Tuesday, December 2, 2008

சா. கந்தசாமி எழுதிய 'விசாரணைக் கமிஷன்'

விலை.75, பக்கங்கள். 208

'விசாரணை கமிஷன்' - சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவல். இந்த நாவலில் இரண்டு முக்கிய பாத்திரங்கள் நாயகன் - தங்கராசும், நாயகி ருக்குமணியும் தான். தங்கராசு, ருக்குமணி அவர்கள் வாழும் வீடு, தங்கராசு வேலை செய்யும் பஸ் டெப்போ மற்றும் ருக்குமணி வேலை செய்யும் பள்ளிக்கூடம் என்று முக்கால்வாசி கதை இந்த இடத்தை சுற்றி நடக்கிறது.



அதிகம் வர்ணனையில்லாமல் கதாபாத்திரங்களில் உரையாடல் மூலம் இடத்தை பற்றியும், கதாபாத்திரத்தின் மனநிலை பற்றியும் சா. கந்தசாமி விளக்குகிறார். முதிர் தம்பதிகளான பஸ் கண்டக்டர் தங்கராசு, டீச்சர் ருக்குமணியும் பிள்ளையில்லாத குறை தீர்க்க தங்கள் நாய் டைகர் மீது அதிக பாசம் வைத்திருக்கிறார்கள். தங்கராசு பல கெட்டவார்த்தைகள் பயன் படுத்தினாலும் தன் மனைவியை குழந்தையில்லை என்று ஒரு முறை கூட குறை சொல்லியதில்லை. அவர்கள் இல்லற வாழ்க்கையை இடை இடையே பிண்ணோக்கி சென்று பார்ப்பது போல் அவர்கள் பெண் பார்க்கும் படலம், ருக்குமணி தங்கராசு அம்மாவை அழைத்து வருவது, ருக்குமணி தொண்டை வலிக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்வது போன்ற காட்சிகளை சொல்லும் போது அந்த இடத்திற்கு நம்மை அழைத்து செல்கிறார்.

தங்கராசு தன்னுடன் வேலை செய்யும் போக்குவரத்து ஊழியர்களிடம் பேசும் உரையாடல்களை படிக்கும் போது அசல் சென்னை பஸ் டெப்போவில் இருப்பது போல் உணர்வு. தங்கராசு என்ற கதாப்பாத்திரத்தை உருவாக்க பல பெரூந்தில் பயணம் செய்திருப்பார் என்று நினைக்கிறேன். டெப்போவில் பேசும் துணை கதாப்பாத்திரங்களும் மிக இயல்பாக உருவாக்கியுள்ளார். 'புடுங்கி', 'மயிறு' போன்ற வார்த்தைகள் போக்குவரத்து ஊழியர்கள் எதார்த்தமாக பயன்படுத்துவதை இந்த நூலில் கந்தசாமி அவர்கள் கூறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல், எந்த காலத்தில் இருக்கிறோம் என்பதை கதாபாத்திரங்கள் வாயிலாகவே கூறியிருக்கிறார். உதாரணத்திற்கு, பாரதிவாணன் ருக்குமணி டீச்சரை பாராட்டும் போது 'உங்க கலை திறமை வச்சு தான் அறிஞர் அண்ணா கிட்ட கையெழுத்து வாங்க போறேன்’ என்பதும், டெப்போவில் இரண்டு போக்குவரத்து ஊழியர்கள் "எம்.ஜி.ஆர கட்சிய விட்டு நீக்கிட்டாங்க" என்பதும், 'இந்திர காந்தியை சுட்டு கொன்னுடாங்க' என்று சரோஜா டீச்சர் ருக்குமணியிடம் தெரிவிப்பதும், இறுதியில் கட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது ' ராஜீவ் காந்திக்கு ஆதரவு தாரீர்' என்று பேசுவது எந்த காலக்கட்டத்தில் கதை நடக்கிறது என்பதை உணர்த்துகிறார்.
ஒரு சில இடங்களில் கதை எந்த காலக்கட்டத்தில் நகர்கிறது என்று குழப்பமாக இருக்கிறது. மிகவும் சிரமப்பட்டு எந்த காலத்தில் கதை நகர்கிறது என்று புரிந்துக் கொள்ள வேண்டியதாக உள்ளது. வாசகர்களை சிரமப்படமால் பார்த்திருக்கலாம்.

படிப்பறிவு கம்மியான தங்கராசும், படித்த டீச்சர் ருக்குமணியும் இல்லற வாழ்க்கையில் சின்ன சண்டைகள் வந்தாலும் சந்தோஷமாக வாழ்கிறார்கள். பல பிரச்சனைகளுக்கு நடுவில் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்கிறார்கள். வயது ஆக ஆக இவர்களுடைய அன்பு பெருகிக் கொண்டே இருக்கிறது. ருக்குமணி தொண்டை வலியை பற்றி பஸ் டெப்போவில் இருப்பவர்கள் பலர் தங்கராசு விடம் விசாரிப்பதும், அதற்கு வைத்தியம் சொல்வது மிகவும் அருமை. போலீஸ்க்கும், போக்குவரத்து ஊழியர்களுக்கும் நடக்கும் சாதான சண்டை எப்படி பெரிய போராட்டமாக மாறுகிறது, அதனால் தங்கராசு குடும்பம் எப்படி பாதிக்கிறது என்று நாவல் முடிகிறது. அந்த போராட்டத்தில் பலர் இறக்கிறார்கள். அதற்கு மாவட்ட ஆட்சியாளர் 'விசாரணை கமிஷன்' வைக்கிறார். ஒரு சமூக போராட்டம் எப்படி ஒரு குடும்பத்தில் நிம்மதியை கெடுகிறது என்று இறுதியில் சொல்லும் போது எல்லோர் மனதில் சா. கந்தசாமி அவர்கள் நிற்கிறார்.

முகவரி :

அகரம், சரவணா காம்ப்ளேக்ஸ்
15பி-1, வெள்ளப்பண்டாரத் தெரு
கும்பகோணம் - 612001

No comments:

 
Website Hit Counter
வந்தவர்கள்