Sunday, January 25, 2009

லக்கிலுக்கின் 'சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்'

பதிவர்கள் மத்தியில் பிரபலமான லக்கிலுக் எழுதிய முதல் நூல் இது. ( உண்மையான பெயர் 'யுவகிருஷ்ணா' )

சினிமாவில் நடிக்க நினைப்பவர்கள் விளம்பர துறை 'பை பாஸ்' வழி என்றாகி விட்டது. யார் வேண்டுமானும் சினிமாவில் நடிப்பது போல் விளம்பரத்தில் நடிக்க முடியாது. நல்ல அழகு , உடல் தோற்றம், கான்ஸப்ட் தகுந்த வயது என்று பல விஷயங்களை பற்றி யோசிக்க வேண்டும். இருபது நோடியில் கவர்வது போல் கதை தயார் செய்து, மக்கள் விரும்புவது போல் விளம்பரம் செய்ய வேண்டும் என்றால் மாதக்கணக்கில் ஆராய்ச்சி செய்ய வேண்டும். பல பேர் உடல் வருத்தி உழைத்த விளம்பரத்திற்கு உண்மையான வெற்றி அவர்கள் விளம்பரப்படுத்திய பொருளின் விற்பனையில் தான் இருக்கிறது. இரண்டே கால் மணி நேர சினிமா எடுப்பதைவிட, இருபது நொடி விளம்பரம் எடுப்பது மிகவும் கடினம் என்பதை முதல் அத்தியாத்திலேயே நமக்கு சொல்லிவிடுகிறார்.

இரண்டாவது அத்தியாயத்தில் விளம்பரம் உலகில் தோன்றிய வரலாறும், முன்றாவது அத்தியாயத்தில் இந்தியாவில் விளம்பரம் தோன்றிய வரலாறும் எழுதியிருக்கிறார். வரலாறு பிடிக்காதவர்களுக்கு கொஞ்சம் அலுப்பு தட்டும். ஆனால், விளம்பரத்தை பற்றி படிக்கும் போது அது உருவான தகவலை தெரிந்துக் கொள்வதில் தவற ஒன்றுமில்லை.

பின் வரும் அத்தியாயங்களின் ஒரு விளம்பர நிறுவனம் ஒரு விளம்பரத்தை எப்படி அனுக வேண்டும், க்ளைட் தேவை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என்று எல்லா தகவல்களை எளிய நடையில் சொல்லியிருக்கிறார்.

இந்த புத்தகத்தில் எனக்கு பிடித்த ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும். ஒரு இடத்தில், விளம்பரத்துறையில் ஐந்து வருடம் அனுபவம் உள்ளவர்கள் கூட சொந்தமாக விளம்பர நிறுவனம் தொடங்கலாம் என்று குறிப்பிட்டுயிருந்தார். நான்கு வருடங்களுக்கு முன்பு எனக்கு இது தெரிந்திருந்தால் நானும் விளம்பர உலகில் நுழைந்திருப்பேன். ( ஐ.டி துறையில் நுழைந்தவர்கள் பல வருடங்கள் அனுபவம் இருந்தாலும் ஐ.டி நிறுவனத்தை அவ்வளவு எளிதில் தொடங்க முடியாது.)

ரொம்பவும் ரசித்த அத்தியாயம் என்றால் 'இருபதாவது' அத்தியாயமான 'எதிர்காலம்' என்ற அத்தியாயம் தான். விளம்பர துறை எப்படி இயங்குகிறது, என்ன செய்ய வேண்டும் என்று சொன்னதோடு இல்லாமல் எதிர்காலம் விளம்பரங்கள் எப்படி இருக்க போகிறது என்பதை சொல்லியிருக்கிறார். தொலைக்காட்சியில் விளம்பர தோன்றும் போதே விரும்பமுள்ளவர்கள் கம்ப்யூட்டரில் கிளிக் செய்து வாங்குவது போல் பொருட்கள் வாங்கும் காலம் வரலாம் என்கிறார். இதனால், கூட்ட நெரிசல்கள் சென்று ஷாப்பிங் செய்ய வேண்டியதில்லை என்பதை ரசிக்கும் படி சொல்லியிருக்கிறார். என்.எஸ்.கேவின் 'விஞ்ஞானத்த வளர்க்க போரேன்டி' பாட்டில் சொல்லும் விஷயங்கள் போல் இந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டுகிறார். நிச்சயமாக இப்படி ஒரு வளர்ச்சி விளம்பர துறை அடையும் என்பது எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

இவ்வளவு நாள் தேவையில்லாத பல மொக்கை பதிவுகளால் லக்கிலுக் தன் நேரத்தை வீண்ணடித்திருக்கிறார். எழுத்துலகில் அவரை கொண்டு வந்த பா.ராவுக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லியாக வேண்டும்.

