Tuesday, January 13, 2009

எஸ்.ராமகிருஷ்ணனின் 'நெடுங்குருதி'

'கள்ளிகாட்டு இதிகாசம்' பிறகு முழுக்க முழுக்க கிராமத்து மண்வாசனை நிறைந்த நாவலை படித்திருக்கிறேன். பெரிய புத்தகம் என்பதால் படித்து முடிக்க இரண்டு வாரம் தேவைப்பட்டது. 'நெடுங்குருதி' தலைப்பை படித்தவுடன் இரத்தம், வன்முறை, கிரோதம் நிறைந்த நாவல் என்று நினைத்தேன். ஆனால், மனிதர்களின் உணர்வுகள் கொல்லப்படுவதும், உணர்ச்சிகள் இறந்து கண்ணீர் போல் வேம்பலை மண்ணை நனைப்பதும் தான் இந்த நாவலின் கரு.

வேம்பலை கிராமம் எஸ்.ராமகிருஷ்ணனின் கற்பனை கிராமமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். வேம்பர்கள் களவு தொழிலை முக்கியமாக கொண்டு வாழ்க்கிறார்கள். அந்த கிராமத்தில் வாழும் நாகு என்ற சிறுவனின் குடும்பம் எப்படி கிராமத்தில் வாழ்க்கிறார்கள் என்பதை முதல் பாதியில் விவரிக்கிறார். பணக்காரன் என்று யாரும் அந்த கிராமத்தில் இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்கிறார்கள் என்று சொல்வதை விட, வசதி என்றால் என்னவென்று தெரியாமல் வாழ்க்கிறார்கள். இரண்டாவது பாதியில் வாலிபனாக வளர்ந்த நாகு மல்லிகாவை திருமணம் செய்துக் கொண்டு, அதன் பின் இறந்து போகிறான். கதை நாயகன் 'நாகு' பாதியிலே இறந்து விட யாரை மையமாக வைத்து கதை நகரப்போகிறது என்ற குழப்பம் வருகிறது. மல்லிகாவுக்கு பிறந்த வசந்தா, நாகுவால் ‘வேசி' ரதினாவதிக்கு பிறந்த திருமால் இருவரின் பள்ளிபருவத்தை நோக்கி மூன்றாவது பகுதி கதை செல்கிறது. நான்காவது பகுதியில் திருமால் வேலை தேடி ஊரை விட்டு செல்வதும், வாழ்வதற்காக தன் கணவனோடு வசந்தா வேம்பலை கிராமத்துக்கு வருவதும் என்று கதை முடிகிறது. இப்படி ஒரு பத்தியில் கதையை சொல்லிவிடலாம். ஆனால், இதில் இருக்கும் சோகம், ஏமாற்றம், ரனம் இதை படித்தவர்கள் மனதில் இருந்து மறைய நான்கு நாளாவது ஆகும்.

பல இடங்களில் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்கள் நெகிழவைக்கிறது. அதில் குறிப்பாக ஒரு இடத்தில் கள்வன் சிங்கியின் வாலிப பருவத்தை சொல்லும் போது சிறுமி கழுத்தில் இருந்து நகைகளை திருட கூடாது என்ற கொள்கையை விவரிக்கும் போது திகைப்பாக இருக்கிறது. வேம்பலை ஊரில் இன்னொரு பகுதியை இறந்தவர்கள் வாழ்வதற்கான ஊர் என்று ஒரு காதாப்பாத்திரத்தின் வாயிலாக சொல்கிறார். அந்த கதாப்பாத்திரம் "வாழ்ந்து இறந்த பிறகு தான் வீட்டின் மீதும், ஊரின் மீதும் நேசம் அதிகமாகிவிடுகிறது. இறப்பிற்கு பிறகும் மனிதனுக்கு ஏதோ பிடிமானம் தேவைப்படுகிறது. சாவிற்கு பிறகும் கூட ஊரை விலக்கி எளிதாக போய் விட முடியாது" என்று விளக்குகிறார்.

இன்னொரு இடத்தில் களவாளிகள் வாழும் ஊரில் மின்சார விளக்கு போடுவது கூட தெய்வகுத்தம் என்று சொல்லும் வரிகள் மிகவும் அழகு. “வேம்பலையில் பள்ளிகளே இல்லையா” என்று மனதை நெருடிய போது எழுபதாவது அத்தியாயத்தில் பள்ளிகளை பற்றி சொல்கிறார். ஒரு கிராமத்தில் குறைந்தது ஆறுமாதமாவது தங்கி வாழ்ந்தால் தான் இது போன்ற நாவலை குறிப்பெடுத்து எழுத முடியும். முழு நேர எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் அப்படி தான் எழுதியிருப்பார் என்று படிக்கும் போதே உணர முடிகிறது.

'சாகித்ய அகாதமி விருது' க்கு முழு தகுதி வாய்ந்த நாவல் என்று சொல்லலாம்.

விலை.250. பக்கங்கள் : 472
உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்பிரமணியம் தெரு.
அபிராமபுரம், சென்னை - 18.

4 comments:

வாசுகி said...

சுஜாதாவுக்கு அப்புறம் நான் மிகவும் விரும்பி படிப்பது எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்களையே.
அவருடைய "கதாவிலாசம்" என் favourite book.

உங்களுடைய எழுத்துலக பயணத்துக்கும் என் வாழ்த்துக்கள்.

Muruganandan M.K. said...

மிக அற்புதமான படைப்பு. வேம்பலை மக்களின் வாழ்வு மிகவும் பரிதாபகரமானது.
உங்கள் ரசனைக்கும் பதிவிற்கும் வாழ்த்து.

குகன் said...

வருகைக்கு நன்றி வாசுகி , டாக்டர்.எம்.கே.முருகானந்தன்

Unknown said...

நானும் நீண்ட நாட்களாக வாங்க நினைக்கும் புத்தகத்தில் இதுவும் ஒன்று.

மேலும் பல தமிழ் புத்தகங்களை பற்றி எழுதுங்கள்.

நட்புடன்,
கிருஷ்ணா பிரபு,
சென்னை

 
Website Hit Counter
வந்தவர்கள்