Tuesday, February 26, 2008

அன்புள்ள அப்பாவுக்கு...

'சோலை' தமிழினியன்
விலை.30. சோலை பதிப்பகம்.

தி.மு.க கட்சி எழுத்தாளராக இருந்தாலும் 'அம்மா'வை பற்றி எழுதாமல் யாரும் இருக்கமாட்டார்கள். நம்மை இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த அன்னையை பற்றி ஒவ்வொரு எழுத்தாளரும் எழுதியிருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலும் தந்தைக்கு முக்கியதுவம் கொடுத்து எழுதுவதில்லை. 'அன்புள்ள அப்பாவுக்கு...' நூலில் 68 கவிஞர்கள் தங்கள் அப்பாவை பற்றி எழுதிய கவிதையை 'சோலை' தமிழினியன் தொகுத்துள்ளார். அது என்ன 68 கவிஞர்களின் கவிதை....? 'சோலை' தமிழினியனின் தந்தை 68 ஆவது வயதில் காசு நோயில் இறந்தார். தன் தந்தைக்கு இந்த 'அன்புள்ள அப்பாவுக்கு...' கவிதை தொகுப்பு நூலை காணிக்கையாக்கிருக்கிறார்.

'அன்புள்ள அப்பாவுக்கு...' நூலில் இடம் பெற்ற 68 கவிதைகளில் நான் எழுதிய கவிதையும் ஒன்று. இந்த நூலில் நான் எழுதிய கவிதை..

அதிகாரம் செய்வதில் ஹிட்லர்
அன்பு காட்டுவதில் புத்தர்
இரு கலவை செய்த உத்தமர்
என் அப்பா என்பவர் !

விரும்பும் பொருளை
வாங்கி தரும் நிதி அமைச்சர் !
வருடம் முழுக்க பாடம்
சொல்லிக் கொடுக்கும் கல்வி அமைச்சர் !
பள்ளியில் விட்டு
செல்வதில் போக்கு வரத்து அமைச்சர் !
வீட்டு நிர்வாகத்தை அம்மாவிடம் கொடுக்கும்
எங்கள் வீட்டு முதல் அமைச்சர்
என் அப்பா என்பவர் !

நடைபயில கை கொடுத்தவர்
நாகரிகமாக பேச கற்று தந்தவர்
நன்மைகள் செய்ய சொல்லி தந்தவர்
நல்லவன் என்ற பெயர் எடுத்த
என் அப்பா என்பவர் !

லட்ச கணக்கில் லஞ்சம் வாங்கும் இடத்தில்
லட்சியத்தை லஞ்சமாக கொண்டவர்
நேர்மையில்லாதவர் மத்தியில்
பிழைக்க தெரியாதவர் பெயரெடுத்த
அரசாங்க ஊழியர்
என் அப்பா என்பவர் !

தலைமுறை இடைவேளையில் நட்பாய் !
கட்டளையை மீறும் போது கண்டிப்பாய் !
அறிவுரை வழங்கும் போது அன்பாய் !
ஆண் உருவில் இருக்கும் தாயாய்
இருக்கும் என் அன்புள்ள அப்பாவுக்கு....

இந்த அவசர உலகத்தில்
வார்த்தைகளுக்கு இடம் குறைந்த போதிலும்
இடமாறாத அப்பா அன்பு
என்றும் இருக்கும்!!


கவிதைகளுக்கு லைப்ரரி ஆர்டர் கிடைக்காமல் இருக்கும் சமயத்தில் கவிதை நூலை வெளியீடுவதை ஒவ்வொரு பதிப்பகமும் தவிர்த்து வருகிறது. ஆனால், தமிழியன் துணிச்சலாக கவிதை நூலை வெளியீட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் 'அன்புள்ள அப்பாவுக்கு...' இரண்டாம் பாகம் நூல் வெளியீட போவதாக 'சோலை' தமிழினியன் கூறியுள்ளார். அவர் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

No comments:

 
Website Hit Counter
வந்தவர்கள்