லக்கிலுக்கு இப்படி ஒரு முகம் இருப்பது மிகவும் வியப்பாக இருக்கிறது. மேலும் இது போல பல படைப்புகள் படைக்க வேண்டும் பதிவு வாசகர்களாக நாம் வாழ்த்துவோம். (‘யுவகிருஷ்ணா’ என்பதை விட ‘லக்கிலுக்’ தான் நன்றாக இருக்கிறது. இந்த பெயரிலே அடுத்த நூல் வெளியிடுங்கள்.)

பக்கங்கள் : 152 ,
விலை : 70.
கிழக்கு பதிப்பகம்

சிலப்பதிகாரம் : உலக நன்நெறி நூல்

( உலக நன்நெறி நூல்களில் சிறந்தது எது ? திருக்குறளா ? சிலப்பதிகாரமா ? அல்லது 'கம்பராமாயணமா' என்ற தலைப்பில் 'சிலப்பதிகாரத்திற்கு ஆதரவாக நான் பேசியது.)

உலக நீதி போதனை சொல்லும் நூல் திருக்குறள். 'இராமர்' என்ற வீரரின் வீரத்தை அதிகமான சொல்லும் காவியம் தான் 'கம்பராமாயணம்'. ஆனால், 'சிலப்பதிகாரம்' அப்படி இல்லை. ஒரு பெண் அன்றாட வாழ்க்கை சந்திக்கும் துன்பங்கள், துயரங்கள் பற்றி விபரிக்கும் காவியம். திருக்குறளை எல்லோரும் பின்பற்றியிருந்தால் உலகில் பிரச்சனைகளே இருக்காது. நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றே பலர் திருக்குறளை மறந்துவிட்டனர். 'கம்பராமாணத்தில் பல விஷயங்கள் இக்கால கட்டத்தில் பொருந்தாது. அதில் கடவுள் வந்து உதவுவது போல் கடவுள் நேரில் வருவதில்லை. ஆனால், 'சிலப்பதிகாரம்' இக்கால கட்டத்தில் மட்டும் அல்ல.... எக்கால கட்டத்தில் பொருந்தும். குறிப்பாக பெண்களுக்கு பொருந்தும். எந்த துன்பம் வந்தாலும் நாம் எதிர் கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துகிறது ?

ஆண்களை மையமாக வைத்து காவியம் எழுதியவர்கள் மத்தியில் பெண்களை மையமாக வைத்து அவளுடைய அன்பு, அறவனிப்பு, பொறுமை, கருணை, கோபம் என்று விளக்கும் நூல் தான் 'சிலப்பதிகாரம்'. வெறும் அறிவுரை விரும்பாதவர்கள் கூட கதையோடு அறிவுரை கூறினால் காது கொடுத்து கேட்பார்கள்.அந்த வகையில் சிலப்பதிகாரம் என்று நிலைத்து நிற்க்கும். பெண்ணுரிமை பற்றி பாரதிக்கு முன் குரல் கொடுத்தவர் இளங்கோவடிகள் என்று 'சிலப்பதிகாரம்' உதராணமாக வைத்து சொல்லலாம். அந்த அளவிற்கு பெண்கள் இக்காலத்தில் கூட சந்திக்கும் பிரச்சனைகளை பற்றி இளங்கோவடிகள் அன்றே எழுதியிருக்கிறார்.

சிலப்பதிகாரத்தில் நன்நெறி எங்கே இருக்கிறது ?? மணந்த கன்னகியை விட்டு கோவலன் மாதவியிடத்தில் சென்றானே, அந்தப்புரத்தில் செல்லும் அவசரத்தில் கோப்பெருஞ் சோழன் தவறாக கூறிய வார்த்தை ஒரு உயிரை கொன்று விட்டதே... இதில் நன்நெறி எங்கே உள்ளது என்று கேள்வி எழும். பல கேள்விகளில் வேள்வி நடத்தியதால் தான் இன்று வரையிலும் ‘சிலப்பதிகாரம்’ வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது.

கணவன் தவறு செய்து வந்தால் மனமுவர்ந்து ஏற்றுக் கொள்ளும் மனம் பல பெண்களிடம் இன்று இல்லாமல் போனது. வியாபாரத்தில் தோல்வி, வேலையில் சோர்வு, பொது இடத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை என்று வீட்டுக்கு வரும் ஆண்களை மலர்ந்த முகத்தோடு மனைவி அழைக்க வேண்டும் என்பதை உணர்த்தும் நூல் தான் 'சிலப்பதிகாரம்'. உடனே வேறு பெண்ணிடம் தொடர்பு வைத்திருக்கும் ஆண்களை மனைவி மன்னிக்க வேண்டும் என்ற பொருளில் எடுத்துக் கொள்ள வேண்டாம். வெளியே சென்று வரும் ஆண் எந்த கஷ்டத்தில் வீட்டுக்கு வருகிறார் என்பதை பெண் புரிந்துக் கொண்டால், அந்த ஆண் தன் வாழ்நாள் இறுதி வரை அந்த பெண்ணுடம் கழிக்க தோன்றும் என்பதை ‘சிலப்பதிகாரம்’ உணர்த்துகிறது.

