Wednesday, December 31, 2008

இந்த வருடம் நான் உருப்படியாய் செய்தது

எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் அதிகம் புத்தகம் படித்தேன். இந்த வருடத்தில் நான் படித்த புத்தகங்கள்.

சுஜாதா -
- ஆ...
- விஞ்ஞான சிறுகதைகள்
- விபரீத கோட்பாடு
- பாரதி இருந்த வீடு
- 24 ரூபாய் தீவு
- நேனோ டெக்னாலஜி

பாக்கியம் ராமசாமியின்
- 'நகைச்சுவை சிறுகதைகள்'
- கமான் அப்புசாமி கமான் !

எஸ்.ராமகிருஷ்ணனின்
- அரவான்
-துணையெழுத்து
- நெடுங்குருதி

முகில்
- லொள்ளு தர்பார்
- லொள்ளு காப்பியம்
- யூதர்கள்
- அக்பர்
- ஔரங்கசீப்


மருதன்
- லெனின் : முதல் காம்ரேட்
- மோதிப் பார் ! : ஹியூகோ சாவேஸ்
- விடுதலை புலிகள்
- திப்பு சுல்தான்
- பவுத்த மதம்


'சோலை' தமிழினியன்
- கதைசோலை
- காதல் சொல்ல வந்தேன்
- அன்புள்ள அப்பா ( முதல் பாகம்)


'கலைமாமனி' விக்கிரமன்
- சிறுகதை களஞ்சியம் (5வது தொகுதி)
- சோமதேவரின் உயில்

சுப்பிரமனியன் சந்திரன்
- அசரீரி

பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தின் ‘அறிவியல் அறிஞர்’
- ஆல்ப்ரெட் நோபல்
- சர் வாட்ஸன் வாட்
- மைக்கேல் ஃபாரடே


ஞாநி - ‘நெருப்பு மலர்கள்’
ஜெயமோகன் - கண்ணீரை பின் தொடர்தல்
சாரு நிவேதா - ஸீரோ டிகிரி
சா. கந்தசாமி - 'விசாரணைக் கமிஷன்'
நாகூர் ரூமி - HIV : கொல்லப் பிறந்த கொடுங்கோலன்
அருமையார் - திராவிடம் கண்ட தேய்பிறை
பி.எஸ்.ஆர்.ராவ் - கோர்ட் மார்ஷியல்
'முனைவர்' கு. ஞானசம்ந்தன் - பரபரப்பு... சிரிசிரிப்பு...
பா.ராகவன் - என் பெயர் எஸ்கோபர்
'மயிலாடுதுறை' இளையபாரதி - அரங்க மின்னல்கள்
என்.சொக்கன் - அஸிம் கம்ப்யூட்டர்ஜி
ஜி.எஸ்.எஸ் - என் நாடு, என் மக்கள், உன் ரத்தம் !
அ.கருணாந்தன் - வரலாறு என்றால் என்ன ?
சிபி கே. சாலமன். - 6 (சிக்ஸ்) சிக்மா
வெ.சாமிநாத சர்மா - முசோலினி
'லிவிங் ஸ்மைல்' வித்யா - நான் வித்யா
அக்னிஹோத்ரம் ராமானிஜ தாத்தாச்சாரியர் - சடங்குகளின் கதை

பாலு சத்யா - மேரி க்யூரி
க.குணசேகரன் - இருளர்கள்:ஒர் அறிமுகம்
எம்.ஜி.ஆர். முத்து - வள்ளல் எம்.ஜி.ஆர் வரலாறு

நல்லமூர் கோவி.பழனி - அறிவியல் கணித அறிஞர்கள்
ஷேக்ஸ்பியர் – ஒதெல்லோ (தமிழ்)
சிவன் - ஹோமரின் இலியட் (தமிழ்)
சிங்காரவேலு – டால்ஸ்டாய்

சிறு புத்தகங்கள்


தாய் வீட்டில் கலைஞர் - தி.க வெளியீடு
நான் நாத்திகன் ஏன் - பகத்சிங்
ஜாதி ஒழிய வேண்டும் ஏன் ? - 'தந்தை' பெரியார்
இது தான் மகாமகம் - 'தந்தை' பெரியார்


Why I do not belive in God – K.Veermani
Harry Potter and the Deathly Hallows (7th part) - J.K.Rowling
True Story of Jesus


(Bold இருப்பது வாங்கிய புத்தங்கள்
மற்றவை இரவல் மற்றும் நூலகத்தில் வாங்கி படித்த புத்தகங்கள்)

‘மனசாட்சி சொன்னது' (சிறுகதை) - நம் உரத்தசிந்தனை போட்டியில் வெற்றி பெற்றது.

புத்தக வாசகர்களுக்காக உருப்படியான ‘Tamibookreview.blogspot.com’ - ஒரு வலைப்பதிவை தொடங்கினேன்.

வலைப்பதிவை நல்ல முறையில் பயன் படுத்தி 'குண்டக்க மண்டக்க' என்ற நகைச்சுவை தொடரை எழுதினேன்.என் நகைச்சுவைக்கு வரவேற்பு உள்ளதை பின்னூட்டத்தில் மூலம் உணர முடிந்தது.

‘நடைபாதை’ (சிறுகதை) நூலை வனிதா பதிப்பகம் மூலம் வெளியிட்டேன்.

கலீலியோ கலிலி, ரைட் சகோதரர்கள், இலங்கை - மூன்று சிறு நூல்களை எழுதி முடித்தேன்.

'எழுதி முடித்துவிட்டேன்' என்று நினைத்த நூல்களை, தகவல் குறைவாக இருப்பதால் மீண்டும் எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

எட்டையப்புரத்தில் நடந்த இலக்கிய சந்திப்பும், நடேசன் பார்க்கில் பதிவர் சந்திப்பும், கிழக்கு பதிப்பகத்தின் மொட்டை மாடி கூட்டம் போன்ற நிகழ்ச்சிகள் என்னால் மறக்க முடியாதவை.

மறக்க நினைக்கும் நிகழ்ச்சிகளை பதிவில் போட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்ள விரும்பவில்லை.

அடுத்த வருடம் ஆங்கில புத்தகங்களும் அதிகமாக படிக்க வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறேன். நல்ல படைப்புகளை படைக்க வேண்டும், குறிப்பாக நகைச்சுவை கட்டுரையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பத்திரிக்கையில் எழுதும் வாய்ப்பை தேட வேண்டும். இது தான் என் புது வருடத்தின் முயற்சி...

அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

Sunday, December 28, 2008

ஷேக்ஸ்பியரின் 'ஒதெல்லோ'

தமிழில் : வை. சண்முகசுந்தரம் M.A.,B.L

ஆங்கில நாடக இலக்கியங்களில் மறக்க முடியாத முக்கிய நபர் ஷேக்ஸ்பியர். இன்று வரை , ஆங்கில நாடக இலக்கியங்கள் எடுத்துக் கொண்டால் ‘ஷேக்ஸ்பியர்’ போன்ற எழுத்தாளரை நாம் தேடிக் கொண்டு இருக்கிறோம். அவர் எழுதிய நாடக கதாப்பாத்திரங்கள் காலம் கடந்து வாழ்ந்துக் கொண்டு இருக்கிறார்கள். ரோமியோ, ஜூலியட், ஹெம்லெட், ஒதெல்லோ போன்ற கதாப்பாத்திரங்கள் இன்று வரை வாழ்கிறார்கள். இன்னும் எத்தனை நூற்றாண்டானாலும் ‘ஷேக்ஸ்பியர்’ தன் கதாப்பாத்திரங்கள் உருவத்தில் வாழ்வார்.

ஷேக்ஸ்பியரின் 'ஒதெல்லோ' வும் காதல் கதை தான். படிக்காத பாமரன் கூட ரோமியோ, ஜூலியட் கதாப்பாத்திரங்கள் பற்றி சொல்லுவான். இந்த இரண்டு கதாபாத்திரங்களும் மிக பிரபலம். அந்த அளவிற்கு 'ஒதெல்லோ' கதை பெரும்பாலனவர்களிடம் சென்று அடையவில்லை. இரண்டு கதைகளிலும் காதலர்கள் இறந்து விடுகிறார்கள். மற்றப்படி இந்த இரண்டு கதைகளிலும் எந்த வித ஒற்றுமையும் இல்லை.

நீக்ரோ கதாப்பாத்திரத்தை கதாநாயகனாக ஷேக்ஸ்பியர் அவர்கள் எழுதியிருக்கிறார். கருப்பு, வெள்ளை நிற பிரச்சனை இக்காலாத்தில் இருக்கும் போது அப்போது நீக்ரோவை கதாநாயகனாக வைத்து எழுதியிருக்கிறார். ( அவர்க்கு எத்தனை மிரட்டல் வந்ததோ யாருக்கு தெரியும்). இந்த துணிச்சல் தான் பல நூற்றாண்டுகள் கடந்தும் அவர் புகழ் உள்ளது.

'ஒதெல்லோ' நாடகம் வெனிஸ் நகரம், சைப்ரஸ் தீவை சுற்றி கதை நடக்கிறது. துருக்கியர்களுடன் போரில் வெற்றி பெற்று, யுத்த கலைப்பாற தன் காதல் மனைவி டெஸ்டிமோனாவுடன் சைப்ரஸ் தீவில் ஒதெல்லோ தங்கிறார். துணை படைத்தலைவன் கேஸ்ஸியோ மற்றும் அவர் அடுத்த பதவியில் உள்ள இயாகோ ஒதெல்லோவுக்கு உதவியாக தங்கிறார்கள். கேஸ்ஸியோ பதவியை அடைய நினைக்கும் இயாகோ டெஸ்டிமோவுக்கும், கேஸ்ஸியோவுக்கும் கள்ள தொடர்ப்பு இருப்பதாக ஒதெல்லோவிடம் கூறுகிறான். முதலில் நம்ப மறுக்கும் ஒதெல்லோ சிறுக சிறுக இயாகோ வார்த்தை வலையில் விழுகிறான். ஒதெல்லோ பரிசாக கொடுத்த கை குட்டையை டெஸ்டிமோனா தவறுதலாக தொலைத்து விட அதை கேஸ்ஸியோ அறையில் போடுகிறான். ஒதெல்லோவுக்கு மேலும் சந்தேகம் ஏற்படுகிறது.

சந்தேகத்தின் உச்சத்தை தொட்ட ஒத்தெல்லோ தனது காதல் மனைவி டெஸ்டிமோனாவை கொலை செய்து விடுகிறான். கேஸ்ஸியோ மூலம் இயாகோவின் சூழ்ச்சி தெரிய வர தன் மனைவி கொன்ற பாவத்திற்கு தன் உயிரை மாய்த்துக் கொள்கிறான்.

ஷேக்ஸ்பியர் பெரும்பாலான நாடகங்கள் சோகத்தில் முடிவது போல் இந்த நாடகமும் சோகத்தில் தான் முடிகிறது. காலத்தால் அழியாத 'ஒதெல்லோ' நாடகத்தை வை. சண்முகசுந்தரம் அவர்கள் நன்றாக மொழிபெயர்த்துள்ளார். 'தையல் வெளியீடு' இந்த நூலை வெளியிட்டுள்ளது. பல உலக இலக்கிய நூல்களை 'தையல் வெளியீடு' தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருவது குறிப்பிடதக்கது.

முகவரி :

தையல் வெளியீடு
E- 4, முதல் தளம்,
252, செல்லப்பா தெரு,
குயப்பேட்டை, சென்னை - 12.
தலைப்பேசி : 98414 49529 / 93826 77312

Saturday, December 27, 2008

நடேசன் பார்க்கில் பதிவர்கள் சந்திப்பு

இன்றைய 'வலைப்பதிவர்கள் சந்திப்பு' நன்றாக நடந்தது.

இது என்னுடைய முதல் பதிவர் சந்திப்பு என்பதால் இன்று தான் எல்லோரையும் பார்த்தேன். கேபிள் சங்கர், அக்னி பார்வை, லக்கி லுக், டோண்டு, முரளி, ஜியோவ்ராம் சுந்தர் , 'பாலம்' பாலா, மதுரை கணேஷ், அதிஷா என்று ஒரு பெரும் பட்டியலே உண்டு. (எல்லோருடைய பெயரும் என்னால் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை).

