Friday, November 28, 2008

HIV : கொல்லப் பிறந்த கொடுங்கோலன்

நாகூர் ரூமி.

எய்ட்ஸ்க்கு இதுவரை மருந்து கண்டு பிடிக்கவில்லை என்பது உலகம் அறிந்த உண்மை.அதை பற்றிய விழிப்புணர்வு வர நமது அரசாங்கம் சுவரொட்டியிலும், தொலைக்காட்சியிலும், வானோலியிலும் பிரசாரம் செய்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இருந்தும், எதுவுமே நமக்கு பலன் அளிக்கவில்லை. இந்தியாவில் அதிக எய்ட்ஸ் நோயாளிகள் இருக்கும் மாநிலம் தமிழ் நாடு தான் (இந்த புத்தகத்தில் கிடைத்த தகவல்). பாலியல் தொழில் சட்டமாக கொண்ட மும்பை மாநகரம் இருக்கும் மஹாராஷ்டா மாநிலம் கூட இரண்டாவது இடத்தில் தான் இருக்கிறது. காண்டம் இருந்தால் கூட, தவறான உடல் உறவால் எய்ட்ஸ் கண்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை தான் காட்டுகிறது.தினமும் எதாவது ஒரு தொலைக்காட்சியில் சொல்லும் விஷயமாக எய்ட்ஸ் இருக்க, புதிதாக இந்த நூலில் என்ன இருக்க போகிறது என்று நினைத்தேன். ஆனால், படித்து முடித்த பிறகு எய்ட்ஸ் பற்றி நமக்கு தெரியாத பல விஷயங்கள் இருப்பதை தெரிந்துக் கொண்டேன். இந்த நூல் ஒவ்வொரு இந்திய குடிமகனும், போதை ஊசி மகன்களும் படிக்க வேண்டும்.

இந்த நூலை நான் சீக்கிரமாக படித்து முடித்ததற்கு மழைக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். மழையால் எனக்கு கிடைத்த விடுமுறையை இந்த புத்தகத்தை படித்து முடித்து விட்டேன். நாவல், சிறுகதை, கட்டுரை, கவிதை போன்ற நூல்களை படித்து பழக்கப்பட்ட எனக்கு உடல் நோய் சம்மந்தமாக நான் படிக்கும் முதல் நூல் இது தான்.

நோய் சம்மந்தமாக அறிகுறிகள், அறிவுறைகள் என்று மட்டும் சொல்லாமல் முதல் மூன்று அத்தியாயத்தில் எய்ட்ஸ் நோய் கண்டுபிடித்த சிறு வரலாற்றையும் நாகூர் ரூமி அவர்கள் எழுதியுள்ளார்.

1981 ஆம் ஆண்டு, சாதாரண ‘நிமோனியா’ நோய் என்று தான் எய்ட்ஸ்யை நினைத்தார்கள் தொடர்ந்து மருந்து சாப்பிடுபவர்களுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தி (இம்யூனிட்டி) குறைந்து போகும் நபர்களுக்கு தான் ‘நிமோனியா’ தாக்கும். ஆனால், உடல் ஆரோக்கியமாக வைத்திருப்பவர்களும் நிமோனியாவல் அவதை பட்டனர். பல மருத்துவர்களுக்கு இந்த நிமோனியா தலைவலியாக இருந்தது. அதன் பிறகு எல்லோருக்கும் ஒரு உண்மை தெரிந்தது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே ஓரினச்சேர்க்கையாளர்கள். ( பதிவர்களுக்கு விளக்க தேவையில்லை என்று நினைக்கிறேன்). அதன் பிறகு ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் என்ற இயற்கை பாலுணர்வுகள் கொண்டவர்களை பாதித்ததை கண்டு பிடித்தனர். இது 'செக்ஸ்' சம்மந்தப்பட்ட நோயாகாத் தான் இருக்க வேண்டும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர்.

நான்கு ஆண்டுகளாக இந்த வியாதிக்கு பெயர் வைக்காமல் இருந்தனர். 1986 ஆம் ஆண்டு, ஒரு நல்ல கரி நாளில், பல பேர் மரணத்திற்கு பிறகு 'இன்டெர்நேஷனல் கமிட்டி ஃபார் நாமன்கிளேச்சர்' ஒரு தீர்மானத்துக்கு வந்தனர். மனிதனை தாக்கும் இந்த வைரஸ்க்கு 'எச்.ஐ.வி' (Human Immunodeficiency Virus - HIV) என பெயர் வைத்தனர். மனித உடலில் இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பலவீனப்படுத்துவதால் 'எய்ட்ஸ்' (AIDS - Acquired Immune Deficiency Syndrome) என்று பெயர் வைத்தனர்.