ஆண்களுக்கு மட்டுமே துறவரம் போதுவாக இருந்த காலக்கட்டத்தில், தேவதாசி குடும்பத்தில் பிறந்த மாதவி தன் மகள் மணிமேகலையை கற்பு நெறியோடு துறவரம் மேற்கொள்ள செய்கிறாள். மணிமேகலை கற்பு நெறி மாறாமல் துறவரத்தில் ஈடுபடுகிறாள். அதுவும் புத்த துறவியாக இருப்பது மிக பெரிய காரியம். ஆண்கள் கூட யோசிக்கும் புத்த துறவு வாழ்க்கையை தன் மகள் மேற்கொண்டு வாழ வேண்டும் என்று மாதவி நினைத்தாள். தேவதாசி குலம் தன்னோடு போகவேண்டும் என்று கருதினாள்.

ஆண்கள் செய்யும் வேலை பெண்கள் செய்ய வேண்டும் என்று கூறும் லட்ச குரல்கள் இன்று உண்டு. ஆனால், அந்த காலத்தில் பெண்கள் துறவரம் மேற்கொள்ள முடியும், எந்த குடும்பத்தில் பிறந்தாலும் நெறி தவறாமல் வாழ முடியும் என்று உணர்த்தி இன்று பல பெண்களுக்கு உத்வேகமாய் இருப்பது ‘சிலப்பதிகாரம்’ தான்.

சிலப்பதிகாரம் அன்பு, பண்பு, கற்பு நெறியை மட்டும் உணர்த்தவில்லை. தவறு செய்தவன் யாராக இருந்தாலும் தைரியமாக கேள்வி கேட்கும் துணிச்சல் பெண்கள் இடம் உண்டு என்பதையும் காட்டுகிறது. தன் கணவரை கொன்ற மன்னரிடம் 'தேரா மன்னா செப்புவ துடையேன்..' என்று கேட்கும் பெண்ணில் மன உறுதியை காட்டுகிறது. இன்று அரசியல் எடுத்துக் கொண்டால், பதவியில் இருக்கும் ஒரு ஆண் செய்யும் தவறை துணிச்சலாக கேட்கும் மனம் பெண்ணுக்கு இருக்கிறது என்றால் ‘சிலப்பதிகாரம்’ காட்டிய வழி தான் என்று சொன்னால் மிகையாகாது.

சிலப்பதிகாரம் பெண்களுக்கு மட்டும் தான் நன்நெறி கூறுகிறதா... ஆண்களுக்கு இல்லையா என்று இன்னொரு கேள்வி எழும். வாழ்நாள் முழுக்க தன்னை நம்பி வரும் பெண்ணை கை விட்டு வாழ்ந்தால் பொன், பொருள் இழந்து நாடோடியாக திறிய வேண்டியது தான் என்பதை கோவலன் வாழ்க்கை மூலம் இளங்கோவடிகள் கூறுகிறார். பழி, பாவங்களுக்கு உட்பட்டு ஊழ்வினையால் கொல்லப்படுவான் என்பதற்கு கோவலன் வாழ்க்கை ஆண்களுக்கு முன் உதாரணம்.

பதவியில் இருக்கும் ஆண் எந்த நிலையிலும் மனம் தளரக் கூடாது, தீர்ப்பு அளிக்கும் முன் பல முறை யோசிக்க வேண்டும். அனுபவம் உள்ளவர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். கோப்பெருஞ் சோழன் அவசர தீர்ப்பால் கோவலனை கொன்றதோடு மட்டுமில்லாமல் மதுரை எரிவதற்கு காரணமாகவும் இருந்தது. எந்த விஷயத்தை பேசுவதாக இருந்தாலும், காலம் அறிந்து சொல்ல வேண்டும். அந்தப்புரத்தில் அவசரமாக சென்றுக் கொண்டு இருந்த மன்னனிடம் வழக்கு எடுத்து சென்ற காவலாளி மீதும் தவறு இருக்கிறது. காலம் அறிந்து சொல்ல வேண்டும் என்பதற்கு 'சிலப்பதிகாரம்' நீதி நூலாய் திகழ்கிறது.