முரளி அவர்கள் தன் முதலில் பேசி சந்திப்பை தொடங்கி வைத்தார். முரளி பேசும் போது அதிஷா தன் கையை அசைத்து அவர் பேச கூடாது என்பது போல் சைகை காட்டினார். பிறகு தான் தெரிந்தது அவர் கொசுவை விரட்டுகிறார் என்று...! பலர் இன்று பேசியதை விட கொசுவை விரட்டியது தான் அதிகம். (நான் பதினைந்து கொசுவை கொன்றேன்)

'திருமணம் ஆனவர்கள் படும் கஷ்டங்கள்' என்று முதல் அரை மணி நேரத்துக்கு மொக்கை போட்டோம். இதில் திருமணம் ஆகாதவர்கள் வாய்யை திரக்கவில்லை. 'பாலம்' பாலா, முரளி, கேபிள் சங்கர், மதுரை கணேஷ் போன்றவர்கள் தங்கள் கருத்துக்களை சொன்னார்கள்.( ஒரு சில கருத்தில் நண்பர்கள் அனுபவம் என்று தங்கள் சொந்த அனுபவத்தை பேசியது போல் இருந்தது).

அடுத்த தலைப்பு...'அரசியல்'. தி.மு.க, அ..தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ் என்று எல்லா கட்சிகளின் இன்றைய நிலவரத்தை பற்றி பேசினோம். கலைஞர், ஈழ தமிழம் பற்றி பேசும் போது ஒருவர் எங்களையே பார்த்துக் கொண்டு இருந்தார். ( யாராவது புலிகளுக்கு ஆதரவாக பேசி விடுவார்களோ !, உள்ளே சென்று விடுவோமா ! என்ற பயம் உள்ளூர இருந்தது.)

சில வருடங்களுக்கு முன்பு 'அந்த' மாதிரி புத்தங்கள் தேவி தியேட்டர் வெளியே விற்பதை பற்றி லக்கி லுக் கூறினார்.இப்போது 'அந்த' புத்தங்கள் அதிகம் விற்க்கப்படவில்லை என்பதை மன வருத்ததுடன் சொன்னார். தன்னிடம் பித்தியேக கலேக்ஷனாக 20,25 புத்தகங்கள் இருப்பதாக பேசினார். ( நம் வலைப்பதிவர் நலனுக்காக தன் பதிவில் பொடுவார் என்று எதிர்பார்க்கலாம்.) அதே போல், அதிஷா அவர்கள் தன் செல்போனில் இருக்கும் தத்துவ பாடலையும் வலைப்பதிவில் போடுவதாக சொன்னார். (மிக விரைவில் தமிழ்நாடே உச்சரிக்க போகும் பாடல் அதுவாக தான் இருக்கும்.)

ஒரு தியாகி ( முரளி கண்ணன் என்று நினைக்கிறேன்) புன்னியத்தில் எல்லோரும் தேநீர் அருந்தினோம். லக்கி லுக், ஜியோவ்ராம் சுந்தர் வழக்கம் போல் 'சாரு நிவேதா' பற்றி பேச தொடங்கினர். கேபிள் சங்கர், மதுரை கணேஷ் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்கள். எல்லோரிடமும் கை குழுக்கியப்படி விடைப்பெற்றுக் கொண்டேன்.

முகம் தெரியாமல் பின்னூட்டம் எழுதுவர்களையும், பதிவர்களையும் நேரில் பார்க்கும் போது வித்தியாசமான அனுபவமாக தான் இருந்தது. இது போன்ற சந்திப்பு குறைந்தது மூன்று மாதம் ஒரு முறையாவது நடக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

பெயர் விடுப்பட்ட நண்பர்கள் என்னை மன்னிக்கவும்...!

Monday, December 22, 2008

'கவிஞர்களின் பார்வையில் அண்ணா' நூல் வெளியீடு

சோலை பதிப்பகம்

சோலை தமிழினியன் தொகுத்த

'கவிஞர்களின் பார்வையில் அண்ணா'
(100 கவிஞர்கள் பங்கேற்கும் சிறப்பு கவிதை தொகுப்பு)

வெளியீட்டு விழா அழைப்பிதழ் !!!!

நாள் : 28 - 12 - ௧2௨008
மாலை சரியாக 5.30 மணிக்கு
இடம் : இக்சா மையம் (ICSA)
107, பாந்தியன் சாலை,
எழும்பூர், சென்னை - 8

தலைமை :

தமிழ்த்திரு கயல் தினகரன் அவர்கள்
( சேர்மன், சென்னை மாவட்ட நூலகம்)

கவிவேந்தர் கா. வேழவேந்தன்
(முன்னாள் அமைச்சர்)

திரு. மாம்பலம் சந்திரசேகர்
(அதிபர், சந்திரசேகர் பில்டர்ஸ்)

எழுத்தாளர் 'அமுதா' பாலகிருஷ்ணன்
சிறப்பு கவியரங்கில் பங்கேற்போருக்கு பரிசு வழங்கி பாராட்டுரை :

கவிஞர். சுடர். முருகையா
(பொதுச்செயலாளர், அ.இ.த.எ.ச)

சிறப்புக் கவியரங்கம் : 'வருக 2009'
சிறந்த மூன்று கவிதைகளுக்கு தலா ரூ.100 பரிசு.

Sunday, December 21, 2008

பாக்கியம் ராமசாமியின் 'நகைச்சுவை சிறுகதைகள்'

விலை.65, பக்கங்கள். 208

ஒவ்வொரு வாசகனுக்கும் தான் படிக்கும் நூலில் தேவையான செய்திகள், குறிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்த்து தான் படிக்கிறான். பிடித்த எழுத்தாளர் புத்தகம் படிக்கும் போது தனக்கு பிடித்த எழுத்தாளரின் ஒவ்வொரு எழுத்துக்களையும் ரசிக்கிறான். ஆனால், இந்த இரண்டு கருத்துக்களுக்கும் நகைச்சுவை புத்தகங்களுக்கு பொருந்தாது. நகைச்சுவை நூல்களில் இருந்து செய்தியோ அல்லது குறிப்புகளோ யாரும் எதிர்பார்க்க முடியாது. பிடித்த எழுத்தாளரே நகைச்சுவை கதையை எழுதியிருந்தாலும் சிரிப்பு வரவில்லை என்பதை வாசகன் உண்மையை ஒப்புக் கொள்வான். மற்ற தலைப்பில் எழுதிய புத்தகங்களை பற்றி கடுமையாக பேசினால், அவரவர் ரசனை விவாதமாக மாறிவிடும். எழுதியது எதிரியாக இருந்தாலும் நம்மை சிரிக்க வைத்தவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. சிரிக்கும் படி எழுதாமல் 'நகைச்சுவை கதை' என்று சொன்னால், நண்பராக இருந்தாலும் கருத்தை கூறாமல் இருக்க முடியாது. அப்படி ஒரு பெருமை நகைச்சுவை நூல்களுக்கு உண்டு

