Monday, November 24, 2008

கோர்ட் மார்ஷியல்

பி.எஸ்.ஆர்.ராவ்

இராணுவத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிந்த ‘ராவ்’ அவர்கள் இந்திய இராணுவத்தை மையமாகக் கொண்டு, உணர்வு ததும்பும் எழுதிய புதினம் இது. பாகிஸ்தான் தீவிரவாதிகள், யுத்த களம் என்று அதை பற்றி அதிகம் சொல்லாமல் இராணுவ வீரனின் உணர்வுகளை நமக்கு உணர்த்தியிருக்கிறார். மனைவி, குழந்தை என்று பிரிந்து வாடும் இராணுவ வீரன் மனம் எப்படி பாடுப்படும், அவன் மன நிலை எப்படி இருக்கும் என்று மிக அழகாக கூறியிருக்கிறார். அதே சமயம் இராணுவத்திலும் ஊழல் நடக்கும் என்பதை இந்த புதினம் மூலம் சொல்லியிருக்கிறார். கர்னல் சோப்ரா, அவருக்கு ஜால்ரா அடிக்கும் கேப்டன் டேவிட் கதாப்பரத்திரத்தின் மூலம் இராணுவத்தில் இது போன்ற கருப்பு பூனைகள் இருப்பதை சுட்டி காட்டியுள்ளார். கர்னல் சோப்ரா தன் சுயநலத்துக்காக தன் சிப்பாய்களை பன்றியை கழுவ சொல்வதும், தன் குடும்பத்திற்காக வீடு கட்ட சொல்வதும் அவர்களை அடிமைகள் போல் நடத்துகிறார். சிப்பாய்களுக்கு சிறை தண்டனை கொடுக்க உரிமை கர்னலுக்கு இருப்பதால் அவர்களும் பயந்து வேலை செய்கிறார்கள். தங்கள் வருமானத்தை குடும்பத்திற்கு அனுப்ப எவ்வித தடங்களும் வர கூடாது என்பதில் ஒரு சில சிப்பாய்கள் தன்மானத்தை மறந்து கர்னல் சோப்ராவுக்கு வேலை செய்கிறார்கள்.

"கோர்ட் மார்ஷியல்" நாவல் - விரு விருப்போ, திருப்பங்களோ கொண்ட நாவல் இல்லை. இராணுவ வீரரின் உணர்வுகளின் பிரதிபலிப்பு. மேஜர் சங்கர் என்பவர் தன் உயர் அதிகாரி கர்னல் சித்தாத்தின் மகள் வினிதாவை கற்பழித்து விடுகிறார். வினிதா மேஜர் சங்கருக்கு எதிராக இராணுவ கோர்ட்டில் வழக்கு போடுகிறாள். மேஜர் சங்கர் எதிராக ‘கோர்ட் மார்ஷியல்’ விசாரணை நடக்கிறது. அந்த சமயத்தில் சங்கர் எழுதிய டைரியை மேஜர் பிள்ளை என்பவர் வினிதாவிடம் கொடுக்கிறார். அடுத்த நாள் கோர்ட் மார்ஷியலில் சங்கருக்கு எதிராக சாட்சி அளிக்க வேண்டிய வினிதா, சங்கரின் டைரியை படிக்கிறாள். அந்த டைரியை படித்த பிறகு என்ன முடிவு எடுக்கிறாள் ? கோர்ட் மார்ஷியலில் என்ன வாக்குமூலம் கொடுத்தாள் ? என்பது தான் இறுதி அத்தியாயம்.

இந்த நாவலில் எழுபத்தியைந்து சதவீதம் முழுக்க சங்கரின் டைரி தான். தன் இராணுவ வாழ்க்கையை பற்றியும், அவன் சந்தித்த நபர்கள் பற்றியும், ஒரு பெண்ணை கற்பழிக்கும் அழவிற்கு தன்னை எப்படி மிருகமாக மாற்றியதை பற்றியும் விளக்கியிருக்கிறார். தன் உயர் அதிகாரி கர்னல் சோப்ரா தன்னை கேவலமாக நடத்துவதில் மன வேதனை உள்ளாகிறார். ஒரு முறை சிப்பாய் கோராலால் என்பவர் தன் இரு உயர் அதிகாரிகளை கொன்று விடுகிறான். கர்னல் சோப்ரா சங்கரை அந்த கொலை விசாரணை நடத்தி, பதிவு செய்த 'சம்மரி ஆப் எவிடன்ஸ்' ரிப்போர்டை கொடுக்க சொல்கிறார்.