சந்தர்ப்பம் வந்தால் சாந்தமாக இருந்த கன்னகி கூட கோபம் கொண்டு மதுரை எரிப்பாள். மனம் இருந்தால் எந்த சூழ்நிலையிலும் மாதவிப் போல் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழலாம். இரண்டு மனைவி வைத்திருப்பது வீரமாய் சொன்ன காவியங்கள் மத்தியில், இரண்டு மனைவியிடம் வாழ்ந்தால் கோவலன் போல் நாடோடியாக திரிந்து இறக்க வேண்டியது வரும். மன்னர் செய்யும் சிறு தவறு கூட மக்கள் வாழ்க்கையை பாதிக்கும். இப்படி பல நன்நெறிகள் சிலப்பதிகாரத்தில் உண்டு.

Tuesday, January 13, 2009

எஸ்.ராமகிருஷ்ணனின் 'நெடுங்குருதி'

'கள்ளிகாட்டு இதிகாசம்' பிறகு முழுக்க முழுக்க கிராமத்து மண்வாசனை நிறைந்த நாவலை படித்திருக்கிறேன். பெரிய புத்தகம் என்பதால் படித்து முடிக்க இரண்டு வாரம் தேவைப்பட்டது. 'நெடுங்குருதி' தலைப்பை படித்தவுடன் இரத்தம், வன்முறை, கிரோதம் நிறைந்த நாவல் என்று நினைத்தேன். ஆனால், மனிதர்களின் உணர்வுகள் கொல்லப்படுவதும், உணர்ச்சிகள் இறந்து கண்ணீர் போல் வேம்பலை மண்ணை நனைப்பதும் தான் இந்த நாவலின் கரு.

வேம்பலை கிராமம் எஸ்.ராமகிருஷ்ணனின் கற்பனை கிராமமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். வேம்பர்கள் களவு தொழிலை முக்கியமாக கொண்டு வாழ்க்கிறார்கள். அந்த கிராமத்தில் வாழும் நாகு என்ற சிறுவனின் குடும்பம் எப்படி கிராமத்தில் வாழ்க்கிறார்கள் என்பதை முதல் பாதியில் விவரிக்கிறார். பணக்காரன் என்று யாரும் அந்த கிராமத்தில் இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்கிறார்கள் என்று சொல்வதை விட, வசதி என்றால் என்னவென்று தெரியாமல் வாழ்க்கிறார்கள். இரண்டாவது பாதியில் வாலிபனாக வளர்ந்த நாகு மல்லிகாவை திருமணம் செய்துக் கொண்டு, அதன் பின் இறந்து போகிறான். கதை நாயகன் 'நாகு' பாதியிலே இறந்து விட யாரை மையமாக வைத்து கதை நகரப்போகிறது என்ற குழப்பம் வருகிறது. மல்லிகாவுக்கு பிறந்த வசந்தா, நாகுவால் ‘வேசி' ரதினாவதிக்கு பிறந்த திருமால் இருவரின் பள்ளிபருவத்தை நோக்கி மூன்றாவது பகுதி கதை செல்கிறது. நான்காவது பகுதியில் திருமால் வேலை தேடி ஊரை விட்டு செல்வதும், வாழ்வதற்காக தன் கணவனோடு வசந்தா வேம்பலை கிராமத்துக்கு வருவதும் என்று கதை முடிகிறது. இப்படி ஒரு பத்தியில் கதையை சொல்லிவிடலாம். ஆனால், இதில் இருக்கும் சோகம், ஏமாற்றம், ரனம் இதை படித்தவர்கள் மனதில் இருந்து மறைய நான்கு நாளாவது ஆகும்.

பல இடங்களில் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் நெகிழவைக்கிறது. அதில் குறிப்பாக ஒரு இடத்தில் கள்வன் சிங்கியின் வாலிப பருவத்தை சொல்லும் போது சிறுமி கழுத்தில் இருந்து நகைகளை திருட கூடாது என்ற கொள்கையை விவரிக்கும் போது திகைப்பாக இருக்கிறது. வேம்பலை ஊரில் இன்னொரு பகுதியை இறந்தவர்கள் வாழ்வதற்கான ஊர் என்று ஒரு காதாப்பாத்திரத்தின் வாயிலாக சொல்கிறார். அந்த கதாப்பாத்திரம் "வாழ்ந்து இறந்த பிறகு தான் வீட்டின் மீதும், ஊரின் மீதும் நேசம் அதிகமாகிவிடுகிறது. இறப்பிற்கு பிறகும் மனிதனுக்கு ஏதோ பிடிமானம் தேவைப்படுகிறது. சாவிற்கு பிறகும் கூட ஊரை விலக்கி எளிதாக போய் விட முடியாது" என்று விளக்குகிறார்.

இன்னொரு இடத்தில் களவாளிகள் வாழும் ஊரில் மின்சார விளக்கு போடுவது கூட தெய்வகுத்தம் என்று சொல்லும் வரிகள் மிகவும் அழகு. “வேம்பலையில் பள்ளிகளே இல்லையா” என்று மனதை நெருடிய போது எழுபதாவது அத்தியாயத்தில் பள்ளிகளை பற்றி சொல்கிறார். ஒரு கிராமத்தில் குறைந்தது ஆறுமாதமாவது தங்கி வாழ்ந்தால் தான் இது போன்ற நாவலை குறிப்பெடுத்து எழுத முடியும். முழு நேர எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் அப்படி தான் எழுதியிருப்பார் என்று படிக்கும் போதே உணர முடிகிறது.