பாக்கியம் ராமசாமி அவர்கள் நகைச்சுவை கதைகள் எழுதுவதில் பெயர் போனவர். ( நல்ல பெயர் எடுத்தவர் என்று சொல்ல வந்தேன்.... வேறு மாதிரி யோசிக்க வேண்டாம்.). தான் எழுதிய நகைச்சுவை கதைகளை தொகுப்பு நூலாக தொகுத்துள்ளார். ஒரு சில கதைகள் வித்தியாசமாக நடையில் எழுதியிருக்கிறார். உதாரணத்திற்கு, முதல் கதை பாதிக்கும் மேல் கடித போக்குவரத்து மூலம் கதையை சொல்லியிருக்கிறார். அதே போல் 'காண்ட்டீன் கிராஜூவேட்' (தமிழ் தலைப்புக்கு பஞ்சமோ எண்ணவோ) முழுக்க முழுக்க கடிதத்தின் மூலமாகவே முழுக்கதையும் சொல்லியிருக்கிறார். இந்த இரண்டு கதைகளும் நகைச்சுவை கதைகள் என்று மட்டும் சொல்லாமல், வித்தியாசமான நடையைக் கொண்ட கதை என்று சொல்லலாம்.

'பரபரப்பு' மிகவும் ஸ்வாரஸ்யமான கதை. ப்ளாட்டில் நடக்கும் ஒரு நகைச்சுவை சம்பத்தை சொல்லும் போது தொலைக்காட்சி தொடரைப் பார்த்தது போல் இருந்தது. 'ஐந்து பேர் கெடுத்த அற்புதக் கதை' கண்டிப்பாக குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அதன் எழுத்து நடையே சிரிப்பை வரவழைக்கிறது. பேராசிரியர், நாட்டியக்காரி, சிறுவன், தையல்காரன், விஞ்ஞானி என்று ஐந்து பேர்கள் ஒரு கதையை எழுதிகிறார்கள். ஐவரும் தங்கள் வர்ணனை சொல்லும் போதும், அவர்வர் துறையை சார்ந்த வார்த்தைகளை பயண்ப்படித்தை போதும் நம்மால் ரசிக்க முடிகிறது.

இந்த நூலில் பாக்கியம் ராமசாமியின் எழுதிய எல்லா கதைகளும் நகைச்சுவை கதை என்று பொய் சொல்ல விரும்பவில்லை. ஒரு சில கதைகள் தவறி போய் பாக்கியம் ராமசாமியின் நகைச்சுவை நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. 'வெங்காய வடைமேல் காதல்', 'அனுவின் அடிச்சுவட்டில்' போன்ற கதைகள் ஏன் இந்த நூலில் சேர்த்தாளர்கள் என்று புரியவில்லை. அதுவும் 'வெங்காய வடைமேல் காதல்' நகைச்சுவை கதை என்பதை விட கணவன், மனைவிக்கும் இருக்கும் அன்பை உணர்த்தும் கதையாக தான் தெரிகிறது.

இந்த நூல் 2006 பதிப்பித்தாலும், பெரும்பாலான கதைகள் பல வருடங்கள் முன் எழுதியது என்பதை உணர முடிகிறது. உதாரணத்திற்கு ‘ஒரு கை பார்ப்போம்’ கதையில், கணேஷ் கதாப்பாத்திரம் "ஏழாயிரம் பெறுமானமுள்ள வீட்டை மூவாயிரத்துக்கு விற்றேனே" என்று சொல்லும் போதே தெரிகிறது. இந்த காலத்தில் ஏழாயிரத்துக்கு வாடைக்கு வீடு கிடைக்கும். அடையார், டி.நகர் போன்ற இடங்களில் இது கூட சாத்தியமில்லை. நகைச்சுவையான சம்பவங்கள் இருக்கும் அளவிற்கு சில இடங்கள் உரையாடல் நகைச்சுவையாக இல்லை என்று தான் தோன்றுகிறது.

இந்த புத்தகம் படித்து முடிந்த பிறகு நீங்கள் வயறு வலிக்க சிரித்திருப்பீர்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது. (திரைப்படத்தில் வரும் பல நகைச்சுவை காட்சிகளே அப்படி தான் இருக்கிறது). ஆனால், நகைச்சுவை எழுத்தாளர்களில் மிக முக்கியமாக கருதப்படும் பாக்கியம் ராமசாமியின் ஆரம்ப கால நூல் என்ற வகையில் கண்டிப்பாக படிக்க வேண்டும்.

முகவரி

பூம்புகார் பதிப்பகம்
127 ( ப.எண்.63), பிரகாசம் சாலை, (பிராட்வே)
சென்னை - 600 108
தொலைபேசி - 2526 7543

Thursday, December 18, 2008

என்ன செய்யலாம்? - தமிழ்வணிகத்தின் கட்டுரைப்போட்டி

விஷூவல் மீடியா குழுமத்தால் நிர்வகிக்கப்படும் வணிகத் தகவல்களின் பெட்டகம் "தமிழ் வணிகம்" இணையத் தளம். வர்த்தகம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தங்கத் தமிழில் தடையில்லாமல் பரப்புவது எங்களின் முதன்மை நோக்கம். மென்பொருட்கள் உருவாக்கம், இணையத் தள வடிவமைப்பு, பயன்தரும் நட்புத் தளங்களைத் உலகளாவிய தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்வது என "தமிழ் வணிகத்தின்" பணிகள் பரந்து விரிந்துள்ளன. இதோ இப்போது, மற்றொரு புதிய முயற்சியாக இப்போது கட்டுரைப் போட்டியை அறிவிக்கிறது "தமிழ் வணிகம்".

