுக்கு ஆரம்பக்காலத்தில் 'எலெக்ட்ரானிக்ஸ் பிரிவு' என பெயர் வைத்தனர்.
3. விப்ரோவின் கணினிப் பிரிவு தொடங்கப்பட்ட புதிதில் அதன் தலைமைப் பொறுப்பை ஏற்க ஒருவர் வந்தார். பிரேம்ஜியுடன் பணியாற்றுவது சரிப்படாது என முடிவெடுத்து விலகினார். அவர் பெயர் நாராயணமூர்த்தி !
4. எல்லா துறைகளிலும் கால் பதித்த 'விப்ரோ' நிறுவனத்துக்கு 'ரெயின்போ ஃப்ளவர்' (Rainbow Flower Logo) வடிமைத்துக் கொடுத்தவர் ஷோம்பித் சென்குப்தா.
5. GEல் பணியாற்றிய விவேக் பால், 'விப்ரோவில் பணியாற்றி அந்த நிறுவனத்தை முன்னணிக்கு கொண்டுவந்ததில் முக்கிய பங்கு வகித்தவர். இருந்தும், சில கருத்து வேறுபாடால் 2005ல் 'விப்ரோவை' விட்டு விலகினார்.
6. பிரேம்ஜியை முழு வெற்றியாளர் என்று சொல்ல முடியாது. 'விப்ரோ ஃபைனான்ஸ்', 'விப்ரோ ISP' போன்ற நிறுவனங்கள் துவங்கி பல கோடி நஷ்டப்பட்டு முடினார்.
7. "நாம் போட்டியாளர்களை மதிக்க வேண்டும். அவர்களுக்கு மரியாதை கொடுப்பதும் தவறில்லை. பயம் கூட பரவாயில்லை. ஆனால், பயத்தால் போட்டியிலிருந்து பின்வாங்கி விலகி விடக் கூடாது" - என்று பிரேம்ஜியின் முக்கியமான பொன் மொழி.

வனஸ்பதி, சோப்பு, குழந்தைகளுக்கான பொருட்கள், மின்சார உபகரணங்கள், இயந்திரங்கள், மருத்துவக் கருவிகள், கணினி என்று எல்லா துறைகளிலும் விப்ரோ கால் பதித்துள்ளது. எல்லா துறைகளிலும் விப்ரோ இருந்தாலும், எதிலும் அவர்களுக்கு முதல் இடம் கிடைக்கவில்லை. அதே சமயம் கணிசமான நல்ல லாபம் ஒவ்வொரு துறையிலும் கிடைத்துக் கொண்டு வருகிறது.

Neither ‘First’ Nor ‘Worst’ but they are always ‘Best’ ! – ஒரு வரியில் Wipro சொல்லலாம்.

என்.சொக்கன்
பக்கங்கள் : 160, விலை:70
கிழக்கு பதிப்பகம்

Monday, September 22, 2008

லெனின் : முதல் காம்ரேட்

வர வர நான் கம்யூனிஸ்டாக மாறி விடுவேனோ என்ற சந்தேகம் எனக்கே வந்துவிட்டது. கம்யூனிஸ புத்தகங்கள் கண்ணில் படும் போது என்னால் படிக்காமல் இருக்க முடியவில்லை. அதுவும் 'கிழக்கு பதிப்பகம்' நூல் என்றால் சொல்லவே வேண்டாம். படித்து விட்டு தான் மறு வேலை பார்ப்பேன். சரி... இந்த புத்தகத்திற்கு வருவோம்.ரஷ்யர்களால் மட்டுமல்ல... இந்த உலகத்தில் இருப்பவர்கள் யாராலும் மறக்க முடியாத ஒருவர் தான் 'லெனின்' அவர்கள். ஜார் ஆட்சியை ஒழித்து, ரஷ்ய மக்களின் உழைப்புக்கு உருவம் கொடுத்தவர். ஜார் அகராதியில் மக்களுக்கு இன்னொரு பெயர் ‘Serfs’; அதாவது அடிமைகள். நிலங்களை வாங்கும் போதும், விற்கும் போதும் அந்த நிலப் பகுதியில் வேலை செய்யும் அடிமைகளையும் சேர்த்தே விலை பேசுவார்கள்.இந்த நிலைமையை மாற்றியவர்.

captialist, socialist என்று பாகுபாடே இல்லாமல் எல்லோருமே தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய நபர் தான் லெனின்.

அவரை பற்றி இந்த புத்தகத்தில் சில குறிப்புகளை சொல்லியாக வேண்டும்

1.லெனின் சகோதரர் அலெக்ஸாந்தர் ஸிம்பெர்ஸ்க் பல்கலைக்கழகத்திலிருந்து தங்க மெடல் வாங்கியவர். ஜார் மன்னர் கொலை செய்யும் முயற்சியில் தோல்வி பெற்று தூக்கு தண்டனை பெற்றார். அக்காலக்கட்டத்த்லில் ரஷ்யாவில் பள்ளிக்கூடம் நடத்துவது தேசத் துரோகமாக கருதினர். ஆடுகள், மாடுகள், அடிமைகள் கொல்வதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

2.முதல் சந்திப்பிலேயே லெனினை வசீகரித்தவிட்டார் நதேஷ்தா. தன்னுடைய அழகினால் அல்ல. தொழிளார்கள் மீது கொண்ட மெய்யான கரிதத்தால்.

3.லெனின் தொடங்கிய அமைப்பின் பெயர் தொழிலாளி வர்க்க விடுதலைப் போராட்ட ஐக்கியம் (The League of Struggle for the Emancipation of the Working Class)

4.முதலாளித்துவம் எங்கெல்லாம் உச்சத்தில் இருக்கிறதோ, அங்கெல்லாம் இது போன்ற பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதைத் தவிக்க இயலாது என்பதை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டினார்.(இப்போதைய அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி இது தான் காரணமோ !!)

5.லெனினை ஏற்றுக் கொண்டவர்கள் போல்ஷ்விக்குகள் என்றும், எதிர்ப்பவர்கள் மென்ஷ்விக்குகள் என்றும் அழைத்தனர். முதல் உலகப் போரை வெளிப்படையாக எதிர்த்தவர் லெனின்.

6.ஜார் ஆட்சிக்கு பிறகு ஸ்டாலின் தலைமையில் செம்படை (Red Army) அமைத்தார் லெனின்.

7.மொத்தம் 15 கோடி ஹெக்டேர் நிலம் பறிமுதல் செய்யப்பட்டு, குடியானவர்களுக்கு பிரித்துக் கொடுத்து நில புரட்சியை ஏற்ப்படுத்தினார்.

8.மார்ச் 21, 1921 புதிய பொருளாதாரத் திட்டம் (New Economic Policy) நடைமுறைக்கு வந்தது.

ஒரு முறை லெனினை, பன்யா கப்லான் (Fanya Kaplan)என்ற பெண் கொலை செய்ய முயற்சிக்க அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இது எல்லாவற்றிக்கும் மேலாக லெனின் மரணத்தின் போது பேசிதாக கீழ் கண்ட வாசகங்கள் எழுதியது மிகவும் அருமை.

லெனின் மரணத்தின் போது……

நண்பர்கள் கருத்து :
லெனின் நினைவுகள் போது. உடல் வேண்டாம்

எதிரிகள் கருத்து :
லெனினின் நினைவுகள் கூட ஆபத்தானவை. அவர் உடல் அதை விட ஆபத்தானது. எரித்துவிடுங்கள்.

மக்கள் கருத்து :
தோழர் லெனினின் நினைவுகள் வேண்டும். தோழர் லெனினும் வேண்டும்.

அடுத்த இரண்டு மாதங்கள் எந்த கம்யூனிஸ புத்தகங்கள் படிக்க கூடாது என்ற கட்டுப்பாட்டில் இருந்த போது... என் கண்ணில் 'மாவோ' புத்தகம் கண்ணில் பட்டது. நல்ல வேளை வாங்க என் கையில் பணமில்லை. கிரடிட் கார்ட் அந்த புத்தகக்கடையில் வாங்க மாட்டார்களாம். தப்பித்தேன். இன்னும் என் விரதத்திற்கு ஒரு மாதம் இருக்கிறது.

மருதன்.
விலை- 70, பக்கங்கள்- 174
கிழக்கு பதிப்பகம்.

Tuesday, September 16, 2008

'கவிஞர்களின் பார்வையில் அண்ணா' நூலுக்கு - படைப்பை அனுப்புங்கள் !

100 கவிஞர்கள் பங்கேற்கும் சிறப்பு கவிதைத் தொகுப்பு.

இனிய கவிஞரே !

பேரறிஞர் அண்ணாவின் புகழுக்கு மகுடம் சூட்டும் நோக்கில் உருவாக்கப்படவுள்ள கவிதை தொகுப்பு இது.

இக்கவிதைத் தொகுப்பில் நீங்கள் இடம் பெற 24 வரிகளுக்குள் மரபு, ஹைக்கூ, நவீனம், புதுக்கவிதை என் ஏதேனும் ஒரு வகையில் தங்களது கவிதையொன்றை தங்களது புகைப்படத்துடன் இணைத்து அனுப்ப வேண்டுகிறோம்.

சோலை பதிப்பகத்தின் சார்பில் இவ்வாண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள 'பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவில் நூல் வழங்கப்படும். விழாவில் கலந்து கொள்ள இயலாதவர்களுக்கு தபாலில் அனுப்பப்படும்.

முக்கிய குறிப்பு.