'சாகித்ய அகாதமி விருது' க்கு முழு தகுதி வாய்ந்த நாவல் என்று சொல்லலாம்.

விலை.250. பக்கங்கள் : 472
உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்பிரமணியம் தெரு.
அபிராமபுரம், சென்னை - 18.

Friday, January 9, 2009

சென்னை புத்தகக்கண் காட்சியில் இரண்டாவது நாள்

ஐந்து மணிக்கு அலுவலகத்தில் இருந்து புரப்பட வேண்டும் என்று முடிவு செய்து சரியாக 6.15 மணிக்கு அலுவலகத்தில் இருந்து புரப்பட்டேன். ( அப்போது கூட செல்லும் போது ஒரு போன் வந்தது. திங்கள் கிழமை பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியத்தில் வந்து விட்டேன்). வண்டியை எடுக்கும் போது தான் தெரியும், என் வண்டியில் பெட்ரோல் சரியாக வீட்டுக்கு வரும் அளிவில் இருந்தது. சென்னையே பெட்ரோல் தட்டுப்பாடில் இருக்கும் போது எனக்கு மட்டும் எங்கு போய் தேடுவது. நாளை எப்படியும் நிலைமை சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் நண்பர் ஒருவர் தன் வண்டியில் இருந்து 300 ml (இலவசமாக) கொடுத்தார்.

சரியாக 7.05 மணிக்கு புத்தகக்கண் காட்சிக்கு வந்தேன். கவுண்டரில் டிக்கேட் வாங்கி உள்ளே நுழைந்தவுடன் நேராக ஸ்டால்.330 (அன்னை ராஜேஸ்வரி பதிப்பகத்தின் ஸ்டால்) தேடினேன். இணையத்தில் ஸ்டால் வரிசை பார்த்ததால் ஸ்டால் தேடுவதில் அதிகம் நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. என் நண்பர் ஒருவரின் சிபாரிசோடு நான் எழுதிய 'நடைபாதை', 'எனது கீதை' நூலை ஐந்து பிரதியை கொடுத்தேன். ( புத்தகம் வாங்க வருபவர்கள் மத்தியில் நான் புத்தகத்தை விற்க சென்றேன். யாராவது ஸ்டால் எண்.330 சென்று வாங்கினால் சந்தோஷம்).

என் புத்தகத்தை கொடுத்த பிறகு மற்ற புத்தகங்களை ஒவ்வொரு ஸ்டாலாக சென்று பார்த்தேன். தி.க . ஸ்டாலில் இரண்டு புத்தகமும், நக்கீரன் ஸ்டாலில் ஒரு புத்தகமும், கிழக்கு இலக்கியத்தில் மூன்றும், கிழக்கு ஸ்டாலில் இரண்டு புத்தகமும் வாங்கினேன். எஸ்.ராமகிருஷ்ணனின் 'கதாவிலாசம்' வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டு இருந்தேன். அந்த புத்தகத்தை இன்று தான் வாங்க முடிந்தது. ஞானபாநு ஸ்டாலில் 'ஞாநி' அவர்களை பார்த்ததால் அவர் புத்தகம் வாங்கி அவரிடம் ஆட்டோகிராப் வாங்க வேண்டும் என்று தோன்றியது. ஞாநி எழுதிய 'அறிந்தும் அறியாமலும்' புத்தகம் வாங்கி அவர் கையெழுத்து வாங்கினேன்.

" நீங்கள் எழுதிய "நெருப்பு மலர்கள்" நூலை பற்றி என் வலைப்பதிவில் எழுதியிருந்தேன். நீங்கள் கூட ‘நன்றி’ என்று பின்னூட்டம் எழுதி இருந்தீர்கள். ஞாபகம் இருக்கா ஸார்" என்று கேட்டேன். "ஆ... ஞாபகம் இருக்கு. ரொம்ப நல்ல புத்தகம். அம்மா, அக்கா, Girl பிரஸ்ண்ட்ஸ்க்கு பரிசாக கொடுக்கலாம். ரொம்ப பேரு அந்த புக்க மறந்திட்டாங்க. நீங்க ஞாபகம் படுத்திட்டீங்க… ரொம்ப நன்றி" என்றார்.

'அறிந்தும் அறியாமலும்' புத்தகத்தில் ஆட்டோகிராப் போடும் போது, " போதுவா நான் யாருக்கும் ஆட்டோகிராப் போட மாட்டேன். புக் ஃபேர்ல மட்டும் என் புக்க வாங்குறவன்களுக்கு ஆட்டோகிராப் போடுவேன். ஒரு வியாபாரியாக..." என்றார்.