சிப்பாய் கோராலால் தன் குழந்தை பிறந்ததற்கு விடுமுறை கேட்டுயிருக்கிறார். ஆனால், கிடைக்கவில்லை. குழந்தைக்கு உடல்நலம் சரியில்லை என்று விடுமுறை கேட்டார், அதற்கும் கிடக்கவில்லை. இறுதியில், தன் குழந்தை இறந்ததற்கு விடுமுறை கேட்டும் கிடைக்காத போது மனதளவில் பாதிக்கப்படுகிறார். அந்த சமயத்தில் கோராலாலில் உயர் அதிகாரி அவனை வேலையை செய்ய கட்டாயப்படுத்த, அவரின் மனவேதனை வெறியாக மாறி அவரை கொலை செய்து விடுகிறார். கோராலால் ஆதரவாக 'சம்மரி ஆப் எவிடன்ஸ்' ரிப்போர்டை சங்கர் தயார் செய்த போது பாராட்டு பதிலாக சோப்ரா அவரை திட்டுகிறார். இதனால், சங்கர் மேலும் மனவேதனை அடைகிறார்.

யுத்தம் இராணுவ வீரனை உடல் அளவில் மட்டுமல்ல மனதளவிலும் பாதிக்கிறது என்பதை இந்த நாவல் உணர்த்துகிறது.

யுத்ததில் தான் இறக்கப் போகிறோம் என்ற மனநிலையில் இருந்த போது தான் வினிதாவை கற்பழித்திருகிறார். ஐந்து வருடங்களாக அடக்கி வைத்த ஆண்மை உணர்ச்சியை வினிதாவிடம் தீர்த்துக் கொண்டார். தான் இறக்கும் முன் ஒரு பெண்ணையாவது அனுபவிக்க வேண்டும் என்ற மனநிலை இருந்ததாக எழுதியிருந்தான். சங்கரை காவலில் வைத்திருக்கும் மேஜர் "எத்தனையோ இராணுவ வீரர்கள் பெண்களை கற்பழித்த பிறகு அவர்களை கொலை செய்து விடுகிறார்கள். நீங்கள் வினிதாவை கொலை செய்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது " என்று கூறிகிறார். நாட்டை காக்கும் இராணுவ வீரர்களின் மறு உருவத்தை இந்த புதினம் மூலம் சொல்லியிருக்கிறார்.

“ இது யுத்தகளம். இங்கு தேவர்களும், தேவதைகளும் உலாவி வருவதில்லை. பேய்களும், பிசாசுகளும் தான் வாந்து வருகின்றன.” - யுத்தக்களத்தை பற்றி நல்ல வர்ணனை வரிகள்.

வாழ்க்கையில் நிறையத் துன்பங்கள், அவமானங்கள், சோதனைகள், ஏமாற்றங்கள் போன்றவைகளை நீண்ட காலத்திற்கு அனுபவித்தவர்களால் தான், மனித இனம் பயன்படும்படியான நிறைய செய்திகளைக் கொண்ட சிறந்த நூல்களை எழுத முடியும். ரஷ்ய நாட்டச் சேர்ந்த அலெக்ஸாண்டர் ஸோல் ஜினிட்ஸின், ஸ்டாலின் ஆட்சியின் போது மிகுந்த குளிர்ப் பிரதேசமான சைபீரியாவுக்கு அனுப்பப்பட்டு, நிறைய அவமானங்களும் சித்திரவதைக்கும் உட்படுத்தப்பட்டார். அங்கு அவருக்குக் கிடைத்த அனுபவங்கள், உலகமே மெச்சும் எழுத்தாளராக அவரை உயர்த்த உதவின. அவருக்கு இலக்கியத்திற்காக நோபல் பதக்கம் வழங்கப்பட்டது. பிரச்சனைகளில் நிறைய படிப்பினைகள் மறைந்திருக்கின்றன. அதே போல், பி.எஸ்.ஆர்.ராவ் அவர்களுக்கு என்ன அனுபவம் கிடைத்தோ என்று தெரியவில்லை. உணர்வு பூர்வமான கலைப்படத்தை பார்த்த திருப்தி ஏற்ப்படுகிறது.


முகவரி

நற்பவி பிரசுரம்,
விலை.80, பக்கங்கள் : 256
தி.நகர்,
சென்னை -17.

No comments:

 
Website Hit Counter
வந்தவர்கள்