1.நூலுக்காக அச்சு செலவு, தபால் செலவு, ராப்பர் டிசைன், நூல் வெளியீட்டு நிகழ்ச்சி என இருப்பதால் கவிதை அனுப்புவோர் ஒரு கவிதைக்கு ரூ.100/- ஐயும் இணைத்து அனுப்ப வேண்டுகிறோம்.
2.காசோலை அல்லது வரைவோலையாக அனுப்புவோர் 'Cholai Printers & Graphics' என்ற பெயருக்கும், மணியார்டர் மூலமாக அனுப்புவோ 'Cholai Pathipagam' என்ற பெயருக்கும் அனுப்ப வேண்டுகிறோம்.
3.வெளியூரிலிருந்து காசோலை (அ) வரைவோலையை அனுப்புவோ ரூ.50/- கூடுதலாக அனுப்ப வேண்டுகிறோம்.

அனுப்ப வேண்டிய முகவரி :
சோலை பதிப்பகம்
6, பழனி ஆண்டவர் கோயில் தெரு,
பெரம்பூர், சென்னை - 11.
பேசி : 98405 27782, 3297 1331

தனது பேச்சாற்றலால் ஆட்சியைப் பிடித்த வீரராக...
பெரியாரின் கொள்கையினைப் பின்பற்றிய பகுத்தறிவுத் தீரராக...
திராவிட வரலாற்றில் என்றுமே பேரறிஞராக...
தமிழக வரலாற்றில் வாழும் வரலாறாக...
வாழ்ந்த... வாழ்ந்து கொண்டிருக்கிற...
அண்ணாவை போற்றுவோம்... அருந்தமிழால் அலங்கரிப்போம் !

அன்புடன்,
'சோலை' தமிழினியன்.

சோலை பதிப்பகத்தை பற்றி சிறு குறிப்பு இங்கு நான் சொல்லியாக வேண்டும். காரணம், 100 ரூபாய் கொடுத்து நம் படைப்பை அனுப்புகிறோம், நம்மை ஏமாற்றி விட்டால் என்ன செய்வது என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். இது வரை அவர்கள் போட்ட தொகுப்பு நூல்களை பற்றி குறிப்பிட விரும்புகிறேன்.

1. வைகறை காற்று - 'சோலை' தமிழினியன்.
2. அன்புள்ள அப்பா (பாகம் - 1) - தன் தந்தை நினைவாக 68 கவிஞர்கள் எழுதிய 68 கவிதைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. 'கலைமாமனி' விக்கிரமன் அணிந்துரை எழுதியுள்ளார்.
3.அன்புள்ள அப்பா (பாகம்-2) - நடிகர் எஸ்.வி.சேகர், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் போன்றவர்கள் முன்னுரை எழுதியுள்ளனர்.
4. காதல் சொல்ல வந்தேன் - காதல் கவிதை தொகுப்பு நூல்.
5. கதை சோலை - 23 பேர்கள் எழுதிய 23 சிறுகதைகள்.

'வைகறை காற்று ' நூலை தவிர மற்ற எல்லா நூல்களும் எழுத்தாளர்களிடம் 100 அல்லது 200 ரூபாய் பெற்றுக் கொண்டு தான் தொகுப்பு நூல்கள் போடப்பட்டது. மிதி செலவுகளை விளம்பரம், உதவித் தொகை, தன் சொந்தப் பணம் என்று செலவு செய்து தொகுப்பு நூல் வெளியிடுகிறார். அந்த நூலுக்கு அணிந்துரையும் பிரபலங்களிடம் இருந்து பெறுகிறார். எழுதிய எழுத்தாளர்களுக்கு சான்றிதழ் வழங்குகிறார். 100 ரூபாயில் நம் படைப்பு பலர் பார்வைக்கு செல்வதால் உங்கள் படைப்பை தாரளமாக அனுப்புங்கள்.

அன்புள்ள அப்பா (பாகம் - 1), காதல் சொல்ல வந்தேன், கதை சோலை - மூன்று நூல்களிலும் நான் எழுதியுள்ளேன் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

Monday, September 15, 2008

எழுத்தாளர் சுஜாதாவை பற்றி தெரிந்தால் சொல்லுங்கள் !

சுஜாதா அவர்கள் உயிருடம் இருக்கும் வரை நான் அவர் எழுதிய ஒரு கதைக் கூட படித்ததில்லை. அவர் உயிருடன் இருக்கும் வரை என் கண்ணுக்கு வெறும் சினிமாக்காரராக தான் தெரிந்தார். 'பாய்ஸ்' படத்தின் வசனத்தை கேட்டதும் அவர் எழுத்தை படிக்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லை. ஆனால், அவர் இறந்த தினத்தில் வலைப்பதிவர்கள் பலர் இறங்கள் தெரிவித்ததும், பலர் அவர் படைப்பை பற்றி பேசியதும் எனக்கு அவர் ஒரு ஈர்ப்பு ஏற்ப்பட்டது. ஒரு சிலர் பார்ப்பனன் மரணத்திற்கு ஏன் வருந்துகிறீர்கள் என்று எழுதியிருந்தனர். பார்ப்பனியத்தை எதிர்ப்பது தான் பெரியார் வகுத்த பகுத்தறிவு, ஒரு பார்ப்பன்னை தாக்கி பேசி எழுதுவதால் எந்த பயனுமில்லை. பார்ப்பன்னியம் மாறிவிட்டால் பார்ப்பனன் மாறிவிடுவான். சரி... நான் சொல்ல வருவதை விட்டு வேறு எதோ பேச விரும்பவில்லை. நான் சொல்ல விரும்புவது எழுத்தாளர் சுஜாதாவை மட்டும் தான். 'பார்ப்பன’ சுஜாதாவோ அல்லது 'சினிமா' சுஜாதாவோ இல்லை.

என் நண்பர் ஒருவர் 'ஆ...!' மற்றும் 'கற்றதும் பெற்றதும்' நூலை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். நாவலில் எனக்கு ஆர்வம் இல்லாத்தால் நான் பெரும்பாலும் தமிழ் நாவல் படிப்பதில்லை. அன்றைய தினம் பலர் சுஜாதா புகழ் பாடியதில் 'ஆ..!' நாவலை எடுத்து படித்தேன். ஒரு திரில் திரைப்படத்தை பார்த்த திருப்தி ஏற்ப்பட்டது. 'கற்றதும் பெற்றதும்' நூலில் பல தகவல்களை தேகட்டாமல் கதை எழுதுவது போல் எழுதியிருந்தார். அதன் பிறகு அவர் புத்தகங்களை தேடி பிடித்து படிக்க தொடங்கினேன்.

என் இன்னொரு நண்பர் வீட்டில் சுஜாதாவின் 'விஞ்ஞான சிறுகதைகள்' வைத்திருந்தார். 460 பக்கங்கள் கொண்ட நூலை முழு மூச்சில் நான்கு நாளில் படித்து முடித்தேன். அதில், 'ஆகாயம்' என்ற ஒரு சிறுகதை படித்து முடித்த பிறகு அதை பாதியிலையே விட்டுவிட்டதாக எனக்கு தோன்றியது. ஆனால், அவர் எழுதிய இன்னொரு நூலான 'பாரதி இருந்த வீடு' படிக்கும் போது 'ஆகாயம்' கதையின் முடிவை தெரிந்துக் கொண்டேன். இந்த சிறுகதை வானொலி நாடகமாக அரங்கேறியது என்பது இன்னொரு குறிப்பு. 'பாரதி இருந்த வீடு' நூலை படிக்கும் போது சுஜாதாவின் நாடக்கதை ஆசிரியர் உருவத்தை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

அடுத்து கணேஷ், வஸந்த் கதாப்பாத்திரங்கள் கொண்ட 'விபரீதக் கோட்பாடு' (குறுநாவல்) நூல் என்று சுஜாதாவின் படைப்புகளை ரசித்து படித்ததை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம். திடீர் ஈடுபாடு வந்த எனக்கே அவர் நூல் மீது இவ்வளவு ஈர்ப்பு வரும் போது அவர் வாசகர்கள் பற்றி கேட்டால் இன்னும் பல செய்திகள் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

அவரை பற்றி தொகுப்பு நூலே போடலாம் என்ற ஆசை வந்துவிட்டது. சுஜாதாவின் சீனியர் வாசகர்கள் இருக்கும் போது திடீர் வாசகன் என்னால் முடியுமா என்ற பயமும் உள்ளது. சுஜாதாவை பற்றி உங்களுக்கு தெரிந்த சில குறிப்புகளை சொல்லுங்கள்.

'நடைபாதை' நூல் வெளியீட்டு விழா !

செப் 14 (நேற்று), ஞாயிறு மாலை 6:00 அளவில் ‘நாடைபாதை’ நூல் வெளியீட்டு விழா இக்சா மையத்தில் (எழும்பூர்) சிறப்பாக தொடங்கியது. தமிழ் தாய் வாழ்த்து பாடலை ஜெகதீஸ்வரன் பாடி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முதல் நிகழ்ச்சியாக ‘கவிதை போட்டி’ நடைப்பெற்றது. இதில், கவிஞர்.சுப சந்திரசேகர் அவர்கள் வெற்றி பெற்றார். 'கலைமாமனி' விக்கிரமன் அவர்கள் அவருக்கு 100 ரூபாய் பரிசு வழங்கினார்.

கவிதை போட்டி முடிந்தது, விக்கரமன் அவர்கள் 'நடைபாதை' நூலை வெளியிட முதல் பிரதியை ராஜ ரத்தினம் அவர்கள் பெற்றுக் கொண்டார். 'போதிகை' உதயராம், துருவன், ‘இதயகீதம்’ ராமானுஜம் அவர்கள் நூலை பெறு வாழ்த்துரை வழக்கினர். 'முனைவர்' கஸ்தூரி ராஜா அவர்கள் நூலை திறனாய்வு செய்து பேசினார். நிகழ்ச்சியின் சில செலவுகளை ஏற்றுக் கொண்ட 'Bigtop Travels' நிறுவத்திற்கும், நூலை வெளியிட்ட வனிதா பதிபக்கத்திற்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. ‘Bigtop Travels’ சார்பில் உரிமையாளர் ஜெ.ரமேஷ் அவர்களும், 'வனிதா பதிப்பகத்தின்' சார்பில் பேராசிரியர் டாக்டர். பெரியண்ணன் அவர்களும் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் விக்கிரமன் அவர்கள் எழுதிய இரண்டு நூல்களை எனக்கு பரிசாக அளித்தார்.