இப்புத்தகத்தில் 'AIDS’ பற்றி நமக்கு தெரியாத பல தகவல்கள் உள்ளன. உதாரணத்திற்கு, HIV, HIV II என்று இரண்டு வகையான வைரஸ்கள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது. இரண்டு வகைகளுமே ஓர் ஆரோக்கியமான உடலில் 'இம்யூனிட்டி'யைப் பாதிப்பதாகவும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான அடையாளங்களைத் தோற்றுவிப்பதாக இருந்தாலும், இவை இரண்டிற்கும் முக்கியமான சில வேறுபாடுகள் உள்ளன.

எய்ட்ஸ் உருவான காரணங்களை நாம் பெரிதாக நம்புவது மூன்று காரணங்கள். தனியாக வாழ்ந்த சில குழுக்களிடம் ஏற்ப்பட்ட நோய் இது என்றும், குரங்கில் இருந்து மனிதனுக்குப் பரவியது என்றும், அமெரிக்க ராணுவத்தினரின் கிருமிப் போர் நடவடிக்கை காரணம் என்று பல கருத்துக்கள் உள்ளது. ஆனால், இதில் எந்த காரணங்களும் நிருப்பிக்கப்படவில்லை என்பதை தெளிவாக இந்த நூல் உணர்த்துகிறது.

எய்ட்ஸை தடுப்பு ஊசி மூலம் ஏன் தடுக்க முடியவில்லை என்ற விளக்கம் இந்த நூலில் உண்டு. 'HIV' மனிதன் உடலில் ஒரே மாதிரியாக இருப்பது இல்லை. தனது தன்மையையும், உருவத்தையும் மாற்றிக் கொண்டே இருக்கும். நம் உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தி 'HIV' வைரஸை கண்டு பிடித்து அழிக்க முடியாது.அதனால், 'வேக்ஸினேஷன்' (Vaccination) போன்ற தடுப்புசி 'HIV'யை கட்டுப்படுத்த முடியாது.


'ஹெச்.ஐ.வியும் சந்தர்ப்பவாத நோய்களும்' என்ற அத்தியாயத்தை படிக்கும் போது 'கிரி' படத்தில் வரும் வடிவேலு நகைச்சுவை ஒன்று நியாபகம் வந்தது. 'மஹாநதி'சங்கர் அவர்கள் போன் போட்டு வடிவேலுவை அடிக்க தன் நண்பர்களை வர சொல்லுவார். ஆட்டோவில் ஏற்றி ஒவ்வொரு சந்தில் அடி வாங்கியதை வடிவேலு விளக்குவார். எய்ட்ஸ் நோயும் அப்படி தான். ஒருவனை எய்ட்ஸ் தாக்கி விட்டால் சாதாரண காய்ச்சல் கூட அவன் உடலில் ரூம் போட்டு தங்கிவிடும். டி.பி, கேன்ஸர் என்று ஒவ்வொரு நோய் வந்து தாக்கிக் கொண்டு இருக்கும். கல்லாய் இருந்த உடம்பு துரும்பாய் இலைத்து இறப்பது தான் இந்த நோயின் உச்சக்கட்டம். இதை பற்றி படிக்கும் போதே கொடுமையாக இருக்கிறது. இந்த நோயை அனுபவிப்பவர்களுக்கு எப்படி இருக்கும் என்று நினைத்து பார்க்கவே முடியவில்லை.

'ஆப்பிராக்காவில் எய்ட்ஸ்' என்ற அத்தியாயத்தில் ஆப்பிராக்காவில் மட்டும் ஏன் இவ்வளவு எய்ட்ஸ் நோயாளிகள் இருக்கிறார்கள் என்பதை கூறப்படுகிறது. கிட்ட தட்ட எண்பது லட்சம் மக்கள் வரை ஆப்பிராக்கா கண்டத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிலும் குழந்தைகள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டிருப்பதை சொல்லும் போது அப்பாவிகளை கூட இந்த எய்ட்ஸ் விட்டு வைக்கவில்லை என்பதை புரியவைக்கிறது.