இன்றைய உலகத்தை அச்சுறுத்தி வருகிறது பொருளாதார மந்த நிலை. அன்றாடம், உலகின் பல நாடுகளில் மக்கள் தங்கள் வாழ்வதாரத்தின் ஆணிவேரான வேலையை இழந்து வருகின்றனர். வாழும் வழி தெரியாமல் சிலர் தங்கள் வாழ்க்கையையே மாய்த்துக் கொள்கின்றனர். இத்தகைய சூழலில், எந்தத் தொழில் செய்தால் ஜெயம் பெறலாம்? அதற்குரிய எளிய வழிகள் என்னென்ன? யாரை? எங்கு? எப்படி? அணுக வேண்டும். குறைந்த முதலீட்டில் நிறைந்த இலாபம் சம்பாதிப்பது எப்படி? இப்படி இயல்பாகப் நம்முள் எழும் கேள்விகள் ஏராளம். அவற்றுக்கான விடைகள் உங்கள் மனச் சுரங்கத்தில் மண்டிக்கிடக்கலாம். தொடர்ந்து யோசித்துக் கொண்டே இருப்பதை விட நாலு பேருக்கு வழி காட்டுவது கூடுதல் புண்ணியம். எனவே தயங்க வேண்டாம். சட்டென எழுதத் தொடங்குங்கள் போட்டிக் கட்டுரையை.

பெருகிவரும் தொழில் போட்டியில் வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் ஈர்க்க, அல்லது தனது வலையில் விழவைக்க நினைத்துப் பெரிய பெரிய நிறுவனங்கள் சலுகைகளை அள்ளி வழங்கின. ஆனால், அந்தச் சலுகைகள் சில நிறுவனங்களின் அஸ்திவாரத்தையே ஆட்டங்காண வைத்து விட்டன. தமது தொழில் எல்லையை விரிவுபடுத்த எண்ணி நிறுவனத்தையே தள்ளாட வைக்கும் நிலைக்கு ஆளாகி விட்டனர் பலர். எந்தத் துறையிலும் கரை கண்டவர்கள் யாரும் இல்லை. சில நமக்குத் தெரிந்திருக்கலாம். பல நாம் அறியாமல் இருக்கலாம். அதே சமயம் அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளுக்குள் ஊறிக் கொண்டே இருக்கும்.

எனவே தொழில் முறைகள் பற்றி உங்களுக்கு தெரிந்ததைத் தொகுத்துக் கட்டுரையாக்கி எங்களுக்கு அனுப்புங்கள். உங்கள் படைப்புக்கள் ஆசிரியர் குழுவின் அனுமதியோடு "தமிழ் வணிகம்" இணையத் தளத்தின் முகப்புப் பக்கத்தில் சிறப்புச் செய்தியாக வெளியிடப்படும்.

இப்போட்டிக்கான கட்டுரைகள் சுய தொழிலில் ஈடுபட நினைப்பவர்களுக்கு ஊக்க மருந்தாக அமைய வேண்டும் என்பது எங்கள் விருப்பம். உங்களின் படைப்புக்கள் சிலருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போடும் நெம்புகோலாக அமையலாம்.

இன்னும் என்ன யோசனை? எடுங்கள் பேனாவை. வெளிப்படுத்துங்கள் உங்கள் படைப்பாற்றலை.

விதிமுறைகள் மற்றும் ஆசிரியர் குழு, அனுப்ப வேண்டி கடைசி தேதி மற்றும் முகவரி நாளை தமிழ் வணிகம் செய்தி தளத்தில் தெரியப்படுத்தப்படும்.

புதுமைகளை வரவேற்கும் வாஞ்சையான நெஞ்சத்துக்குச் சொந்தக்காரர்கள் நீங்கள். தமிழ் வணிகத்தின் இந்தப் புதிய முயற்சியை இன்னும் செழுமையாக்கும் யோசனைகளையும் மறக்காமல் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

இப்படிக்கு,

தமிழ் வணிகம்
http://www.tamilvanigam.in/

Wednesday, December 17, 2008

ஞாநியின் ‘நெருப்பு மலர்கள்’

விலை.55, பக்கங்கள். 144
விகடன் பிரசுரம், சென்னை - 2

ஞாநி அவர்களின் பேட்டியை கேட்ட அளவிற்கு அவருடைய எழுத்துக்கள் எனக்கு அதிகம் பரிச்சயமில்லை. அவருடைய சில தொலைக்காட்சி தொடர்களை பார்த்து இருக்கிறேன். நான் வாசித்த ஞாநியின் முதல் நூல் என்றால் அது ‘நெருப்பு மலர்கள்’ தான். அடிக்கடி கலைஞரை தாக்கி பேசுவதாலு ஞாநி மீது அந்த அளவிற்கு ஈடுபாடு வந்ததில்லை. ( எத்தனை பேர் தான் ஆளும் கட்சியை திட்டுவார்கள்). ஆனால், ஒரு பெண்ணியவாதியாக எனக்கு ஞாநியை பிடிக்கும். 'நெருப்பு மலர்கள்' புத்தகத்தை படித்து முடித்த பிறகு ஞாநி எப்பேர் பட்ட பெண்ணியம் சிந்தனை கொண்டவர் என்பதை உணர முடிந்தது.



“ஆங்கிலத்தில் வரலாற்றை குறிக்கும் சொல்லான ' History ' என்பது His Story '. அவன் கதை என்பதியிலிருந்து உருவானது. வரலாற்றில் ‘Her Story’ களுக்கு இடமில்லை.” முன்னுரையில் முதல் வாக்கியத்திலே அசத்திவிட்டார்.

நம் சரித்திர பக்கங்கள் பெண்களுக்கு இடம் அளிக்காமல் மறைந்து, மறந்து போன பெண்களை ‘நெருப்பு மலர்கள்’ நூலின் மூலம் அவர்களை பதிவு செய்தியிருக்கிறார். அவர் இதில் எழுதிய எழுதிய (சொல்லிய) பதினான்கும் கதைகள் அல்ல. உண்மையாக நடந்த நிகழ்வுகள்.

விடுதலை புரட்சி இயக்கங்கள் போராளிகளுக்கு சமைத்துப் போடுவதே பெண்களின் வேலையாக காலத்தில், அதை மாற்றி கையில் தூப்பாக்கி ஏந்தி போராடிய ப்ரீதி, பீனா அவர்கள் குறிப்பிட வேண்டியவர்கள். அதுவும் ப்ரீதி நமது துணை கண்டத்தின் முதல் 'சயனைட்' பெண் என்ற பெயரிலாவது விடுதலை போராட்டங்களில் குறிப்பிட மறந்துவிட்டோம்.