நெற்றைய நூல் வெளியீட்டு நிகழ்ச்சி என் வாழ்க்கையில் மறக்க முடியாத பொண்ணான நாளாக கருதுகிறேன்.

Thursday, September 11, 2008

கமான் அப்புசாமி கமான் !

ஜ.ரா. சுந்தரேசம் இயற்பெயர் கொண்ட பாக்கியம் ராமசாமி அவர்கள் குமுதம் பத்திரிக்கையில் 37 ஆண்டுகளாக உதவி ஆசிரியராகவும், துணை ஆசிரியராகவும் பணிபுரிந்துவர். அப்புசாமி - சீதாப்பாட்டி கதாப்பாத்திரங்கள் பெற்றி பேசினாளே எழுதியவர் பாக்கியம் ராமசாமி தான் என்று எல்லோருக்கும் தெரியும். இந்த கதாப்பாத்திரங்களின் நகைச்சுவை அந்த அளவிற்கு பிரபலம்.

தமிழில் நகைச்சுவை கதைகள் பற்றி ஆய்வு செய்ய நினைத்தால், அதில் நிச்சயம் பாக்கியம் ராமசாமி அவர்கள் எழுதிய நூல்கள் இடம் பெற்று இருக்கும். ஒவ்வொரு கதையிலும் அப்புசாமியை வறுத்து எடுப்பதும், சீதாப்பாட்டி ஆங்கில கலந்த தமிழ் பேசுவதும் நமக்கு சிரிப்பு வர வழைக்கிறது. பீமாராவ், கீதாப்பாட்டி, வித்தைக்காரன், பட்லர், உஸ்காத்கான் என்று ஒவ்வொரு கதைகளிலும் ஒரு காதாப்பாத்திரங்களை அறிமுகப்படுத்தி படிப்பவர்களை சிரிக்க வைக்கிறார்.

இந்த நூலில் எனக்கு மிக பிடித்த நகச்சுவை கதை அப்புசாமி வித்தைக்காரனிடம் மாட்டி கொண்டு தவிக்கும் கதை தான். வித்தைக்காரன் தன் கையில் இருக்கும் காகிதத்தை அப்புசாமி கொண்டு பதில் சொல்ல வைப்பது படு ஜோரான காமெடி. இன்னொரு கதையில், இசை கச்சேரியில் அப்புசாமி ஏப்பம் விடும் போது இசை கலைஞர் உஸ்காத்கான் கீழ் ஸ்தாயியை தொட்டுக்காட்டி பாட உதவியதாக கூறுவது நகைச்சுவை ப்ளஸ்.

பட்லருடன் ஒப்பந்த காகிதத்தில் மாட்டுக் கொண்டு அப்புசாமி தவிக்கும் போதும், அதை சீதாப்பாட்டி தன் புத்திசாலி தனத்தால் மீட்பதும் சூப்பர். வெள்ளித்திரையில் வடிவேலு மாட்டிக் கொள்வது போல் அப்புசாமியும் அடிக்கடி மாட்டிக் கொள்கிறார். ஆனால், அப்புசாமி அடிவாங்குவதற்கு முன் சீதாப்பாட்டி காப்பாற்றி விடுகிறார்.

மேலும், அப்புசாமி நகைச்சுவை கதைகளை பற்றி தெரிந்துக் கொள்ள www.appusami.com இணையத்தளத்தை பாருங்கள்.

பாக்கியம் ராமசாமி,
விலை.45, பக்கங்கள் : 186
பூம்புகார் பதிப்பகம், சென்னை - 108

Tuesday, September 9, 2008

செப்.14 'நடைபாதை' நூல் வெளியீட்டு விழா

அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் வரும் ஞாயிறு, செப்டம்பர் 14 ஆம் தேதி நான் எழுதிய 'நடைபாதை' (சிறுகதைகள்) நூல் வெளியீட்டு விழா இக்சா மையம்,(மியூசியம் எதிரில்),எழும்பூர் இடத்தில் நடைப்பெறுகிறது. 'கலைமாமனி' விக்கிரமன் அவர்கள் வெளியீட, 'அரிமா' கே.பி.பத்மநாபன் அவர்கள் பெற்றுக் கொள்கிறார். 'பொதிகை' புகழ் உதயம்ராம், கவிஞர். சுடர் முருகையா, 'முனைவர்' கஸ்தூரி ராஜா அவர்கள் நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார்கள்.

வலைப்பதிவர்கள் வந்து நிகழ்ச்சியை சிறப்பித்துக் கொடுக்கும் படி வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

அன்புடன்,
குகன்.

Monday, September 8, 2008

மோதிப் பார் ! : ஹியூகோ சாவேஸ்

இந்த நூலை படிக்கும் வரை ஹியூகோ சாவேஸ் யார் என்று கூட எனக்கு தெரியாது. ஆனால், இப்போது இவருக்கு ஒரு ரசிகர் மன்றமே அரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த நூலை படித்த பிறகு சாவேஸ் பற்றி நான் தெரிந்துக் கொண்ட விஷயங்கள் :- எந்த வித புரட்சியிலும் இறங்காமல், கெரில்லாத் தாக்குதல் நடத்தாமல் தேர்தல் மூலமாக தான் ஆட்சியை பிடித்தார். பின்தங்கியிருந்த தனது நாட்டை வளரும் நாடாக மாற்றியவர். இருப்பத்தோராம் நூற்றாண்டில் புரட்சிக்கு வேறு கோணத்தை கொடுத்தவர்.
இவர் துணிச்சலை பற்றி இரண்டு சம்பவங்களை சொல்லியாக வேண்டும்.
1.ஐ.நா சபையில் பூஷ்யை “சாத்தான்” என்று தைரியமாக விமர்சித்தவர் ஹியூகோ சாவேஸ் அவர்கள். ஐ.நா.வை பேசாமல் ஜெரூசலமுக்கோ அல்லது வேறு ஒரு வளரும் நாட்டுக்கோ மாற்றிவடலாம் என்று யோசனை கூறியவர்.
2."மூன்று வேளை உணவு கிடைக்காமல் எத்தனையோ அமெரிக்கர்கள் சிரமப்படு கொண்டு இருக்கிறார்கள். மருத்துவ வசதி எல்லோருக்கும் கிடைக்கவில்லை. எத்தனையோ எழைகள் வீடில்லாமல் அலைந்துக் கொண்டு இருக்கிறார்கள். இத்தனை இருக்கு அமெரிக்க 500 மில்லியன் டாலர் பணத்தை ஆயுதம் வாங்க செலவு செய்கின்றது. இந்த பணத்தை மிச்சம் பிடித்தால் அமெரிக்காவில் உள்ள ஏழைகள் மட்டுமல்ல, ஆப்ரிக்காவில் உள்ள ஏழை மக்கள் மறுவாழ்வு பெறுவார்கள்" ஒரு பேட்டியின் போது கூறினார்.

இந்த புத்தகத்தை எடுத்து படித்த முக்கிய காரணம், இதன் மேலட்டையில் காஸ்ரோவுக்கு அடுத்த லத்தின் அமெரிக்க தலைவர் என்று குறிப்பிட்டதால் தான். இவர்கள் இருவரும் சேர்ந்து ரேடியோ நிகழ்ச்சியில் ஒன்றாக பாடினார் என்று படிக்கும் லத்தின் அமெரிக்கர்களின் ஒற்றுமையை காட்டுகிறது. லத்தின் அமெரிக்கா நாடுகளில் இருக்கும் வளங்களை உட்கார்ந்து நின்று அழித்த பெருமை அமெரிக்காவை எதிர்க்கும் இன்னொரு நாயகன் தான் ஹியூகோ சாவேஸ் .

ஒரு நாடு வளர்கிறது என்றால் அமெரிக்கர்களுக்கு வயறு பத்திக் கொண்டு எரியும். காஸ்ட்ரோவுக்கு பிறகு ஹியூகோ சாவேஸ் விஷயத்தில் அமெரிக்காவுக்கு இரத்த கோதிப்பே வந்திருக்கும் என்று நினைக்கிறேன். தன் உள்நாட்டு கலவரத்திற்கு அமெரிக்கா தான் காரணம் என்று ஆதாரத்துடன் நிருப்பித்துள்ளார் (பூஷ் அரசு சாவேஸ் அரசை கவிழ்க்க சி.ஐ.ஏ ஏஜென்டுக்களான எலியட் ஆப்ரம்ஸ் (Eliot Abrams) மற்றும் ஓட்டோ ரிச் (Otto Reich) நியமித்துள்ளனர்). ஹியூகோ சாவேஸ் கொல்ல யோசனை சொன்னவர் ரிவரெண்ட் பாட் ராபர்ட்ஸன் (அமெரிக்க பாதரியார்)

இவரை பற்றி சுவையான சில தகவல்கள் :

1.ஜூலை 24,1983, பொலிவரின் 200வது பிறந்த நாளைக் கௌரவிக்கும் வகையில் MBR 200 (Bolivar Revoltionary Army 200) தொடங்கினார்.
2.La Causa Radical சுருக்கமாக Causa R (1971ல் தொடங்கப்பட்ட இயக்கம்) சாவேஸ் இயக்கத்துடன் இணைந்தது. ஆனால், புரட்சியின் போது இறுதி கட்டத்தின் ஓதுங்கி கொண்டனர். மனம் தளராமல் புரட்சியில் இறங்கி இரண்டு வருடம் சிறை சென்றார்.
3.அரசாங்கம் சந்திக்கும் முதல் பெரும் செலவு இராணுவத்துறை தான். ஆனால், சாவேஸ் தனது இராணுவ வீரர்கள் நாட்டு வளர்ச்சிக்காக பயன் படுத்தினார். மீன் பிடிக்கவும், வீட்டை கட்டிக் கொடுக்கவும், பள்ளிப் பாடம் எடுக்கவும் இராணுவ வீரர்கள் உதவியாக இருந்தனர்.
4.நில சீர்திருத்த சட்டத்தால் 21 நபர்கள் 612289 ஹேக்டேர் நிலத்தை சுருட்டி இருப்பதை கண்டு பிடித்து, அந்த இடங்களை எல்லாம் அரசுக்கு சொந்தமாக்கினார்.
5.வளைகுடா போருக்கு பிறகு சதாமைச் சந்தித்த ஒரே தலைவர் இவர் தான். அவர் வேண்டுக்கொள்ளை ஏற்று OPEC அமைப்பு 25 டாலர் விலையில் இருந்து 60 டாலராக உயர்த்தியது.
6.காஸ்ட்ரோவை முன்னோடியாக கொண்டு ஆட்சி செய்தாலும் இவர் கம்யூனிஸ்ட் இல்லை.
7."மீனுக்கு தண்ணீர் ; இராணுவத்துக்கு மக்கள் " – மாவோ வழி நடப்பவர்.