கிழக்கு இலக்கியம் ஸ்டாலில் 25 சதவீதம் கழிவு விலை என்பதால் தேடி தேடி மூன்று புத்தகங்கள் எடுத்தேன். அப்போது, 'கஜினி' இயக்குநர் முருகதாஸ் வந்திருந்தார். சினிமாக்காரர்களிடம் நான் பேச விரும்பவில்லை. புத்தகங்கள் வாங்கிவிட்டு அந்த ஸ்டால் விட்டு வந்துவிட்டேன். அவரை சுற்றி ஒரு இளைஞர் கூட்டம் நின்றது.

என்னுடைய ஆல் டைம் பேவரிட் ஸ்டால் கிழக்கு பதிப்பகத்திற்குள் நுழைந்தேன். பா.ராவின் 'ஆயில் ரேகை’யும், லக்கிலுக்கின் 'விளம்பர உலகம்' நூலையும் வாங்கினேன். பத்ரி அவர்களிடம் ஆயில் ரேகை புத்தகத்தில் கையெழுத்து வாங்கி விட்டு, ஹரன் பிரசன்னாவிடம் என்னை அறிமுகம் செய்துக் கொண்டேன்.

முப்பது ஸ்டால் தான் பார்த்திருப்பேன் அதற்குள் 8.30 மணியாகி விட்டது. நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று வந்துவிட்டேன். இன்று புத்தகக்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்

ஜப்பான் - எஸ். சந்திரமௌலி- Prodigy
கதாவிலாசம் - எஸ்.ராமகிருஷ்ணன் - விகடன்
இத்தாலியின் யுத்தப்பேய் முசோலினி - ஜெகாதா - சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்
ஆயில் ரேகை - பா.ராகவன் - கிழக்கு
சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் - யுவ கிருஷ்ணா - கிழக்கு
கடல் புரத்தில் - வண்ணநிலவன் - கிழக்கு
ஸ்.... - முகில் - கிழக்கு
அமெரிக்காவில் கிச்சா - கிரேஸி மோகன் - கிழக்கு
அறிந்தும் அறியாமலும் - ஞாநி - ஞானபாநு
சேது சமுத்திரத் திட்டமும் ராமன் பாலமும் - கலைஞர் - தி.க
பா.ஜ.க.வும் இந்துத்வாவும் - கி.வீரமணி - தி.க

ஒரு சில புத்தகங்கள் முன்பே வாங்க வேண்டும் என்று திர்மானம் செய்ததால் சீக்கிரம் வாங்கிவிட்டேன். இல்லை என்றால் ஒன்றரை மணி நேரத்திற்குள் இத்தனை புத்தகம் என்னால் வாங்கி இருக்க முடியாது.

இவ்வளவு சொல்லிவிட்டு என் புத்தகம் கிடைக்கும் ஸ்டால் பற்றி சொல்லவே இல்லை பாருங்கள்....

எனது கீதை (கட்டுரை). விலை.40
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் (ஸ்டால். 330)

நடைபாதை (சிறுகதைகள்). விலை.40 -
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் (ஸ்டால். 330)
வனிதா பதிப்பகம் (ஸ்டால்.132)

கலீலியோ கலிலி (வாழ்க்கை வரலாறு) - விலை.25
ரைட் சகோதரர்கள் (வாழ்க்கை வரலாறு) - விலை.25
- Prodigy (ஸ்டால். 222 & 223)

Saturday, January 3, 2009

ஜெயமோகன் எழுதிய 'கண்ணீரைப் பின்தொடர்தல்'

'நான் விரும்பி படித்ததில் பிடித்தது' பதிவு தொடங்கியது முதல் ஒவ்வொரு புத்தகத்தில் இருந்து எனக்கு பிடித்ததை மட்டும் தான் பகிர்ந்துள்ளேன். பிடிக்காததையும் வெளிப்படையாக கூறியிருக்கிறேன். தனிப்பட்டவர்களின் சந்தோஷத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும் எழுதவில்லை. எத்தனையோ நூல்கள் வாசகர் பார்வைக்கு வராமல் இருக்கிறது. என் பார்வைக்கு வந்த நூலை பகிர்ந்து கொள்ளும் போது, இதை பார்த்து அந்த ஆசிரியரின் இரண்டு நூல் விற்றால் அதுவே எனக்கு சந்தோஷம். எதுக்கு இவ்வளவு பில்டப் கொடுத்து ஆரம்பிக்கிறேன் என்று நினைக்கிறீர்களா ???

