Thursday, December 18, 2008

என்ன செய்யலாம்? - தமிழ்வணிகத்தின் கட்டுரைப்போட்டி

விஷூவல் மீடியா குழுமத்தால் நிர்வகிக்கப்படும் வணிகத் தகவல்களின் பெட்டகம் "தமிழ் வணிகம்" இணையத் தளம். வர்த்தகம் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் தங்கத் தமிழில் தடையில்லாமல் பரப்புவது எங்களின் முதன்மை நோக்கம். மென்பொருட்கள் உருவாக்கம், இணையத் தள வடிவமைப்பு, பயன்தரும் நட்புத் தளங்களைத் உலகளாவிய தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்வது என "தமிழ் வணிகத்தின்" பணிகள் பரந்து விரிந்துள்ளன. இதோ இப்போது, மற்றொரு புதிய முயற்சியாக இப்போது கட்டுரைப் போட்டியை அறிவிக்கிறது "தமிழ் வணிகம்".

இன்றைய உலகத்தை அச்சுறுத்தி வருகிறது பொருளாதார மந்த நிலை. அன்றாடம், உலகின் பல நாடுகளில் மக்கள் தங்கள் வாழ்வதாரத்தின் ஆணிவேரான வேலையை இழந்து வருகின்றனர். வாழும் வழி தெரியாமல் சிலர் தங்கள் வாழ்க்கையையே மாய்த்துக் கொள்கின்றனர். இத்தகைய சூழலில், எந்தத் தொழில் செய்தால் ஜெயம் பெறலாம்? அதற்குரிய எளிய வழிகள் என்னென்ன? யாரை? எங்கு? எப்படி? அணுக வேண்டும். குறைந்த முதலீட்டில் நிறைந்த இலாபம் சம்பாதிப்பது எப்படி? இப்படி இயல்பாகப் நம்முள் எழும் கேள்விகள் ஏராளம். அவற்றுக்கான விடைகள் உங்கள் மனச் சுரங்கத்தில் மண்டிக்கிடக்கலாம். தொடர்ந்து யோசித்துக் கொண்டே இருப்பதை விட நாலு பேருக்கு வழி காட்டுவது கூடுதல் புண்ணியம். எனவே தயங்க வேண்டாம். சட்டென எழுதத் தொடங்குங்கள் போட்டிக் கட்டுரையை.

பெருகிவரும் தொழில் போட்டியில் வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் ஈர்க்க, அல்லது தனது வலையில் விழவைக்க நினைத்துப் பெரிய பெரிய நிறுவனங்கள் சலுகைகளை அள்ளி வழங்கின. ஆனால், அந்தச் சலுகைகள் சில நிறுவனங்களின் அஸ்திவாரத்தையே ஆட்டங்காண வைத்து விட்டன. தமது தொழில் எல்லையை விரிவுபடுத்த எண்ணி நிறுவனத்தையே தள்ளாட வைக்கும் நிலைக்கு ஆளாகி விட்டனர் பலர். எந்தத் துறையிலும் கரை கண்டவர்கள் யாரும் இல்லை. சில நமக்குத் தெரிந்திருக்கலாம். பல நாம் அறியாமல் இருக்கலாம். அதே சமயம் அவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளுக்குள் ஊறிக் கொண்டே இருக்கும்.

எனவே தொழில் முறைகள் பற்றி உங்களுக்கு தெரிந்ததைத் தொகுத்துக் கட்டுரையாக்கி எங்களுக்கு அனுப்புங்கள். உங்கள் படைப்புக்கள் ஆசிரியர் குழுவின் அனுமதியோடு "தமிழ் வணிகம்" இணையத் தளத்தின் முகப்புப் பக்கத்தில் சிறப்புச் செய்தியாக வெளியிடப்படும்.

இப்போட்டிக்கான கட்டுரைகள் சுய தொழிலில் ஈடுபட நினைப்பவர்களுக்கு ஊக்க மருந்தாக அமைய வேண்டும் என்பது எங்கள் விருப்பம். உங்களின் படைப்புக்கள் சிலருடைய வாழ்க்கையைப் புரட்டிப் போடும் நெம்புகோலாக அமையலாம்.

இன்னும் என்ன யோசனை? எடுங்கள் பேனாவை. வெளிப்படுத்துங்கள் உங்கள் படைப்பாற்றலை.

விதிமுறைகள் மற்றும் ஆசிரியர் குழு, அனுப்ப வேண்டி கடைசி தேதி மற்றும் முகவரி நாளை தமிழ் வணிகம் செய்தி தளத்தில் தெரியப்படுத்தப்படும்.

புதுமைகளை வரவேற்கும் வாஞ்சையான நெஞ்சத்துக்குச் சொந்தக்காரர்கள் நீங்கள். தமிழ் வணிகத்தின் இந்தப் புதிய முயற்சியை இன்னும் செழுமையாக்கும் யோசனைகளையும் மறக்காமல் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.

இப்படிக்கு,

தமிழ் வணிகம்
http://www.tamilvanigam.in/

No comments:

 
Website Hit Counter
வந்தவர்கள்