தன் நாட்டையும் கவனித்துக் கொண்டு அமெரிக்கவையும் சமாளிக்கும் ஒரு போராளியின் வாழ்க்கையை மருதன் அவர்கள் நன்றாக எழுதியுள்ளார். ஒவ்வொரு அரசியல்வாதிகளும் ஹியூகோ சாவேஸ் பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும்.


மருதன் : பக்கங்கள் :126
விலை.60. கிழக்கு பதிப்பகம்

Monday, August 25, 2008

என் நாடு, என் மக்கள், உன் ரத்தம் !

ஜி.எஸ்.எஸ், பக்கங்கள் - 120
தங்கதாமரை பதிப்பகம்,
அடையாறு, சென்னை - 20.

கன்னிமரா நூலகத்தில் எடுத்த நூல்களில் முதலில் இருந்து இறுதி வரைக்கும் படித்த நூல் இது தான் (பெரும்பாலான நூல்கள் பாதியிலேயே அலுப்பு தட்டிவிடுகிறது).’கல்கி’யில் காஷ்மீர் குறித்து குறுந்தொடராக எழுதியதை மேலும் சில பகுதிகளை சேர்த்து நூலாக எழுதியுள்ளார் ஜி.எஸ்.எஸ். அவர்கள். இதை படிக்கும் போது காஷ்மீர் பற்றி தெரியாத உண்மைகளையும், தற்போது உள்ள நிலவரங்களையும் மிக சிறப்பாக எடுத்து காட்டியுள்ளார்.

இந்த குறிப்பிட்டு சொல்ல வேண்டிய வரிகள்...

1.'காஸ்யபுரம்; என்பதை தான் காலப்போக்கில் 'காஷ்மீர்; என்று மாறியதாக கூறுகிறார். சமஸ்கிருதத்தில் 'காஷ்மீர்' என்பதன் அர்த்தம் நீரை வெளியேற்றுதல் போன்ற துணுக்கு செய்திகள் சுவையாக உள்ளன.

2.ஜம்மு காஷ்மீர் சட்டங்களை பற்றி சொல்லும் போது அதிர்ச்சியாகவும், வெடிக்கையாகவும் உள்ளது. இந்தியாவை பொருத்தவரையில் 'காஷ்மீர்' ஒரு ஸ்பெஷல் மாநிலம். இந்திய தேசிய கோடியை எரித்தால் கூட தண்டனை இல்லையாம். காரணம், அவர்கள் சட்டம் தெளிவாக கூறிப்பிடவில்லை.

3.பல விஷங்களில் தனிச்சையாக முடிவு எடுக்க காஷ்மீர் அரசு உரிமை உண்டு. அங்கு வியாபாரம் செய்பவர்களுக்கு ஐந்து வருடத்திற்கு வரி சலுகை உண்டு. வெளிமாநிலங்களில் இருப்பவர்கள் இங்கு நிலம் வாங்க முடியாது. உயிருக்கு உத்திரவாதம் இல்லாத ஊரில் என்ன சலுகை கொடுத்தாலும் யார் தான் வருவார்கள்.

4.600 கோடி ரூபாய் வருமானம் வரும் காஷ்மீரில் 7000 கோடி நிதியை இந்தியா காஷ்மீருக்கு அளித்து வருகிறது. இந்த பணமும் அவர்களுக்கு போதவில்லை என்பது தான் வருத்தம்.

5.வாரிசு அரசியல் கூடாது என்று போராடிய ஷேக் அப்துல்லாவின் மகன் ஃபரு அப்துல்லாவும், பேரன் உமர் அப்துல்லா காஷ்மீர் அரசியலில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்று சுச்சகமாக எழுதியுள்ளார். (நேரு பரம்பரைக்கு அடுத்து அப்துல்லாவின் பரம்பரை வாரிசு அரசியலில் இரண்டாவது இடம் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.)

6.லால் பகதூர் சாஸ்திரியின் மர்மான மரணத்தை இந்திய அமைச்சர்கள் அலட்சிய படுத்தியதை ஒரு செய்தியாக கூறியுள்ளார். இன்னும் கொஞ்சம் விளக்கம் கொடுத்திருக்கலாம்.

இரத்தம் நிறைந்த வரலாறு படைத்த பூமியை பற்றி குறைந்த இரத்ததில் எழுதியிருக்கிறார்.

இந்த எனக்கு ரொம்பவும் பிடித்த வரி

"காஷ்மீர் -இந்தியாவின் தலை மாநிலமட்டுமல்ல... தலைவலி மாநிலம் அது தான்."

Tuesday, August 19, 2008

நடை பாதை

குகன்,
விலை -ரூ40.00,பக்கம்-112
வனிதா பதிப்பகம்,
11, நானா தெரு,
பாண்டி பஜார்,
தி.நகர்,
சென்னை-600 017.
தொலைபேசி: 044-42070663.நூலாசிரியர் பல்வேறு தமிழ் இணைய தளங்களில் எழுதிய இந்த சிறுகதைகள் அச்சின் மூலம் நூலாக்கப்பட்டு இருக்கிறது. நூலாசிரியர் கணினித் துறையில் மென்பொருள் பொறியாளராக இருப்பதால் இந்த நூலில் இருக்கும் பல சிறுகதைகள் கணினித்துறையில் இருப்பவர்களையும் அவர்களுக்கு வரும் பிரச்சனைகளையும் சார்ந்து இருக்கிறது.

இந்த நூலில் இருக்கும் 24 சிறுகதைகளில் பொதுவாக, கணிப்பொறி யுகத்தில் வளர்ந்து வரும் இன்றைய சமுதாயத்தில் அதிகமானவர்களிடம் இருக்கும் எண்ணங்களான வெளி நாடுகளுக்குச் சென்று அதிகமாகப் பணம் சம்பாதித்தல், அதனால் வரும் அடுத்த நாட்டு ஆடம்பர மோகத்தில் தமிழ்ப் பண்பாடுகள் சிதைக்கப்படுதல், வெளிநாட்டில் வசிக்கும் தங்கள் பிள்ளைகளால், இங்கே இருந்து வரும் வயது முதிர்ந்த பெற்றோர்களுக்கு வரும் கடைசி கால எதிர்பார்ப்புகள் அவை கிடைக்காமல் போவதால் வரும் ஏமாற்றங்கள் போன்றவை சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சில சிறுகதைகளில் தற்போதைய சமூகத்தில் இருக்கும் சில குறைபாடுகள் அதனால் வரும் விளைவுகள் என்று இன்றைய சமுதாயத்திற்குத் தேவையான பல விஷயங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது.

சென்னை வனிதா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் குகன் எழுதியிருக்கும் இந்த நடைபாதை (சிறுகதைகள்) நூலில் சமூக மேம்பாட்டிற்கான பல கருத்துக்கள் வலியுறுத்தப்பட்டு இருக்கின்றன. ஆனால் இந்த வலியுறுத்தல்கள் சில இடங்களில் வலிமையில்லாமல் பலவீனமாய்ச் சொல்லப்பட்டுள்ளது. மேலும் சில சிறுகதைகளில் இடையிடையே சிறுகதைக்கான எழுத்து நடையிலிருந்து விலகி நாடக வடிவிலான எழுத்து நடைக்கு மாற்றமாகி பின்பு திரும்ப வருவதாக இருக்கிறது. இது போன்ற ஒரு சில குறைகளை மட்டும் விலக்கி விட்டால் இந்த நடைபாதை கணினித் துறையிலிருப்பவர்களுக்கு மட்டுமின்றி இந்த சமுதாயத்திற்கும் அதன் பண்பாடுகளுக்கும் வழிகாட்டும் சரியான பாதையாக இருக்கும்.

நன்றி : முத்துகமலம்.காம்

Monday, August 4, 2008

எனது கீதைகுகன்.
விலை -ரூ40.00. பக்கம்-112
நாகரெத்னா பதிப்பகம்.
சென்னை.

நான் எழுதிய நூலை பற்றி நானே சொன்னால் எப்படி...? முத்துகமலம் இணையத்தளத்தில் புத்தக பார்வை பகுதியில் இடம் பெற்றுள்ளத்தை இந்த வலைப்பதவில் ஏற்றியுள்ளேன்.