முதல் முறையாக ‘ஜெயமோகன்’ அவர்களை பற்றி எழுத போகிறேன். ஒரு சில வார்த்தைகள் எனக்கு பிடிக்காதை சொல்லிவிட்டால் ஜெ (ஜெயமோகன்) தரப்பில் இருக்கும் பதிவர்கள் நான் 'சாரு நிவேதா' கட்சியை சேர்ந்தவன் என்று சொல்லுவார்கள். 'சாரு நிவேதா'வை பற்றி எதிராக எழுதினால் ஜெயமோகன் தரப்பு சேர்ந்தவன் என்று சொல்லுவார்கள். ( ஒரு சில சமயத்தில் பதிவர் வட்டம் கூட அரசியல் கட்சி போல் தான் தெரிகிறது). நான் எந்த தரப்பில் சேர்ந்தவன் இல்லை என்பதை கூறுவதற்கு தான் இவ்வளவு பில்டப்பு...!!!

ஒரே நூலில் இந்திய மொழியில் இருக்கும் சிறந்த 22 நாவல்கள் படிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக இந்த புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும். ஆங்கில மொழியில் இருக்கும் இலக்கியத்தை பெருமை பேசும் தமிழ் எழுத்தாளர் மத்தியில் புகழ் பெற்ற பிற மொழி இந்திய நாவலை பற்றி ஆய்வுகளை எழுதியிருப்பதை பாராட்டியாக வேண்டும். அவர் நம்மிடம் பகிர்ந்துள்ள நாவல்களில் ஒரு சில நாவல்கள் பேரிலக்கியங்களுக்கு நிகரானவை என்று குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். இதை அவர் சொல்லும் போது அந்த நூல்களை வாங்கி படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

ஜெயமோகன் எழுது நடையை பற்றி சொல்லும் அளவிற்கு எனக்கு அனுபவம் இல்லை. அவர் அளவிற்கு திறமையும் இல்லை. ஆனால், வாசகனாக ஒரு சில இடங்களை மேற்கொள் காட்ட விரும்புகிறேன்.

இந்த நூலின் இடம் பெற்றுள்ள பெரும்பாலான நாவல்கள் சோகத்தை மையமாக கொண்டுள்ளாது. நல்ல நாவல்கள் என்றால் நம் மனதை நெருடுவதும் அல்லது வாட்டுவது போல் இருந்தால் தான் ஏற்றுக் கொள்கிறார்கள். அது தான் ஏன் என்று புரியவில்லை.

தாராசங்கர் பானர்ஜியின் 'ஆரோக்கிய நிதேதனம்' நாவலை பற்றி சொல்லும் போது சுந்திர ராமசாமி அவர்கள் "நீங்கள் எனக்கு இந்நாவலை சிபாரிசு செய்திருக்கக் கூடாது. என்னால் தாங்க முடியாத படைப்பு இது" என்றார். சுந்தர ராமசாமி அவர்கள் தன் இறுதி நாள் வரை ஐரோப்பிய இலக்கிய மீது மிக விரிவாக கவனம் கொண்டிருந்ததையும், அசோகமித்திரன் போன்றவர்கள் இந்த நாவலை சொல்லாததற்கு வருத்தம் படுவது புரிகிறது. ஜெயமோகன் அவர்களின் இந்த ஆதங்கம் நியாயமானது தான். பல வாசகர்கள் படிக்கும் நூலில் அசோகமித்திரன், சுந்திர ராமசாமி பற்றி குறை வெளிப்படையாக சொல்லாமல் இருந்திருக்கலாம்.

மைத்ரேயி தேவியின் 'கொல்லப்படுவதில்லை' (வங்கம்) என்ற நாவலை சொல்லும் போது அதை வாங்கி படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது. நிஜ காதலர்கள் மிர்சா, மைத்ரேயி தேவி அவர்கள் பிரிந்து பிறகு மிர்சா 'மைத்ரேயி' என்ற நாவலில் மைத்ரேயியை பற்றி தவறாக எழுதியிருந்தார். அவரின் நாவலுக்கு பதில் சொல்லும் விதமாக மைத்ரேயி அவர்கள் 'கொல்லப்படுவதல்லை' என்ற நாவலை எழுதியினார். கிட்டதட்ட இந்த நாவல் சுயசரிதை அந்தஸ்த்தை பெருகிறது. இரண்டு எழுத்தாளர்கள் நடுவில் இருக்கும் மனச்சிதைவை ஜெயமோகன் அவர்கள் சொல்லும் போது இதுவே நாவல் போல் இருந்தது. தத்துவ எழுத்தாளர் தாஸ்குப்தாவின் மகள் தான் மைத்ரேயி என்பது இன்னொரு தகவல்.

