Friday, January 9, 2009

சென்னை புத்தகக்கண் காட்சியில் இரண்டாவது நாள்

ஐந்து மணிக்கு அலுவலகத்தில் இருந்து புரப்பட வேண்டும் என்று முடிவு செய்து சரியாக 6.15 மணிக்கு அலுவலகத்தில் இருந்து புரப்பட்டேன். ( அப்போது கூட செல்லும் போது ஒரு போன் வந்தது. திங்கள் கிழமை பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியத்தில் வந்து விட்டேன்). வண்டியை எடுக்கும் போது தான் தெரியும், என் வண்டியில் பெட்ரோல் சரியாக வீட்டுக்கு வரும் அளிவில் இருந்தது. சென்னையே பெட்ரோல் தட்டுப்பாடில் இருக்கும் போது எனக்கு மட்டும் எங்கு போய் தேடுவது. நாளை எப்படியும் நிலைமை சரியாகிவிடும் என்ற நம்பிக்கையில் நண்பர் ஒருவர் தன் வண்டியில் இருந்து 300 ml (இலவசமாக) கொடுத்தார்.

சரியாக 7.05 மணிக்கு புத்தகக்கண் காட்சிக்கு வந்தேன். கவுண்டரில் டிக்கேட் வாங்கி உள்ளே நுழைந்தவுடன் நேராக ஸ்டால்.330 (அன்னை ராஜேஸ்வரி பதிப்பகத்தின் ஸ்டால்) தேடினேன். இணையத்தில் ஸ்டால் வரிசை பார்த்ததால் ஸ்டால் தேடுவதில் அதிகம் நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. என் நண்பர் ஒருவரின் சிபாரிசோடு நான் எழுதிய 'நடைபாதை', 'எனது கீதை' நூலை ஐந்து பிரதியை கொடுத்தேன். ( புத்தகம் வாங்க வருபவர்கள் மத்தியில் நான் புத்தகத்தை விற்க சென்றேன். யாராவது ஸ்டால் எண்.330 சென்று வாங்கினால் சந்தோஷம்).

என் புத்தகத்தை கொடுத்த பிறகு மற்ற புத்தகங்களை ஒவ்வொரு ஸ்டாலாக சென்று பார்த்தேன். தி.க . ஸ்டாலில் இரண்டு புத்தகமும், நக்கீரன் ஸ்டாலில் ஒரு புத்தகமும், கிழக்கு இலக்கியத்தில் மூன்றும், கிழக்கு ஸ்டாலில் இரண்டு புத்தகமும் வாங்கினேன். எஸ்.ராமகிருஷ்ணனின் 'கதாவிலாசம்' வாங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக நினைத்துக் கொண்டு இருந்தேன். அந்த புத்தகத்தை இன்று தான் வாங்க முடிந்தது. ஞானபாநு ஸ்டாலில் 'ஞாநி' அவர்களை பார்த்ததால் அவர் புத்தகம் வாங்கி அவரிடம் ஆட்டோகிராப் வாங்க வேண்டும் என்று தோன்றியது. ஞாநி எழுதிய 'அறிந்தும் அறியாமலும்' புத்தகம் வாங்கி அவர் கையெழுத்து வாங்கினேன்.

" நீங்கள் எழுதிய "நெருப்பு மலர்கள்" நூலை பற்றி என் வலைப்பதிவில் எழுதியிருந்தேன். நீங்கள் கூட ‘நன்றி’ என்று பின்னூட்டம் எழுதி இருந்தீர்கள். ஞாபகம் இருக்கா ஸார்" என்று கேட்டேன். "ஆ... ஞாபகம் இருக்கு. ரொம்ப நல்ல புத்தகம். அம்மா, அக்கா, Girl பிரஸ்ண்ட்ஸ்க்கு பரிசாக கொடுக்கலாம். ரொம்ப பேரு அந்த புக்க மறந்திட்டாங்க. நீங்க ஞாபகம் படுத்திட்டீங்க… ரொம்ப நன்றி" என்றார்.

