Sunday, December 21, 2008

பாக்கியம் ராமசாமியின் 'நகைச்சுவை சிறுகதைகள்'

விலை.65, பக்கங்கள். 208

ஒவ்வொரு வாசகனுக்கும் தான் படிக்கும் நூலில் தேவையான செய்திகள், குறிப்புகள் இருக்கும் என்று எதிர்பார்த்து தான் படிக்கிறான். பிடித்த எழுத்தாளர் புத்தகம் படிக்கும் போது தனக்கு பிடித்த எழுத்தாளரின் ஒவ்வொரு எழுத்துக்களையும் ரசிக்கிறான். ஆனால், இந்த இரண்டு கருத்துக்களுக்கும் நகைச்சுவை புத்தகங்களுக்கு பொருந்தாது. நகைச்சுவை நூல்களில் இருந்து செய்தியோ அல்லது குறிப்புகளோ யாரும் எதிர்பார்க்க முடியாது. பிடித்த எழுத்தாளரே நகைச்சுவை கதையை எழுதியிருந்தாலும் சிரிப்பு வரவில்லை என்பதை வாசகன் உண்மையை ஒப்புக் கொள்வான். மற்ற தலைப்பில் எழுதிய புத்தகங்களை பற்றி கடுமையாக பேசினால், அவரவர் ரசனை விவாதமாக மாறிவிடும். எழுதியது எதிரியாக இருந்தாலும் நம்மை சிரிக்க வைத்தவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது. சிரிக்கும் படி எழுதாமல் 'நகைச்சுவை கதை' என்று சொன்னால், நண்பராக இருந்தாலும் கருத்தை கூறாமல் இருக்க முடியாது. அப்படி ஒரு பெருமை நகைச்சுவை நூல்களுக்கு உண்டு

பாக்கியம் ராமசாமி அவர்கள் நகைச்சுவை கதைகள் எழுதுவதில் பெயர் போனவர். ( நல்ல பெயர் எடுத்தவர் என்று சொல்ல வந்தேன்.... வேறு மாதிரி யோசிக்க வேண்டாம்.). தான் எழுதிய நகைச்சுவை கதைகளை தொகுப்பு நூலாக தொகுத்துள்ளார். ஒரு சில கதைகள் வித்தியாசமாக நடையில் எழுதியிருக்கிறார். உதாரணத்திற்கு, முதல் கதை பாதிக்கும் மேல் கடித போக்குவரத்து மூலம் கதையை சொல்லியிருக்கிறார். அதே போல் 'காண்ட்டீன் கிராஜூவேட்' (தமிழ் தலைப்புக்கு பஞ்சமோ எண்ணவோ) முழுக்க முழுக்க கடிதத்தின் மூலமாகவே முழுக்கதையும் சொல்லியிருக்கிறார். இந்த இரண்டு கதைகளும் நகைச்சுவை கதைகள் என்று மட்டும் சொல்லாமல், வித்தியாசமான நடையைக் கொண்ட கதை என்று சொல்லலாம்.

'பரபரப்பு' மிகவும் ஸ்வாரஸ்யமான கதை. ப்ளாட்டில் நடக்கும் ஒரு நகைச்சுவை சம்பத்தை சொல்லும் போது தொலைக்காட்சி தொடரைப் பார்த்தது போல் இருந்தது. 'ஐந்து பேர் கெடுத்த அற்புதக் கதை' கண்டிப்பாக குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அதன் எழுத்து நடையே சிரிப்பை வரவழைக்கிறது. பேராசிரியர், நாட்டியக்காரி, சிறுவன், தையல்காரன், விஞ்ஞானி என்று ஐந்து பேர்கள் ஒரு கதையை எழுதிகிறார்கள். ஐவரும் தங்கள் வர்ணனை சொல்லும் போதும், அவர்வர் துறையை சார்ந்த வார்த்தைகளை பயண்ப்படித்தை போதும் நம்மால் ரசிக்க முடிகிறது.

இந்த நூலில் பாக்கியம் ராமசாமியின் எழுதிய எல்லா கதைகளும் நகைச்சுவை கதை என்று பொய் சொல்ல விரும்பவில்லை. ஒரு சில கதைகள் தவறி போய் பாக்கியம் ராமசாமியின் நகைச்சுவை நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. 'வெங்காய வடைமேல் காதல்', 'அனுவின் அடிச்சுவட்டில்' போன்ற கதைகள் ஏன் இந்த நூலில் சேர்த்தாளர்கள் என்று புரியவில்லை. அதுவும் 'வெங்காய வடைமேல் காதல்' நகைச்சுவை கதை என்பதை விட கணவன், மனைவிக்கும் இருக்கும் அன்பை உணர்த்தும் கதையாக தான் தெரிகிறது.

இந்த நூல் 2006 பதிப்பித்தாலும், பெரும்பாலான கதைகள் பல வருடங்கள் முன் எழுதியது என்பதை உணர முடிகிறது. உதாரணத்திற்கு ‘ஒரு கை பார்ப்போம்’ கதையில், கணேஷ் கதாப்பாத்திரம் "ஏழாயிரம் பெறுமானமுள்ள வீட்டை மூவாயிரத்துக்கு விற்றேனே" என்று சொல்லும் போதே தெரிகிறது. இந்த காலத்தில் ஏழாயிரத்துக்கு வாடைக்கு வீடு கிடைக்கும். அடையார், டி.நகர் போன்ற இடங்களில் இது கூட சாத்தியமில்லை. நகைச்சுவையான சம்பவங்கள் இருக்கும் அளவிற்கு சில இடங்கள் உரையாடல் நகைச்சுவையாக இல்லை என்று தான் தோன்றுகிறது.

இந்த புத்தகம் படித்து முடிந்த பிறகு நீங்கள் வயறு வலிக்க சிரித்திருப்பீர்கள் என்று உறுதியாக சொல்ல முடியாது. (திரைப்படத்தில் வரும் பல நகைச்சுவை காட்சிகளே அப்படி தான் இருக்கிறது). ஆனால், நகைச்சுவை எழுத்தாளர்களில் மிக முக்கியமாக கருதப்படும் பாக்கியம் ராமசாமியின் ஆரம்ப கால நூல் என்ற வகையில் கண்டிப்பாக படிக்க வேண்டும்.

முகவரி

பூம்புகார் பதிப்பகம்
127 ( ப.எண்.63), பிரகாசம் சாலை, (பிராட்வே)
சென்னை - 600 108
தொலைபேசி - 2526 7543

No comments:

 
Website Hit Counter
வந்தவர்கள்