முவலூர் ராமாமிர்தம் அம்மையார் அவர்கள் தாசி குலத்தில் பிறந்து, தேவதாசி முறையை ஒழித்ததை படிக்கும் மெய் சிலிர்க்க வைக்கிறது. ஒரு இடத்தில் புகழ் பெற்ற காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, 'தேவதாசி முறையை ஒழித்தால் கலையும், சங்கீதமும் அழிந்துவிடும்' என்று வாதாடினார். 'தேவதாசியாக இருப்பதற்காக அந்த பெண்கள் பெருமைப்பட வேண்டும்' என்றார். ( அப்போதே காங்கிரஸ் இப்படி தான் யோசிக்கும் போல). அதற்கு முத்துலட்சுமி 'எங்கள் குலத்துப் பெண்கள் இத்தனை காலமாக தேவதாசிகளாக இருந்து அலுத்துப் போய்விட்டார்கள். கனம் உறுப்பினர் வேண்டுமானால் அவர் குலத்துப் பெண்களை இனி இந்தக் கௌரவமான பணியில் ஈடுபடுத்திக் கொள்ளட்டும். எனக்கு ஆட்சேபனை இல்லை' என்று ஒரு போடு போட்டார்.

நம் இந்திய சிவில் சட்டத்தை மாற்றிய ருக்மாவின் திருமணம், வேதம் ஓதிய ராமாபாய், பாலுணர்ச்சியை பற்றி எழுதிய முத்துப்பழநி என்று பல வித்தியாசமான, சரித்திரத்தில் நாம் கேள்வி படாத பெண்களை 'நெருப்பு மலர்கள்' புத்தகத்தில் ஞாநி பதிவு செய்கிறார்.

விஜசாந்தி, ரோஜா வடிவில் தெலுங்கு படத்தில் பார்த்த 'தெலுங்கானா போராட்டத்தை' தனது இறுதி அத்தியாயத்தில் எழுதியிருக்கிறார். தெலுங்கு படத்தை பார்க்கும் போது அவர்களது போராட்டம் எரிச்சலாக இருந்தது. ஆனால், படிக்கும் போது இன்னும் ஆந்திராவில் இப்படி நடக்கிறதா என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. தெலுங்கானா போராட்டத்தை பற்றி தனி புத்தகமே எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.

பின்னைரையில் 'வாசலில் போடப்பட்டிருக்கும் பால் பையை எடுத்து போய் அம்மாவிடமும், செய்திதாளை அப்பாவிடமும் கொடுக்கக் குழந்தைக்கு யார் கற்றுக் கொடுத்தார்கள்.' என்று கவிஞர் வெண்ணிலாவின் கவிதை வரிகளை மேற்க்கொள் காட்டியிருப்பது நல்ல அழகு.

'நெருப்பு மலர்' படித்த பிறகு நான் விரும்பி படிக்கும் எழுத்தாளர்களில் 'ஞாநி'யும் இருக்கிறார்.

Saturday, December 13, 2008

எஸ்.ராமகிருஷ்ணனின் 'அரவான்'

விலை.90. பக்கங்கள் -166

‘அரவான்’ - தமிழக அரசு விருது பெற்ற நூல்.

எஸ்.ராமகிருஷ்ணனின் 'துணையெழுத்து' படித்ததில் இருந்து நான் அவருடைய தீவிர வாசகனாகிவிட்டேன். அவருடைய எழுத்துக்களும், போதை மருந்தும் ஒரே மாதிரி தானோ !! அவருடைய ஒரு புத்தகம் படித்த பிறகு அவருடைய பல புத்தகங்களை தேடி படித்து வருகிறேன். ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறையாவது அவருடைய வலைப்பதிவுக்கு சென்று வருகிறேன். அவருடைய எழுத்துக்களை படிக்க படிக்க அவரையும் சேர்ந்து படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. சரி ! இந்த நூலுக்கு வருவோம்.

'அரவான்' நூல் எஸ்.ராமகிருஷ்ணனின் நாடகத்துறையில் அவர் எழுதிய நாடக கதையை நூலாக தொகுத்துள்ளார். தொலைக்காட்சி ஊடகங்களில் தங்களை தொலைத்து கொண்டவர்கள் மத்தியில், தன்னுடைய அழகான ஒன்பது நாடகங்களை புத்தகமாக எழுதியிருக்கிறார். ஒவ்வொரு நாடகமும் குறும்படமாக எடுத்தாலும் தவறில்லை. ஒவ்வொரு நாடகம் வித்தியாசமான கதை அம்சம் கொண்டது.



புத்தக தலைப்புக் கொண்ட முதல் நாடகம் 'அரவான்'. ஒருவன் மட்டும் நடிக்கும் நாடகம். நம் அன்றாட வாழ்வில் பல மனிதர்கள் தனக்குள்ளே பேசிக்கொள்கிறான். அதை மையமாக வைத்து பாரதத்தில் வரும் அரவான் கதாப்பாத்திரத்தை நாடகமாக உருவாக்கியிருக்கிறார். இறக்கும் முன் 'அரவான்' பாத்திரம் எப்படி எல்லாம் மனதில் புலம்பிருக்கும் என்று பாரதக்கதை சொல்ல மறந்ததை எஸ்.ராமகிருஷ்ணன் 'அரவான்' நாடகம் மூலம் பதிவு செய்திருக்கிறார்.
"கண்களைக் கட்டிக் கொண்ட பிறகு உலகம் காணாமல் போய்விடுகிறது. ஆனால் மனது திறந்துக்கொள்கிறே!"
கண்களை கட்டிக் கொண்டால் மற்றவர்களைக் காண வேண்டியிருக்காது. எல்லா நேரமும் நம்மை நாமே பார்த்துக் கொண்டே இருக்கலாம்" போன்ற வசனங்கள் மிகவும் அழகு.

"பிறந்ததில் இருந்தே கசப்பை எனக்குப் பருகக் கொடுத்த பாண்டவர்களுக்கு விசுவாசத்தைத் திரும்பித் தர வேண்டியிருக்கிறது." என்று அரவான் தனக்குள்ளே பேசிக்கொள்ளும் விரக்தியின் உச்சம். இறந்த அரவான் பேசும் போது தன் உடல் அருகே பெண் அழுவதை பார்க்கிறான். அப்போது, " இந்த தேசம் உடலை அடையாளமாக கொண்டய்து. என் உடல் விலக்கப்பட்டவனின் உடல். அது அணைத்துக் கொள்ளப்பட முடியாதது." என்று சொல்லும் போது தன்னை போல் உலகில் இருக்கும் எல்லா அரவான் நிலைகளையும் சொல்கிறான்.