( நூல் பற்றிய சிறு குறிப்பு : மே 26,2006 அன்று "எந்து கீதை" நூல் வெளியீடப்பட்டது. இந்த நூலை நீதியரசர். வேணுகோபால் அவர்கள் வெளியீட, முதல் பிரதியை 'கலைமாமணி' டி.கே.ஸ்.கலைவாணன் அவர்கள் பெற்றுக் கொண்டார். மறைந்த உவமை கவிஞர் சுரதா அவர்கள் இறுதியாக அணித்துரை எழுதியது இந்த "எனது கீதை" நூலுக்கு தான்.)

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இடம் பெறும் கல்வி, முயற்சி, வேலை, உழைப்பு, பணம், அனுபவம், காதல், திருமணம், குழந்தை, நட்பு, காலம், குடும்பம், ஒற்றுமை, வெற்றி தோல்வி, நம்பிக்கை, நகைச்சுவை, மகிழ்ச்சி, கடவுள் என்பது போன்ற 25 தலைப்புகள். இந்தத் தலைப்புகள் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அவசியமான ஒன்றாக இருந்தாலும் இவை ஒவ்வொருவரிடமும் வேறுபட்டுப் போயிருப்பதற்கான காரணம் என்னவாயிருக்கும் என்கிற எண்ணத்தில் நூலாசிரியர் சிந்திக்க முற்பட்டிருக்கிறார். அவருக்கு அவர் படித்த புத்தகங்கள், கிடைத்த நட்பு போன்றவை ஒரு விளக்கத்தைக் கொடுத்திருக்கிறது. அந்த விளக்கங்களை, அனுபவங்களை நூலாக்க முயற்சித்து வெற்றியும் கண்டிருக்கிறார்.

ஒவ்வொரு கட்டுரைக்கும் அவருடைய கருத்தைத் தெரிவிக்கும் நூலாசிரியர் அதற்கு ஆதாரமாக தான் படித்த அல்லது கேட்ட குட்டிக்கதைகள் மற்றும் தனக்கு மின்னஞ்சலில் வந்த கதைகளை இடையிடையே சொல்லி படிப்பதற்குச் சுவையாக்கி இருக்கிறார். இந்நூலில்,

"வேலை" எனும் தலைப்பின் கீழ் வரும் "தனக்கு பெயர் கிடைக்கும் என்பதற்காக செய்ய முடியாத வேலையை எல்லாம் ஒத்துக் கொண்டு இறுதியில் எந்த வேலையும் செய்ய முடியாமல் ஓய்ந்து பொகும் அளவிற்கு உழைக்கக் கூடாது."

"குடும்பம்" என்கிற தலைப்பில் "நாம் செய்யும் வேலை குடும்பத்தை உயர்த்தும்படியாக இருக்க வேண்டுமே தவிர, குடும்பத்தை ஒதுக்கும்படியாக இருக்கக் கூடாது"

"முயற்சி" எனும் தலைப்பில் இடம் பெற்றுள்ள "தோற்பவர்கள் பாதுகாப்பைத் தேடுகிறார்கள். வெற்றி பெறுபவர்கள் வாய்ப்பைத் தேடுவார்கள். தோல்வி என்பது குற்றமல்ல, நம் முயற்சிகளில் உள்ள பிழை."

"ஒற்றுமை" எனும் தலைப்பில் இடம்பெற்றிருக்கும் "என்னதான் தனி மனிதன் சிந்தனை, முயற்சி, தன்னம்பிக்கை என்று சொன்னாலும், சில இடங்களில் சாதித்து வெற்றிகளைக் குவிப்பது ஒற்றுமையான முயற்சிதான்."

"நம்பிக்கை" எனும் தலைப்பில் இருக்கும் "தன்னம்பிக்கை வந்தவுடன் கடவுள் மீது நம்பிக்கை குறைந்து விட்டது. எந்தப் பிரச்சனையானாலும் நானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டேன். கடவுளிடம் சென்று முறையிடுவதைக் குறைத்து விட்டேன்."

-என்கிற வாசகங்கள் நன்றாக இருக்கிறது. இந்த வாசகங்கள் பலருக்கும் பொருத்தமானதாக இருக்கலாம்.

குகன் எழுதியிருக்கும் இந்த "எனது கீதை" நூலை வெளியிட்டுள்ள சென்னை, நாகரெத்னா பதிப்பகம் ஒவ்வொரு தலைப்பையும் தனிப்பக்கத்தில் துவக்காமல் தொடர்ச்சியாகக் கொண்டு சென்றிருப்பதும், பல பக்கங்களில் அதிகமான அளவில் இடம் பெற்றிருக்கும் எழுத்துப் பிழைகளைக் கவனிக்காமல் விட்டிருப்பதும் இந்நூலின் குறைகளாகத் தெரிந்தாலும், நாம் தெரிந்து கொள்ள நிறைய தகவல்களும் இருக்கின்றன.

நன்றி : முத்துகமலம்.காம்

Tuesday, July 15, 2008

லொள்ளு தர்பார்


முகில்,
விலை. 60. பக்கங்கள் : 158
கிழக்கு பதிப்பகம்

இரண்டாவது முறையாக முகில் எழுதிய நூல் இந்த வலைப்பூவில் இடம் பெறுகிறது ( முதல் நூல் 'யூதர்கள்' ). 'தினமணி கதிரில்' எழுதிய நகைச்சுவை கட்டுரைகளை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார். இந்த நூலில் தொடக்கம் முதல் இறுதி வரை முழுக்க முழுக்க லொள்ளு தான். இந்த நூலை சமர்ப்பணம் யாருக்கு என்று பார்த்தால் அந்த 'லோள்ளே வேணாம்' என்று லொள்ளு பண்ணுகிறார்.

லொள்ளுக்காக சினிமாவை எடுத்து அந்த கதையை கலாட்டா செய்யாமல் நம்மை சுற்றி நடக்கும் பல விஷயங்களை எடுத்து லொள்ளு மழை பொழிந்திருக்கிறார். முதல் அத்தியாயமே பத்திரிக்கையில் வரும் நூல் விமர்சனங்களை லொள்ளுக்கு எடுத்துக் கொண்டுள்ளார். சுவாமி சுனாமியானந்தா எழுதிய " மனம் is மனம்" என்ற நூலை லொள்ளு பண்ணும் போது 'விகடனில்' யாரோ மனதை பற்றிய சுவாமியை மனதில் வைத்துக் கொண்டு எழுதியது போல் உள்ளது. ( முகிலுக்கு அவர் மீது என்ன கோபமோ... :) )

பாட்டம் 9 மூவிஸ்யில் தயாரிப்பாளர் கொடுத்த பொட்டியை கை நீட்டி வாங்கி விட்டதால் பத்தாவது இடம் கொடுப்பது என்று சொல்வது படு சுப்பர். 'செல் பேசும் வார்த்தைகள் !" பலர் நிச்சயமாக forward mail ல் படித்திருப்பார்கள். மீண்டும் ஒரு முறை படித்தாலும் தவறில்லை. இதை படிக்கும் பிறகு நம் செல்போனை பார்க்கும் போதெல்லாம் நமக்கே சிரிப்பு வரும். அதே போல் 'மைக் ஸ்பீக்கிங்' அத்தியாயமும் அப்படி தான். மைக் முன் பேசும் போது நம்மால் சிரிப்பை அடக்க முடியாது.

'நடிகை ருசிஷாவுடன் ஒரு நாள்' ( வேறு தலைப்பை வைத்திருக்கலாம். தலைப்பை படித்தவுடன் மனதில் வேறு மாதிரியான சிந்தனை வருவதை கட்டுப்படுத்த முடியவில்லை). "இப்படிதான் இருக்க வேண்டும் எக்ஸாம்" சர்தார்ஜி எக்ஸாம் பேப்பரை நியாபகம் படுத்துகிறது.

லொள்ளு என்று சொல்லும் போது லொள்ளு பண்ணும் அரசியல்வாதிகள் இல்லாமலா ? " ஆட்சியை அமுக்குவது யார்" என்ற கட்டுரையில் 2006 நடந்த தேர்தலில் பங்கு பெற்ற முக்கியமான பிரமுகர்கள் பண்ணிய அலும்புகளை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார். 'தும்பிகளோடு அலையும் துப்பட்டாக்காரி' வரும் எழுத்துபித்தன் பண்ணும் கலாட்டா 'சின்ன கலைவானர்' விவேக் அந்த கதாபாத்திரத்திற்கு சரியா இருப்பார் என்று சொல்லும் அளவிற்கு ஓவராக பேசுகிறார்.

லொள்ளு பண்ண நினைப்பவர்கள் 'லொள்ளு தர்பார்' நூலை படியுங்கள். லொள்ளு நூல் என்பதால் லொள்ளான பார்வை...

Wednesday, July 2, 2008

வரலாறு என்றால் என்ன ?


அ.கருணாந்தன்
விலை.5. பக்கங்கள்: 32
பாரதி புத்தகலாயம்


2007ல் புத்தக கண்காட்சியில் இந்த நூலை வாங்கினேன். சிறிய நூல் என்றாலும், ஒன்றரை வருடம் கலித்து தான் இந்த நூலை படிக்க இப்போது நேரம் கிடைத்தது. புத்தகத்தின் வாங்க 'வரலாறு' இந்ததால் இந்த நூலை வாங்க தூண்டியது. இதில் கூறும் விஷயங்களை படிக்கும் போது அதன் விலை மிகவும் குறைவு தான்.