'அறிந்தும் அறியாமலும்' புத்தகத்தில் ஆட்டோகிராப் போடும் போது, " போதுவா நான் யாருக்கும் ஆட்டோகிராப் போட மாட்டேன். புக் ஃபேர்ல மட்டும் என் புக்க வாங்குறவன்களுக்கு ஆட்டோகிராப் போடுவேன். ஒரு வியாபாரியாக..." என்றார்.

கிழக்கு இலக்கியம் ஸ்டாலில் 25 சதவீதம் கழிவு விலை என்பதால் தேடி தேடி மூன்று புத்தகங்கள் எடுத்தேன். அப்போது, 'கஜினி' இயக்குநர் முருகதாஸ் வந்திருந்தார். சினிமாக்காரர்களிடம் நான் பேச விரும்பவில்லை. புத்தகங்கள் வாங்கிவிட்டு அந்த ஸ்டால் விட்டு வந்துவிட்டேன். அவரை சுற்றி ஒரு இளைஞர் கூட்டம் நின்றது.

என்னுடைய ஆல் டைம் பேவரிட் ஸ்டால் கிழக்கு பதிப்பகத்திற்குள் நுழைந்தேன். பா.ராவின் 'ஆயில் ரேகை’யும், லக்கிலுக்கின் 'விளம்பர உலகம்' நூலையும் வாங்கினேன். பத்ரி அவர்களிடம் ஆயில் ரேகை புத்தகத்தில் கையெழுத்து வாங்கி விட்டு, ஹரன் பிரசன்னாவிடம் என்னை அறிமுகம் செய்துக் கொண்டேன்.

முப்பது ஸ்டால் தான் பார்த்திருப்பேன் அதற்குள் 8.30 மணியாகி விட்டது. நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று வந்துவிட்டேன். இன்று புத்தகக்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள்

ஜப்பான் - எஸ். சந்திரமௌலி- Prodigy
கதாவிலாசம் - எஸ்.ராமகிருஷ்ணன் - விகடன்
இத்தாலியின் யுத்தப்பேய் முசோலினி - ஜெகாதா - சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்
ஆயில் ரேகை - பா.ராகவன் - கிழக்கு
சுண்டி இழுக்கும் விளம்பர உலகம் - யுவ கிருஷ்ணா - கிழக்கு
கடல் புரத்தில் - வண்ணநிலவன் - கிழக்கு
ஸ்.... - முகில் - கிழக்கு
அமெரிக்காவில் கிச்சா - கிரேஸி மோகன் - கிழக்கு
அறிந்தும் அறியாமலும் - ஞாநி - ஞானபாநு
சேது சமுத்திரத் திட்டமும் ராமன் பாலமும் - கலைஞர் - தி.க
பா.ஜ.க.வும் இந்துத்வாவும் - கி.வீரமணி - தி.க

ஒரு சில புத்தகங்கள் முன்பே வாங்க வேண்டும் என்று திர்மானம் செய்ததால் சீக்கிரம் வாங்கிவிட்டேன். இல்லை என்றால் ஒன்றரை மணி நேரத்திற்குள் இத்தனை புத்தகம் என்னால் வாங்கி இருக்க முடியாது.

இவ்வளவு சொல்லிவிட்டு என் புத்தகம் கிடைக்கும் ஸ்டால் பற்றி சொல்லவே இல்லை பாருங்கள்....

எனது கீதை (கட்டுரை). விலை.40
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் (ஸ்டால். 330)

நடைபாதை (சிறுகதைகள்). விலை.40 -
அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம் (ஸ்டால். 330)
வனிதா பதிப்பகம் (ஸ்டால்.132)

கலீலியோ கலிலி (வாழ்க்கை வரலாறு) - விலை.25
ரைட் சகோதரர்கள் (வாழ்க்கை வரலாறு) - விலை.25
- Prodigy (ஸ்டால். 222 & 223)

No comments:

 
Website Hit Counter
வந்தவர்கள்