அடிமைகள், காவலர்கள் கதாப்பாத்திரம் கொண்ட 'உருளும் பாறைகள்', கதையே வந்து கதை சொல்லும் 'உதிர்காலம்', 'தஸ்தாயெவ்ஸ்கியின் சங்கீதம்' என்ற நாடகத்தில் தஸ்தாயெவ்ஸ்கியின் காதல் அனுபவம், தஸ்தாயெவ்ஸ்கி எழுதியா நாவல் மையமாக கொண்ட 'மரணா வீட்டின் குறிப்புகள்'கலைப் பொருள் சேகரிப்பவனின் கனவான 'உருப்பளிங்கு', நதியின் அலரல் சத்தமான 'நதி அறியாது, இரவு அறியாத ஒரு கிராமத்தின் கதையான 'சூரியனின் அறுபட்ட சிறகுகள்' என்று ஒவ்வொரு நாடகமும் ஒரு விதம். எஸ்.ராமகிருஷணன் இப்படி தான் இருக்கும் என்று முடிவுக்கு வரமுடியவில்லை.

சிரிக்க தெரியாதவர்கள் கூட 'உற்று நோக்கு' நாடகத்தை பார்த்தால் சிரித்து விடுவார்கள். அபத்தமான நாடகமாக இருந்தாலும், ரசிக்கப்பட வேண்டிய நகைச்சுவை. ஆண், பெண் இருவர் காதல் செய்யும் போது சமூகம் அவர்களுக்கு தொந்தரவு கொடுக்கிறது. அதை தொடர்ந்து நான்கு பேர் வந்து நல்லது, கேட்டது சொல்கிறார்கள். இந்த நாடகத்தை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் அனுமதிக் கொடுத்தால் என் அலுவலக நிகழ்ச்சியில் மீண்டும் ஒரு முறை மேடை ஏற்றிவிடுவேன்.

எஸ்.ராமகிருஷ்ணனின் ஒவ்வொரு புத்தகங்களை படிக்கும் போது அவர் எழுத்துக்கள் மீது உள்ள மதிப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. இறுதியாக நாடகத்துறையில் தனது அனுபவத்தை சொல்லும் போது நாடகத்தை மக்கள் மறந்துக் கொண்டு இருப்பதை உணர்த்துகிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் இருக்கும் வரை இதுப் போன்ற நல்ல நாடகங்கள் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கும்.

முகவரி :

உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்பிரமணியம் தெரு.
அபிராமபுரம், சென்னை - 18.

Monday, December 8, 2008

எஸ்.ராமகிருஷ்ணனின் 'துணையெழுத்து'

ஒவ்வொரு புத்தகமும் ஒரு நண்பனுக்கு சமம் என்பார்கள். ஆனால், எஸ். ராமகிருஷ்ணனின் 'துணையெழுத்து' பல நண்பர்களுக்கு சமமான நூல் என்று தான் சொல்ல வேண்டும். தன் தேடல் பயணத்தில் சந்தித்த பல நண்பர்களையும், இலக்கியவாதிகளையும் கட்டுரை வழியாக சொல்லும் போது உணர்வு பூர்வமான சிறுகதை படித்த திருப்தி இருந்தது. ஒரே புத்தகத்தில் வாசகர்களை பல மனிதர்களை சந்திக்க வைத்திருக்கிறார். மனிதனின் பல நிறங்களை புரிய வைத்திருக்கிறார். நகரத்தில் வாழ்ந்தவர்கள் இந்த நூலை படித்து முடித்த பிறகு இந்த நூலில் சொல்லும் இடங்களை பார்க்க வேண்டும் என்ற ஆசை கண்டிப்பாக வரும். பல புத்தகங்களை படித்து எழுதுவதை விட ஒவ்வொரு மனிதனையும், ஊரையும் படித்து எழுதியதால் அவர் எழுத்துக்களில் அதிக ஜீவன் இருக்கிறது.



'தலையறு பட்டுப்போன குழந்தையின் விளையாட்டு பொம்மையை ஒரு நாள் பார்த்த போது தான் குழந்தையிலிருந்து எவ்வளவு தூரம் பயணம் செய்து வளர்ந்து விட்டேன் என்பது புரிந்தது" என்ற வரிகள் நெகிழவைக்கிறது. " நிறமில்லாதொரு குடும்பம்", " ஹிரண்ய ஸ்நேகம்", "அன்பின் விதைகள்" போன்ற கட்டுரைகள் என் மனதை மிகவும் பாதித்தது. குறிப்பாக 'அன்பின் விதைகள்' கட்டுரையில் படித்தால் என்னை நினைத்து நானே வெட்கப்பட்டு கொண்டேன். சாதாரன வாட்ச்மென் பூமிநாதன் தன் மாத சம்பளத்தில் நூறு ரூபாய் மற்றவர்களுக்காக ஒதுக்கும் போது நம்மால் ஏன் செய்ய முடியவில்லை என்று எனக்குள்ளே கேள்வி எழுந்தது.

உறுபசி கட்டுரையில் ' வித்த முயற்சிக்கும் போது புத்தகத்தை வாங்குவது எளிது, விற்பது கடினம் என்று புரிந்தது' என்ற வரிகள் மிகவும் அருமை. பல பத்திப்பகங்களுக்கும் இதே நிலை தான். நல்ல புத்தகம் சிலபமாக போட்டு விடுகிறார்கள், ஆனால் வாங்கவோ, லைப்பரி ஆர்டர் கொடுக்கவோ ஆட்கள் தான் இல்லை.

இந்த நூலில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள்..

காய்ச்சல் ஒரு நோயல்ல. உடல் எடுத்துக் கொள்ளும் ஓய்வு என்று தோன்றுகிறது.

"எண்ணும் எழுத்தும்" கட்டுரையில் ' நாம் இன்னமும் நம்மை மட்டும் விற்பதற்கு விலை பேசாமல் இருக்கிறோம். சந்தர்ப்பம் இல்லாமலா அல்லது விலை நிர்ணயிக்க முடியாமலா என்று மட்டும் தான் தெரியவில்லை;

"மனக்குகையில்" கட்டுரையில் ' அவமானமும், அலைச்சலும், கசப்பும் தான் எழுத்தாளனின் சமையல் பொருட்கள் என்று தோன்றியது.