வரலாறு புதினம் எழுதும் எழுத்தாளர்கள் இந்த நூலை படிக்கும் படித்தால் நிச்சயம் மன உறுத்தல் எற்படும். " நாம் வரலாற்றில் கதாநாயகர்களையும், கதாநாயகிகளையும் பிரமிக்க வைக்கும் அவர்களது சாகசங்களையும் தேடவில்லை. மாறாக உண்மையைத் தேடுகிறோம்" என்று ஒரு இடத்தில் கூறுகிறார். வரலாறு நூல் எழுதுபவர்கள் தங்கள் கதாநாயகர்களின் வெற்றியை மட்டும் குறிப்பிடுகிறார்கள், அவர்களின் தோல்வியை மறைக்கிறார்கள். இன்னொரு இடத்தில் "எந்த கல்வெட்டும் அதை வெளியிட்ட மன்னனின் தோல்விகளையும் தவறுகளையும் பட்டியலிடுவதில்லை" . கல்வெட்டில் கூட சில வரலாறு உண்மைகள் மறைக்க படுவதை துணிச்சலாக சொல்லியிருக்கிறார்.
இதை சொல்லும் எழுத்தாளரின் துணிச்சலை பாராட்டாமல் இருக்க முடியாது.

தற்பெருமை நேர்மையான வரலாறாவதில்லை என்பது உண்மை. அதை நூலின் ஆசிரியராக தெளிவாக கூறுகிறார்.

இந்த நூலின் குறை என்றால் சிறிய நூல் என்பது தான். மிக பெரிய விஷ்யத்தை நான்கு வரியில் சொல்ல முயற்சிக்கிறார். உதாரணத்திற்கு... ஜான்ஸி ராணி ஒய்வூதியத்திற்காக தான் ஆங்கிலேயரை எதிர்த்தார் என்று கூறுகிறார். அவரது வீரம் போற்றுதல் குரியது. ஆனால், அவரது தேசபக்தி, தேசீய நோக்கு கேள்வி கேள்விக்குரியது. சொல்ல வேண்டிய விஷயத்தை சுருக்கமாக சொல்லியிருக்கிறார். இன்னும் சில இடங்களில் ஆரிய்ச் அராஞ்களையும் எழுயுள்ளார். ஆனால், 300, 400 பக்கங்கள் சொல்ல வேண்டிய விஷ்யத்தை 32 பக்கங்கள் சொல்லியிருக்கிறார் என்பது தன் சிறு வருத்தம். இதே நூலை அதிக பக்கங்கள் கொண்டு இன்னும் விளக்கி சொல்ல வேண்டும் என்ற வேண்டுக்கோள்ளை ஆசிரியருக்கு விடுப்போம்.

Thursday, June 12, 2008

'மென் தமிழ்' இதழுக்கு வாழ்த்துக்கள் !!

எழுத்துலகில் கொடிக்கட்டி பறந்தவர்கள் தொடங்கிய பத்திரிக்கை பெரிய அளவில் வெற்றி பெற்றதில்லை. கண்ணதாசன், சுரதா தொடங்கிய சிற்றிதழ்கள் அவர்கள் எழுத்துக்கள் போல் வெற்றி பெற பெறவில்லை. காரணம், ஒரு பத்திரிக்கை அல்லது இதழ் நடத்துவது சிறிய விஷயமில்லை. விளம்பரங்கள், மக்கள் தொடர்பு, வாசகர்கள் போன்ற விஷயங்களில் ஒன்று குறைந்தாலும் வெற்றி பெறுவது கடினம். நஷ்டத்தில் நடத்த முடியாமல் பல ஜான்பவான்கள் எல்லாம் தங்கள் இதழை கை விடுள்ளனர்.

இன்றைய சுழ்நிலையில் பலர் வலைப்பூவில்... தங்கள் கருத்துக்களையும், எண்ணங்களையும் வெளிப்படுத்த மிகவும் உதவியாக உள்ளது. முத்துக்கமலம். காம், தமிழோவியம்.காம், நிலாசாரல்.காம், பதிவுகள்.காம் போன்ற இணைய இதழ்களும் வெற்றிக்கரமாக வலைப்போ பதிவாளர்களை அதிகம் ஈர்த்துள்ளன. வலைப்போ, இணைய இதழ் வரிசையில் மின் இதழ் என்பது புது முயற்சி நிச்சயம் வெற்றி பெறும்.

காகிதங்களை நம்பி அச்சு இதழ் எற்படுத்திக் கொடுக்கும் வாசகர்களை விட இணையத்தளம் அதிக வாசகர்களை எற்படுத்திக் கொடுக்கும் என்பது எந்த விதத்திலும் சந்தேகமில்லை. அதுவும், நமது மின்னஞ்சல் தேடி இதழ்... நினைக்கவே புதுமையாகவும், வரவேற்க்க தக்கதாகவும் உள்ளது. நிலா ரசிகனின் தீவிர ரசிகன் நான். குறிப்பாக அவரது சிறுகதை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் விழியன், ஞானியார், அஸ்ஸாம் சிவா சேர்ந்துள்ளார்கள். இந்த கூட்டனி நிச்சயம் வெற்றி பெறும் வாழ்த்துக்கள் !!!

Thursday, June 5, 2008

சோலை பதிப்பகம் : தொகுப்பு நூலில் ஒரு அம்பானி

சென்ற ஞாயிறுக்கிழமை (மே 25,2008) அன்று சோலை பதிப்பகத்தின் மூன்று நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடந்தது. விழா தலைவராக 'கலைமாமனி' விக்கரமன் அவர்கள் கலந்துக் கொண்டார். சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர் எம்.எஸ். அன்பு, 'கவிஞர்' சுடர் முருகையா மற்றும் பொதிகை நிகழ்ச்சி 'மாறுவோம் மாற்றுவோம்' உதயராம் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

வெளியிட்ட மூன்று தொகுப்பு நூல்களின் தலைப்பு :- அன்புள்ள அப்பா...( இரண்டாம் பாகம்) - கவிதை தொகுப்பு, காதல் சொல்ல வந்தேன் - கவிதை தொகுப்பு மற்றும் கதைசோலை - சிறுகதை தொகுப்பு. மூன்று தொகுப்பு நூல்களில் எழுதிய எழுத்தாளர்களுக்கு சான்றிதழ்களும், நினைவு பரிசும் 'கலைமாமனி' விக்கிரமன் அவர்கள் வழங்கினார்.

இதற்கு முன், 'சோலை பதிப்பகம்' இரண்டு நூல்கள் மட்டுமே வெளியிட்டனர். ஒன்று, 'சோலை' தமிழினியன் எழுதிய 'வைகறை காற்று'. இன்னொன்று 'அன்புள்ள அப்பா' - முதல் பாகம்(கவிதை தொகுப்பு).

இன்று பல பதிப்பகங்கள் வந்து விட்ட நிலையில் DTP வேலை செய்யும் தமிழினியன் அடியெடுத்து வைத்திருப்பது ஒரு வியப்பான விஷயம். இவருடைய வியாபாரம் சிந்தனையும் மிகவும் வித்தியாசமாக உள்ளது. இது வரை வெளியிட்ட நான்கு தொகுப்பு நூல்களிலும் எழுத்தாளர்களிடம் இருந்து பேப்பர், ராப்பர் செலவுக்கு மட்டும் 100 அல்லது 200 ரூபாய் மட்டும் வாங்கியுள்ளார். ஒரு தொகுப்பு நூலில் 80 எழுத்தாளர்கள் இடம் பெறுவதாக இருந்தால் எப்படியும் 8000 ரூபாய் சேர்ந்து விடும். மிதி பணத்திற்கு, தனக்கு இருக்கும் தொடர்புகளிடம் இருந்து விளம்பரம் வாங்கி கொண்டார். தன் கையில் இருந்து பணம் செலவு செய்யாமல் தொகுப்பு நூல்களை வெளியிட்டுள்ளார். விழாவில் விற்பனையான பணத்தில் இருந்து மூன்று குழந்தைகளுக்கு படிக்க நன்கொடை கொடுத்துள்ளார். அவரை பொருத்த வரை 'சோலை பதிப்பகம்' எழுத்தாளர்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும். தொகுப்பு நூலில் பணம் சம்பாதிக்கவும் வில்லை. தன் பணத்தை செலவு செய்ய விரும்பவுமில்லை.

தமிழினியன் சொன்ன தேதிக்குள் அவர் புத்தகத்தை வெளியிட்டு விடுவார். அது மட்டுமில்லாமல், ஒரு எழுத்தாளரின் படைப்பு 80 பேர்களிடம் சென்று அடைக்கிறது. 15 முதல் 20 ஆயிரம் வரை பணம் செலவு செய்து நூல் போடுவதை விட, 100 அல்லது 200 ரூபாய்யில் தொகுப்பு நூலில் இரண்டு பக்கம் வந்தாவது எவ்வளவோ பர்வாயில்லை. நூல் வெளியிட்டு விழா, பிரபலங்களை அழைப்பது போன்ற செலவுகள் எல்லாம் தேவைப்படாது. அதனால், பெரும்பாலான எழுத்தாளர்கள் தொகுப்பு நூலில் எழுதிகிறார்கள்.

தமிழினியன் தொகுப்பு நூல் போடுகிறார் என்றால் அவரை நம்பி எழுத்தாளர்கள் பணம் கொடுக்கிறார்கள். அடுத்து, நான்கு தொகுப்பு நூல்கள் போட போவதாக அவர் கூறியுள்ளார். அவரின் அடுத்த முயற்சியும் வெற்றி பெற வாழ்த்துக்கள் !!

உங்கள் படைப்புகளும் தொகுப்பு நூல்களில் இடம் பெற 98405 27782 என்ற எண்ணுக்கு தொடர்புக் கொள்ளுங்கள்.

சோலை பதிப்பகம்
6, பழனியாண்டவர் கோயில் தெரு,
பெரம்பூரி, சென்னை - 11

Tuesday, May 20, 2008

பழனியப்பா பிரதர்ஸ் : பதிப்புலக சகோதரர்கள்

இன்றைய அவசர உலகத்தில் பதிப்பகம், சிற்றிதழ் என்று நடத்துவது மிகவும் சிரமம். சில கார்ப்பிரெட் நிறுவனங்கள் பதிப்பு உலகில் நுழைந்த பிறகு கொடிக்கட்டி பறந்த சில பதிப்பகங்கள் கூட தள்ளாடிக் கொண்டிருக்கிற நிலையில், திருச்சி தெப்பக்குளம் அருகே இருக்கும் பழனிப்பா பிரதர்ஸ் பதிப்பகம் வெற்றியை பற்றி சொல்லியாக வேண்டும்.