எஸ். ராமகிருஷ்ணன் புத்தகங்களை படிக்கும் போது 'தஸ்தயேவ்ஸ்கி' பற்றி குறிப்பிடுவார். அதே போல் 'நீலகண்டப் பறவையைத் தேடி' நாவலை பற்றி சொல்லும் போது ஜெயமோகன் அவர்கள் 'தஸ்த்யேவ்ஸ்கி'யை மேற்கொள் காட்டுகிறார். ('தஸ்த்யேவ்ஸ்கி' எழுதிய நூல்களை படிக்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகிறது.)

ஸ்ரீ லால சுக்லவின் 'தர்பாரி ராகம்' (இந்தி) நாவல் பிரஹசனம் ( கேலி கூத்து - வகை சேர்ந்த நாவல்).ஜெயமோகன் எழுதிய 22 நாவல் ஆயுவு கட்டுரையில் இதில் மட்டும் தான் சோகமே இல்லை. இந்த நாவலை பற்றி ஜெ சொல்லும் போது நான் ரசித்த வரிகள்…
- "கடவுளும் கவர்மெண்டும் ஒன்று. அதைத் தூற்றாதே. பழி சேரும் உனக்கு' என்று தொடங்கும் கி.கஸ்தூரிரங்கனின் புகழ்பெற்ற கவிதை 'கவர்மெண்டைப் பழிக்காதே. மேலும் கவர்மெண்ட் தான் வந்து சேரும்" என்று முடியும்.
- "கோர்ட்டுக்குப் போவது நல்லது. அங்கே போனால் ஒரு திருடன் இன்னொரு திருடனை நடத்துவது போலவே அதிகாரிகளும் பிறரும் நம்மிடம் நடந்துக் கொள்வார்கள்."
- "அறிவுக்கு மதிப்பு உள்ளது போலவே முட்டாள் தனத்திற்கும் ஒரு மதிப்பு உண்டு'

சிவராம காரத்தின் 'மண்ணும் மனிதரும்' என்ற நாவலை சொல்லும் போது அந்த கிராமத்தில் வறுமையால் பிராமணர்களும், பெண்களும் கூட மண்ணில் இறங்கி கடுமையாக உழைத்தேயாக வேண்டும் என்பதை கூறிப்பிட்டுயிருக்கிறார்.
லௌகீகத்தில் ஈடுபட்ட எவருமே மனமே நிறைந்து சாகவில்லை.

தகழி சிவசங்கரப்பிள்ளையின் 'ஏணிப்படிகள்' நாவலில் 'கேசவபிள்ளை கதர் உடுத்து தேச விடுதலைக் கொண்டாட்டங்கள் கொண்டாடுகிறார். அதிகார அமைப்பு என்பது ஒர் இயந்திரம். அது பாரபட்ச மற்றது. நேத்து அவர்களுக்காக உழைத்தோம், இனி உங்களுக்காக. இதை பாலமாக வைக்காவிட்டால் நாடு சிதறிப்போகும் என்கிறார் காங்கிரஸ்காரர்களிடம். அதை காங்கிரஸ் ஆமோதிக்கிறது. எண்பது இறுதியில், சிவகுமார் நடித்த 'இனி ஒரு சுதந்திரம்' என்ற ஒரு படம் வெளிவந்தது வந்தது. அதில், சத்யராஜ் கூட கௌரவ தோற்றத்தில் வருவார். அந்த படத்தில் முதல் காட்சியில் ரிட்ஷா ஓட்டும் ராஜா, குறுக்கு வழியில் முன்னேறி இறுதியில் மாவட்ட ஆட்சியாளராக வருவார். 'கேசவபிள்ளை' பற்றி சொல்லும் போது ‘ராஜா’ பாத்திரம் தான் ஞாபகம் எனக்கு வந்தது.

வி.எஸ். காண்டேகரின் 'யயாதி' சொல்லும் போது மகாபாரத்தை மையமாக வைத்து 300 நாவல்கள் மேல் வந்துவிட்டதை சொல்லுகிறார். ( மஹாபாரத்தை மையமாக கொண்டு எழுதியவரை பிரஹசனம் செய்கிறாரோ...!)

குர்துல் ஜன் ஹைதரின் 'அக்னி நதி' நாவலில் ரொம்ப விரும்பி திரும்ப திரும்ப படித்த வரிகள்…
மனிதர் மறக்க விரும்பும் அனைத்தையும்
நினைக்க வைக்கும் தேவதை அவள்.


பிற மொழி நூல்களை படிக்க விரும்பமுள்ளவர்கள், இந்திய நாவலை பற்றி தெரிந்துக் கொள்ள நினைப்பவர்கள், ஆய்வு செய்ய நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த நூல் படிக்க வேண்டும். பிற மொழி நாவல்களை நமக்கு அறிமுகம் செய்து வைத்த ஜெயமோகன் அவர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும்.

முகவரி

உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்பிரமணியம் தெரு.
அபிராமபுரம், சென்னை – 18

 
Website Hit Counter
வந்தவர்கள்