எஸ். ராமகிருஷ்ணனின் 'துணையெழுத்து' நூல் படித்து முடித்தவுடன் நான் அவருடை வாசகனாகவே மாறிவிட்டேன். அவர் எழுதிய 'நெடுங்குருதி' படிக்க தொடங்கியிருக்கிறேன். 'நெடுங்குருதி' நூலை பற்றி இந்த வலைப்பதிவில் விரைவில் எதிர்பாருங்கள்.

முகவரி

விகடன் பிரசுரம், விலை.110
757, அண்ணா சாலை,
சென்னை - 2

Tuesday, December 2, 2008

சா. கந்தசாமி எழுதிய 'விசாரணைக் கமிஷன்'

விலை.75, பக்கங்கள். 208

'விசாரணை கமிஷன்' - சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவல். இந்த நாவலில் இரண்டு முக்கிய பாத்திரங்கள் நாயகன் - தங்கராசும், நாயகி ருக்குமணியும் தான். தங்கராசு, ருக்குமணி அவர்கள் வாழும் வீடு, தங்கராசு வேலை செய்யும் பஸ் டெப்போ மற்றும் ருக்குமணி வேலை செய்யும் பள்ளிக்கூடம் என்று முக்கால்வாசி கதை இந்த இடத்தை சுற்றி நடக்கிறது.



அதிகம் வர்ணனையில்லாமல் கதாபாத்திரங்களில் உரையாடல் மூலம் இடத்தை பற்றியும், கதாபாத்திரத்தின் மனநிலை பற்றியும் சா. கந்தசாமி விளக்குகிறார். முதிர் தம்பதிகளான பஸ் கண்டக்டர் தங்கராசு, டீச்சர் ருக்குமணியும் பிள்ளையில்லாத குறை தீர்க்க தங்கள் நாய் டைகர் மீது அதிக பாசம் வைத்திருக்கிறார்கள். தங்கராசு பல கெட்டவார்த்தைகள் பயன் படுத்தினாலும் தன் மனைவியை குழந்தையில்லை என்று ஒரு முறை கூட குறை சொல்லியதில்லை. அவர்கள் இல்லற வாழ்க்கையை இடை இடையே பிண்ணோக்கி சென்று பார்ப்பது போல் அவர்கள் பெண் பார்க்கும் படலம், ருக்குமணி தங்கராசு அம்மாவை அழைத்து வருவது, ருக்குமணி தொண்டை வலிக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்வது போன்ற காட்சிகளை சொல்லும் போது அந்த இடத்திற்கு நம்மை அழைத்து செல்கிறார்.

தங்கராசு தன்னுடன் வேலை செய்யும் போக்குவரத்து ஊழியர்களிடம் பேசும் உரையாடல்களை படிக்கும் போது அசல் சென்னை பஸ் டெப்போவில் இருப்பது போல் உணர்வு. தங்கராசு என்ற கதாப்பாத்திரத்தை உருவாக்க பல பெரூந்தில் பயணம் செய்திருப்பார் என்று நினைக்கிறேன். டெப்போவில் பேசும் துணை கதாப்பாத்திரங்களும் மிக இயல்பாக உருவாக்கியுள்ளார். 'புடுங்கி', 'மயிறு' போன்ற வார்த்தைகள் போக்குவரத்து ஊழியர்கள் எதார்த்தமாக பயன்படுத்துவதை இந்த நூலில் கந்தசாமி அவர்கள் கூறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல், எந்த காலத்தில் இருக்கிறோம் என்பதை கதாபாத்திரங்கள் வாயிலாகவே கூறியிருக்கிறார். உதாரணத்திற்கு, பாரதிவாணன் ருக்குமணி டீச்சரை பாராட்டும் போது 'உங்க கலை திறமை வச்சு தான் அறிஞர் அண்ணா கிட்ட கையெழுத்து வாங்க போறேன்’ என்பதும், டெப்போவில் இரண்டு போக்குவரத்து ஊழியர்கள் "எம்.ஜி.ஆர கட்சிய விட்டு நீக்கிட்டாங்க" என்பதும், 'இந்திர காந்தியை சுட்டு கொன்னுடாங்க' என்று சரோஜா டீச்சர் ருக்குமணியிடம் தெரிவிப்பதும், இறுதியில் கட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ' ராஜீவ் காந்திக்கு ஆதரவு தாரீர்' என்று பேசுவது எந்த காலக்கட்டத்தில் கதை நடக்கிறது என்பதை உணர்த்துகிறார்.
ஒரு சில இடங்களில் கதை எந்த காலக்கட்டத்தில் நகர்கிறது என்று குழப்பமாக இருக்கிறது. மிகவும் சிரமப்பட்டு எந்த காலத்தில் கதை நகர்கிறது என்று புரிந்துக் கொள்ள வேண்டியதாக உள்ளது. வாசகர்களை சிரமப்படமால் பார்த்திருக்கலாம்.

படிப்பறிவு கம்மியான தங்கராசும், படித்த டீச்சர் ருக்குமணியும் இல்லற வாழ்க்கையில் சின்ன சண்டைகள் வந்தாலும் சந்தோஷமாக வாழ்கிறார்கள். பல பிரச்சனைகளுக்கு நடுவில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கிறார்கள். வயது ஆக ஆக இவர்களுடைய அன்பு பெருகிக் கொண்டே இருக்கிறது. ருக்குமணி தொண்டை வலியை பற்றி பஸ் டெப்போவில் இருப்பவர்கள் பலர் தங்கராசு விடம் விசாரிப்பதும், அதற்கு வைத்தியம் சொல்வது மிகவும் அருமை. போலீஸ்க்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் நடக்கும் சாதான சண்டை எப்படி பெரிய போராட்டமாக மாறுகிறது, அதனால் தங்கராசு குடும்பம் எப்படி பாதிக்கிறது என்று நாவல் முடிகிறது. அந்த போராட்டத்தில் பலர் இறக்கிறார்கள். அதற்கு மாவட்ட ஆட்சியாளர் 'விசாரணை கமிஷன்' வைக்கிறார். ஒரு சமூக போராட்டம் எப்படி ஒரு குடும்பத்தில் நிம்மதியை கெடுகிறது என்று இறுதியில் சொல்லும் போது எல்லோர் மனதில் சா. கந்தசாமி அவர்கள் நிற்கிறார்.

முகவரி :

அகரம், சரவணா காம்ப்ளேக்ஸ்
15பி-1, வெள்ளப்பண்டாரத் தெரு
கும்பகோணம் - 612001

 
Website Hit Counter
வந்தவர்கள்