பெரும்பான பதிப்பகங்கள் எடுத்துக் கொண்டால் சென்னையில் இருந்துக் கொண்டு தான் இயங்கி வருகிறது. ஆனால், திருச்சியில் எடுத்துக் கொண்டால் பெயர் சொல்லும் அளவிற்கு இரண்டே பதிப்பகங்கள் தான் உண்டு. ஒன்று அகஸ்தியர் ; மற்றொன்று பழனியப்பா பிரதர்ஸ்.

சமிபத்தில் பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்ட சிறு நூல்களை படித்தேன். எல்லாம் 'அறிவியல் அறிஞர்கள்' பற்றிய வாழ்க்கை குறிப்புகள். ஒவ்வொன்றின் விலையும் 20 ரூபாய் மட்டுமே. பெரிய அளவில் 'மார்கெட்டிங்' இல்லை என்பதே மிக பெரிய குறை. பள்ளி மாணவர்களுக்கு புரியும் வகையில் இந்த நூல்கலை எழுதியுள்ளனர். ஒவ்வொருவரின் வாழ்க்கையை பற்றி படிக்கும் போது கதை படிக்கிற உணர்வை எற்படுத்தியுள்ளனர்.

பழனியப்பா பிரதர்ஸின் பெரும்பாலான வாசகர்கள் மாணவர்கள் தான். அவர்களை மனதில் வைத்துக் கொண்டு தான் ஒவ்வொரு நூலையும் வெளியிடுகிறார்கள். புத்தக வாசிப்பு குறைந்து விட்ட நிலையில், பாட புத்தகங்களை மட்டும் படிக்கும் மாணவர்களை நம்பி நூல் வெளியிடுவது சற்று ஆபத்து தான். ஆனால், எந்த காலத்திலும் இந்த நூல் பயன் படும் என்பதால் பெற்றொர்கள் தன் பிள்ளைகளுக்கு 'அறிவியல் அறிஞர்' பற்றிய நூல்களை வாங்கி தந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

பதிப்புலகில் முதல் இடம் இவர்களுக்கு கிடைப்பது சிரமம் தான். ஆனால், பாதுகாப்பான இடம் இருக்கிறது.

Monday, March 24, 2008

6 (சிக்ஸ்) சிக்மா


விலை.70. சிபி கே. சாலமன்.
கிழக்கு பதிப்பகம்

இன்று வெற்றி பெற்ற பல நிறுவனங்களின் மந்திரச் சொல் - சிக்ஸ் சிக்மா. ‘பிரம்மாண்ட வெற்றியின் ஃபார்முலா சிக்ஸ் சிக்மா’ என்று முன் அட்டையிலும், ‘பாடப்புத்தகம் போல் பாட்டிக்காமல், ரசித்துப் படித்து பயன் படுத்திக் கொள்ளலாம்’ என்று பின் அட்டையிலும் உள்ளது.

முதல் முன்று, நான்கு அத்தியாயத்தில் பள்ளியில் படித்த Standard Deviation (SD), Mean, Mode பற்றி எல்லாம் விளக்குகிறார். அதன் பின் Operation Researchயில் படித்த Chi-Square பணியில் சில டெபில்களும்,Sampling போனறவற்றை குறிப்பிடும் போது ஆங்கிலத்தில் படித்தை தமிழில் படிக்கும் உணர்வு தான் ஏற்பட்டது. இந்த விஷயங்கள் தெரியாதவர்களுக்கு தெளிவாக சொல்லியிருக்கிறார். தெரிந்தவர்கள் படித்தால் தொய்வாக தான் இருக்கும்.

இந்த நூலில் செய்தி சொல்லும் அளவிற்கு கதைகளும் அதிகம். ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்தில் சொல்லும் கதைகளும், செய்தி துணுக்குகளும் மிகவும் சுவாரஸ்யம். இவை எல்லாம் ரசிக்கக் கூடியதாக இருந்தாலும் புத்தகம் படித்து முடிக்கும் போது பாதி தான் படித்தது போன்ற உணர்வு. சிக்ஸ் சிக்மா பற்றி தெரிந்துக் கொள்வதற்காக வாங்கியதில் முழு திருப்தியில்லை.

'பெல்ட் பேர்வழிகள்' அத்தியாயத்தில் கிரீன் பெல்ட், பிளாக் பெல்ட், மாஸ்டர் பிளாக் பெல்ட், சாம்பியன்ஸ் பற்றி படம் போட்டு தெளிவாக விளக்கியிருக்கிறார். DMAIC அத்தியாயத்தில் ஒவ்வொரு பிரிவையும் உதாரணங்களோடு எல்லோரும் புரியும் வகையில் கூறியிருக்கிறார் சாலமன். Risk Plan பற்றி விளக்கும் போது சொல்லும் கதையும், துணுக்கும் மிக அருமை.

ஒரு சில தமிழ் திரைப்படங்கள் முதல் பாதி மெதுவாக நகர்த்திருந்தாலும், இரண்டாவது பாதியில் வேகமாக கதையை நகர்த்தி வெற்றி பெற்றுவிடும். அதே போல் இந்த நூலில் முதல் பாதியில் தெரிந்ததை படிக்கிறோம் என்ற உணர்வு வந்தாலும், இரண்டாவது பாதியில் சிக்ஸ் சிக்மா விஷயங்களை எளிய முறையில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

சிக்ஸ் சிக்மா பற்றி எல்லா செய்திகளும் தர படவில்லை என்று இறுதி பகுதியில் ஆசிரியரே கூறுகிறார். மேலும் சிக்ஸ் சிக்மா பற்றி தெரிந்துக் கொள்ள சில இணையத்தளங்கள் விபரங்களையும் கொடுத்திருக்கிறார். சிக்ஸ் சிக்மா பற்றி அறிமுகமாக தான் இந்த நூல் இருக்கிறது. முழுமையான நூல் இல்லை. எனினும் சிக்ஸ் சிக்மா பற்றி பல ஆங்கில நூல்கள் வரும் வேளையில் தமிழ் வாசகர்களுக்காக இந்த நூலை எழுதியத்திற்கு சிபி கே. சாலமன் அவர்களை பாராட்ட வேண்டும்.

முசோலினி


வெ.சாமிநாத சர்மா
விலை.60., ராமையயா பதிப்பகம்

இரண்டாம் உலகப்போரின் நாயகன் ஹிட்லரின் தோழனாக இருந்த முசோலினியின் வாழ்க்கை சரித்திரம். இந்த நூலை படித்து முடிக்கும் போது முசோலினி வாழ்க்கையை பற்றிய முதல் பாகமாக இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. காரணம், முசோலினி தன் சொந்த மருமகனை கொன்றது, இரண்டாம் உலகப்போரில் ஹிட்லருடன் கூட்டனி செர்ந்தது, ஹிட்லர் இராணுவத்தால் காப்பற்றப்பட்டு ஜெர்மனிக்கு கொண்டு செல்லுதல் போன்ற செய்திகள் எல்லாம் இந்த நூலில் இல்லை. இவ்வளவு ஏன் ? முசோலினி உடல் மக்கள் பார்வைக்கு தொங்கவிட்ட செய்தி கூட இல்லை. முசோலினி வாழ்க்கையில் நடந்த முக்கியமான நிகழ்வுகள் இல்லாமல் முசோலினி வாழ்க்கை சரித்திரம் உள்ளது.

இந்த நூல் முசோலினி ஆரம்ப வாழ்க்கையை மட்டுமே பிரதிபலிக்கிறது. முசோலினியின் படிப்பு, ஸுசர்லாந்தில் வாழ்க்கை, பத்திரிக்கை ஆசிரியர் பொருப்பு, இறுதியாக இத்தாலி சர்வாதிகாரத்தை அடைவது வரை முசோலினி பற்றிய குறிப்புகள் உள்ளன.

முசோலினி பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு இந்த நூல் உதவதாது. ஒரு வேளை இந்த நூல் முதல் பாகம் என்றால் ஏற்றுக் கொள்ளலாம். இதில் முகம் சுழிக்க வைக்கும் விஷயம் என்னவென்றால் சர்வாதிகாரி முசோலினியை கதாநாயகம் அளவிற்கு அலங்கரித்து எழுதியது தான். முசோலினிக்காக வக்காலத்து வாங்குவது போல் தான் இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இந்த நூலி சுவையானதை பற்றி சொல்ல வேண்டும் என்றால் முசோலினி வேளையில்லாமல் கஷ்டப்பட்டு திரிவதை அழகிய கதை படிப்பது போல் இருந்தது. மற்றப்படி பெரிதாக சொல்வதற்கு இந்த நூலில் எதுவுமில்லை.

Tuesday, March 18, 2008

என் பார்வையில் தபூ சங்கர் !

'உண்மையில் என்னை, காதலை தவிர வேறெதுவும் எழுத விடுவதில்லை காதல். நான் எழுத 'இன்னும் இருக்கிறது' என்று வந்துக் கொண்டே இருக்கிறது காதல் !" தன் “தேவதைகளின் தேவதைகள்” நூலின் முன்னுரையில் தபூ சங்கர் காதலை பற்றி சொல்கிறார்.

