Saturday, December 13, 2008

எஸ்.ராமகிருஷ்ணனின் 'அரவான்'

விலை.90. பக்கங்கள் -166

‘அரவான்’ - தமிழக அரசு விருது பெற்ற நூல்.

எஸ்.ராமகிருஷ்ணனின் 'துணையெழுத்து' படித்ததில் இருந்து நான் அவருடைய தீவிர வாசகனாகிவிட்டேன். அவருடைய எழுத்துக்களும், போதை மருந்தும் ஒரே மாதிரி தானோ !! அவருடைய ஒரு புத்தகம் படித்த பிறகு அவருடைய பல புத்தகங்களை தேடி படித்து வருகிறேன். ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முறையாவது அவருடைய வலைப்பதிவுக்கு சென்று வருகிறேன். அவருடைய எழுத்துக்களை படிக்க படிக்க அவரையும் சேர்ந்து படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. சரி ! இந்த நூலுக்கு வருவோம்.

'அரவான்' நூல் எஸ்.ராமகிருஷ்ணனின் நாடகத்துறையில் அவர் எழுதிய நாடக கதையை நூலாக தொகுத்துள்ளார். தொலைக்காட்சி ஊடகங்களில் தங்களை தொலைத்து கொண்டவர்கள் மத்தியில், தன்னுடைய அழகான ஒன்பது நாடகங்களை புத்தகமாக எழுதியிருக்கிறார். ஒவ்வொரு நாடகமும் குறும்படமாக எடுத்தாலும் தவறில்லை. ஒவ்வொரு நாடகம் வித்தியாசமான கதை அம்சம் கொண்டது.



புத்தக தலைப்புக் கொண்ட முதல் நாடகம் 'அரவான்'. ஒருவன் மட்டும் நடிக்கும் நாடகம். நம் அன்றாட வாழ்வில் பல மனிதர்கள் தனக்குள்ளே பேசிக்கொள்கிறான். அதை மையமாக வைத்து பாரதத்தில் வரும் அரவான் கதாப்பாத்திரத்தை நாடகமாக உருவாக்கியிருக்கிறார். இறக்கும் முன் 'அரவான்' பாத்திரம் எப்படி எல்லாம் மனதில் புலம்பிருக்கும் என்று பாரதக்கதை சொல்ல மறந்ததை எஸ்.ராமகிருஷ்ணன் 'அரவான்' நாடகம் மூலம் பதிவு செய்திருக்கிறார்.
"கண்களைக் கட்டிக் கொண்ட பிறகு உலகம் காணாமல் போய்விடுகிறது. ஆனால் மனது திறந்துக்கொள்கிறே!"
கண்களை கட்டிக் கொண்டால் மற்றவர்களைக் காண வேண்டியிருக்காது. எல்லா நேரமும் நம்மை நாமே பார்த்துக் கொண்டே இருக்கலாம்" போன்ற வசனங்கள் மிகவும் அழகு.

"பிறந்ததில் இருந்தே கசப்பை எனக்குப் பருகக் கொடுத்த பாண்டவர்களுக்கு விசுவாசத்தைத் திரும்பித் தர வேண்டியிருக்கிறது." என்று அரவான் தனக்குள்ளே பேசிக்கொள்ளும் விரக்தியின் உச்சம். இறந்த அரவான் பேசும் போது தன் உடல் அருகே பெண் அழுவதை பார்க்கிறான். அப்போது, " இந்த தேசம் உடலை அடையாளமாக கொண்டய்து. என் உடல் விலக்கப்பட்டவனின் உடல். அது அணைத்துக் கொள்ளப்பட முடியாதது." என்று சொல்லும் போது தன்னை போல் உலகில் இருக்கும் எல்லா அரவான் நிலைகளையும் சொல்கிறான்.

அடிமைகள், காவலர்கள் கதாப்பாத்திரம் கொண்ட 'உருளும் பாறைகள்', கதையே வந்து கதை சொல்லும் 'உதிர்காலம்', 'தஸ்தாயெவ்ஸ்கியின் சங்கீதம்' என்ற நாடகத்தில் தஸ்தாயெவ்ஸ்கியின் காதல் அனுபவம், தஸ்தாயெவ்ஸ்கி எழுதியா நாவல் மையமாக கொண்ட 'மரணா வீட்டின் குறிப்புகள்'கலைப் பொருள் சேகரிப்பவனின் கனவான 'உருப்பளிங்கு', நதியின் அலரல் சத்தமான 'நதி அறியாது, இரவு அறியாத ஒரு கிராமத்தின் கதையான 'சூரியனின் அறுபட்ட சிறகுகள்' என்று ஒவ்வொரு நாடகமும் ஒரு விதம். எஸ்.ராமகிருஷணன் இப்படி தான் இருக்கும் என்று முடிவுக்கு வரமுடியவில்லை.

சிரிக்க தெரியாதவர்கள் கூட 'உற்று நோக்கு' நாடகத்தை பார்த்தால் சிரித்து விடுவார்கள். அபத்தமான நாடகமாக இருந்தாலும், ரசிக்கப்பட வேண்டிய நகைச்சுவை. ஆண், பெண் இருவர் காதல் செய்யும் போது சமூகம் அவர்களுக்கு தொந்தரவு கொடுக்கிறது. அதை தொடர்ந்து நான்கு பேர் வந்து நல்லது, கேட்டது சொல்கிறார்கள். இந்த நாடகத்தை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் அனுமதிக் கொடுத்தால் என் அலுவலக நிகழ்ச்சியில் மீண்டும் ஒரு முறை மேடை ஏற்றிவிடுவேன்.

எஸ்.ராமகிருஷ்ணனின் ஒவ்வொரு புத்தகங்களை படிக்கும் போது அவர் எழுத்துக்கள் மீது உள்ள மதிப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. இறுதியாக நாடகத்துறையில் தனது அனுபவத்தை சொல்லும் போது நாடகத்தை மக்கள் மறந்துக் கொண்டு இருப்பதை உணர்த்துகிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் இருக்கும் வரை இதுப் போன்ற நல்ல நாடகங்கள் வாழ்ந்துக் கொண்டு தான் இருக்கும்.

முகவரி :

உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்பிரமணியம் தெரு.
அபிராமபுரம், சென்னை - 18.

No comments:

 
Website Hit Counter
வந்தவர்கள்