குறை இல்லாத மனிதனே இல்லாத போது ஒரு நூல் மட்டும் எப்படி குறையில்லாமல் இருக்கும். எய்ட்ஸ் நோய் உடலில் வந்ததற்கு அடையாளமாக எடை இழப்பு, தொடர்ந்து வயிற்றுப்போக்கு, இருமல், தொண்டை அரிப்பு என்று நன்றாக தான் விளக்குகிறது. இதே சமயத்தில் மழைக்காலத்தில் அவ்வப்போது தொண்டை வலி வருவதால் படிப்பவர்களுக்கு கண்டிப்பாக பயம் வரும் என்று நினைக்கிறேன். அவ்வளவு தத்துரூபமாக எழுதியிருந்தார். எனக்கு இந்த பயம் வந்ததை ஒப்புக்கொள்கிறேன். ( நான் தவறு செய்யும் ஆள் இல்லைங்க. வருஷத்துக்கு ஒரு தடவ இரத்த தானம் பண்ணுவேன். ஒரு சின்ன பயம் மனசுல இருக்க தானே செய்யுது). இந்திய மூலிகையில் எய்ட்ஸ் நோய்க்கு மருந்து இருப்பதாக ஒரு கருத்து நிலவி வருகிறது. அதை பற்றி இன்னும் விரிவாக விளக்கியிருக்கலாம்.

இந்த புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில் எய்ட்ஸ் நோய் பற்றிய செய்திகளை தமிழ் நாட்டில் உள்ள அலோசனை மற்றும் பரிசோதனை மையங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

'இஸ்லாம்', 'இலியட்' (தமிழில்) போன்ற நூல்களை எழுதிய நாகூர் ரூமி அவர்கள் இந்த நூலை எழுதியுள்ளார். ஒரு மருத்துவர் கூட இந்த அளவிற்கு தெளிவாக விளக்க முடியாது என்று நினைக்கிறேன். அவ்வளவு எளிமையாக பாமரணுக்கு புரியும் வகையில் நூல் படிக்கும் வாசகர்களுக்கு புரிய வைத்திருக்கிறார். (கல்லூரி பேராசிரியர் என்பதால் எளிமையாக புரியவைத்தார் என்று நினைக்கிறேன்.) இந்த நூலை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட்வர்களுக்கு சமர்ப்பித்திருப்பதை அவருடைய நல்ல எண்ணத்தை காட்டுகிறது.

தீவிரவாதிகளின் இயக்கம், வாழ்க்கை வரலாறு போன்ற நூல்களை வெளியிட்டுள்ள நீயூ ஹாரிசன் மீடியா தன்னுடைய இன்னொரு பிரிவான 'நலம்' வெளியீடு மூலம் இந்த நூலை வெளியிட்டுள்ளார்கள். இவ்வளவு நல்ல எழுத்தாளர்கள் வைத்துக் கொண்டு ஏன் பத்திரிக்கை துறையில் கால் பதிக்கவில்லை என்று தெரியவில்லை. அப்படி அவர்கள் பத்திரிக்கை துறையில் வந்தால் பதிவர்களின் ஆதரவு அவர்களுக்கு கண்டிப்பாக இருக்கும்.

'நலம் வெளியீடு' க்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து முன் அட்டையை இரண்டாவது பதிப்பில் மாற்றி விடுங்கள். 'எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை' பார்க்கும் போது மெல்லிய மனம் படைத்தவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. மரண தேதியோடு பிறக்கும் குழந்தைகளை பார்க்கும் சக்தி மருத்துவர்களுக்கு மட்டுமே உள்ளது. மற்றப்படி உங்கள் புத்தக சேவை எங்கள் போல் வாசகர்களுக்கு என்றும் தேவை.

இதற்கு மேல் இந்த நூலை பற்றியும், ஆசிரியர் பற்றியும் அதிகம் விமர்சிக்க விரும்பவில்லை. அதிகம் விமர்சித்தால் வாங்கி படிக்கிற எண்ணம் போய்விடும். என்னால் முடிந்த வரை ட்ரெய்லர் ஓட்டிவிட்டேன். முழு படத்தை மன்னிக்கவும் புத்தகத்தை வாங்கி தெரிந்துக் கொள்ளுங்கள்.

மேலும் அந்த புத்தகத்தை பற்றிய விபரங்களுக்கு...

http://nhm.in/printedbook/209/HIV%20-%20Kollap%20Pirandha%20Kodungolan

விலை.50.
பக்கங்கள் : 88
நீயூ ஹாரிசன் மீடியா,
எண். 33/15, இரண்டாவது மேல் தளம்,
எல்டாம்ஸ் ரோடு,
ஆழ்வார்பேட்டை, சென்னை - 18

1 comment:

Anonymous said...

Buy Tamil Books Online @ MyAngadi.com
http://www.myangadi.com/index.php?route=product/publisher/info&publisher_id=109

 
Website Hit Counter
வந்தவர்கள்