பொழுதுப்போக்கு, தகவல், செய்தி, தேர்வு இவைக்களுக்காக மட்டுமே புத்தங்கள் படிப்பவர்கள் இருப்பார்கள். ஆனால், 'கவிதை புத்தகம்' மட்டும் இதற்கு விதி விளக்கு... ரசிக்க மனம் இருந்தால் மட்டுமே கவிதை புத்தகத்தை படிக்க முடியும். ரசிக்க மனமில்லாமல் அவசரத்துக்கு படித்தால் கவிதையில் இருக்கும் ஜீவன் புரிவதில்லை. அதுவும் குறிப்பாக 'காதல் கவிதை புத்தகங்கள்' மனதை ரசிக்க தயார் நிலையில் வைத்துக் கொண்டு தான் படிக்க வேண்டும்.

தபூ சங்கர் காதல் கவிதைகள் சற்று வித்தியாசமானவை. படிக்க மனமில்லாமல் அவர் கவிதை படித்தால் கூட நம் மனம் அவர் எழுத்துக்கள் பதிந்து விடும். அவரோடு சேர்ந்து நாமும் காதலை ரசிக்க தொடங்கிவிடுவோம். இன்னும் அழமாக அவர் கவிதைகளை ரசித்து படித்தால் காதலிக்க விருப்பமில்லாதவர்கள் கூட காதலிக்க ஆசை வரும்.

“தேவதைகளின் தேவதை” நூலில் காதல் மேல் அவருக்கும் இருக்கும் ஈடுபாட்டை இந்த கவிதையில் தெரிந்துக் கொள்ளலாம்.

“காதலைப்பற்றி
முழுது தெரிந்து கொள்ளத்தான்
நான் பிறந்திருக்கிறேன்
தெரிந்தும் கொண்டதும்
இறந்து விடுவேன்”


காதலை பற்றி சொல்லும் போது காதலியை வர்ணிக்காமல் இருந்தால் எப்படி ? காதலியின் பிறந்த நாளுக்கு இதை விட சிறந்த கவிதையை காதலிக்க சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

“இன்று
காதால் ஜெயந்தி
முழிக்காதே...
இன்று உன் பிறந்த நாள்....”


காதலியை ஒவ்வொரு முறை சந்திக்கும் போது இப்படி ஒரு கவிதை சொல்லி கொண்டு இருந்தால்.... நம் காதல் என்றும் இளமையாக இருக்கும்.

உன் வெளிச்சம் பட்டு
எனக்கு விழும்
நிழக்கு பெயர் தான்
காதலா ?


தபூ சங்கர் எழுதிய “தேவதைகளின் தேவதைகள்”, “மழையானவள்”, “ எனது கறுப்பு பெட்டி” மூன்று நூலைகளை படித்து இருக்கிறேன். 'விழியீர்ப்பு வீசை' நூலில் இருந்து ஒரு பகுதியை மின்னஞ்லில் வந்ததையும் படித்து இருக்கிறேன். காதலை காதலிக்க காதலி தேவையில்லை....'காதல்' இருந்தால் போதும். தபூ சங்கர் எழுத்துக்களில் நாம் காணலாம்.

காதலை தவிர எதையும் எழுதுவதில்லை என்ற விரதத்தில் இருக்கிறார் என்று தபூ சங்கரை பற்றி நினைத்திருந்தேன். ஆனால், “எனது கறுப்புப்பெட்டி” நூலை படித்தவுடன் அவருக்குள் இப்படியும் பல சிந்தனைகள் உள்ளதா என்று வியக்க வைத்துவிட்டார்.

படித்துக் கிழித்த புத்தங்களை விட
நான்
எழுதி கிழித்த காகிதங்கள் அதிகம்


எழுதுபவர்கள் படிப்பதை விட கிழிப்பது அதிகம் அழகாக கூறியிருந்தார்.

அடுத்து கவிதையில் வரும் பொயக்ள பற்றி அவர் எழுதிய வரிகளில்...

நான் சொல்லுகின்ற பொய்களில்
வளர்கிறது
என் சிந்தனை


இவை எல்லாவற்றிக்கும் மேலாக இந்த கவிதையின் வரிகள் நெஞ்சை தொடும் என்று சொல்வதை விட நெஞ்சை கிழிக்கும் வரிகள் என்று தான் சொல்ல வேண்டும்.

மறக்காமால்
வரும் போது
பிள்ளைகள் சாகும்முன்
தாய்கள் சாகக்கூடாது என்கிற வரத்தை
எந்தக் கடவுளிடமிருந்தாவது பெற்று வந்து
எல்லா அம்மாக்களுக்கும் பிச்சையிடு


சாகா வரம் எல்லா அம்மாக்களுக்கும் கிடைத்து விட்டால் "ஆனாதை" என்ற வார்த்தை இருக்காது.

சினிமாத்துறையில் இருப்பவராக இருந்தாலும், தபூ சங்கரின் கவிதையில் சினிமாத்தனமில்லை.

Saturday, March 8, 2008

யூதர்கள்


முகில்.
விலை ரூ.100, கிழக்கு பதிப்பகம்.

5000 வருட வரலாற்றில் இரத்ததால் எழுதப்பட்ட சரித்திரம். உலகின் மிக பழைமையான மதம் தான் - யுதமதம். ஆனால் அவர்களுக்கு என்று இஸ்ரேல் நாடு உருவானது நவம்பர் 29,1947ல் தான். அதற்கு முன்பு வரை அவர்கள் நாடோடியாக தான் வாழ்ந்தார்கள். தனி நாடு கிடைத்த பின்பும் அவர்கள் பிரச்சனை ஓய்ந்த பாடுடில்லை. இன்றும் பாலஸ்தீனத்துடன் யுத்தம் நடத்திக் கொண்டு தான் இருக்கிறது.

இஸ்லாம் மதம் முன்பே யூதர்கள் தான் கடவுளுக்கு உருவம் இல்லை என்று வழிப்பட்டவர்கள். கிறித்துவ மதத்தினர் வணங்கும் இயேசு ஒரு யூதர். உலகில் எல்லா மூலை முடுக்குகளிலும் இஸ்லாம், கிறித்துவம் பறவிவிட்டது. ஆனால், யூதன் என்றால் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் என்று தான் சரித்திரம் காட்டியுள்ளது.

'யுதர்கள்' - இந்த நூல் நான்கு பாகங்களாக எழுதியுள்ளார் முகில் அவர்கள். யூதாஸ் இயேசுவை காட்டிக் கொடுத்த கதையில் இருந்து நூல் துவங்குகிறது. அந்த ஒருவன்(யூதாஸ்) காட்டிக் கொடுத்ததால் சரித்திரம் யூதர்கள் என்றால் காட்டிக் கொடுப்பவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டது. அதன்பின் பைபிள் காலத்தின் தேவ தூதரான மோசஸ், தாவீத், சாலமோன் ஆலயம் பற்றி மிக அழகாகவும் தெளிவாகவும் கூறியுள்ளார்.

நிகழ்காலத்தில் இஸ்ரேல் - பாலஸ்தீன் பிரச்சனை இருந்தாலும், வரலாற்று சுவடுகளில் நபி அவர்கள் " யூதர்களும் இஸ்லாமியர்களுக்கு இணையாக உரிமை படைத்தவர்களாகவே நடத்தப்படுவர். யூதர்களின் மதச் சுதந்திரத்துக்கு எந்த விதத்திலும் தடையில்லை. அவர்கள் தங்கள் எண்ணப்படி வழிபடலாம். இந்த தேசம் இஸ்லாமியர்கள் யூதர்களோடு கைகோர்த்து உருவாக்கும் தேசம்' என்று தான் கூறியுள்ளார்.

இந்த நூல் யூதர்கள் வரலாற்றூ கதையோடு நிர்க்கவில்லை. அவர்களின் மத நம்பிக்கை, பண்டிக்கைகள், சமூகம், சடங்குகள், இந்தியாவில் யூதர்கள் என்று நான்காவது பாகத்தில் கூறியுள்ளார்.

யூதர்கள் பற்றீய நூல் என்பதால் முழுக்க முழுக்க ஆசிரியர் முகில் அவர்கள் வக்காளத்து வாங்கவில்லை. ஏன் யூதர்களை எல்லா காலத்திலும் வெருக்கப்படுகிறார்கள் ? என்பதையும் இடை இடையே கூறியும் இருக்கிறார். உலகில் உள்ள எல்லா மதங்களை விட தங்கள் மதம் தான் சிறந்தது என்ற எண்ணம் யூதருக்கு உண்டு. உலகத்திற்கு 'வட்டி' என்பதை அறிமுகம் படுத்தியவர்கள் யூதர்கள். 'இருக்க இடம் படுக்க பாய் கேட்கும் குணம்' யூதர்களுக்கு உண்டு. அப்படி தான் ஒவ்வொரு நாட்டிலும் குடி புகுந்து அதன் பிறகு விரட்டப்பட்ட காரணமும் இது தான். 'ஹமாஸ்' தாக்குதலை மிகைப்படுத்தி அமெரிக்க ஆதரவு பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கெட்ட குணங்கள் சொல்லும் முகில், நல்ல குணங்களையும் சொல்லியிருக்கிறார். ஒரு யூதனுக்கு வாய்ப்பு வந்தால் அதை சரியாக பயன்படுத்தி கொள்வார். தான் முன்னேறுவதோடு தன்னுடன் மற்ற யூதர்களை முன்னேற்றும் குணம் யூதர்களுக்கு உண்டு.

இத்தனை யூதர்கள் கொலை செய்ய வேண்டும் டார்கெட் வைத்துக் கொண்டு தான் இன்றும் ஹமாஸ் இயக்கத்தில் சேருகிறார்கள். அன்று முதல் இன்று வரை யாராவது ஒருவர் யூதர்களை அழிபதை லட்சியமாக கொண்டவர்கள் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நூல் யூதர்களுக்கு ஆதரவாகவுமில்லை, எதிராகவுமில்லை. அவர்களை நமக்கு புரிய வைத்திருக்கிறார்கள்.

 
Website Hit Counter
வந்தவர்கள்